கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம்
பாகம் 1/காண்டம் 1/படலங்கள் 1-10
rAmAyaNam
of kampar /part 1 (canto1, paTalams 1-10)
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for
providing us with a romanized transliterated version of this work and for permissions
to publish the equivalent Tamil script version in Unicode encoding
We also thank Mr. S. Govindarajan for proof-reading the Tamil script version
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2012.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - பாகம் 1
காண்டம் 1 (பாலகாண்டம்) /படலங்கள் 1-10
1. பாலகாண்டம் : 1.0 தன் சிறப்பு பாயிரம் (1-11)
1 - உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்கள் ஏ. - 1.0.1
2 - சித் குணத்தர் தெரிவு அரும் நல் நிலை,
என் கு உணர்த்த அரிது, எண்ணிய மூன்றனுள்
முன் குணத்தவரே முதலோர்; அவர்
நல் குணம் கடல் ஆடுதல் நன்று! அரோ. - 1.0.2
3 - ஆதி அந்தம் அரி என யாவையும்,
ஓதினார், அலகு இல்லன உள்ளன
வேதம் என்பன மெய் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்று அலர்; பற்று இலார். - 1.0.3
அவையடக்கம் (4-9)
4 - ஓசை பெற்று உயர் பால் கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கு என
ஆசை பற்றி அறையல் உற்றேன்; மற்று இக்
காசு இல் கொற்றம் அத்து இராமன் கதை அரோ. - 1.0.4
5 - நொய்தின் நொய்ய சொல் நூற்கல் உற்றேன்: எனை?
வைத வைவின் மரா மரம் ஏழ் தொளை
எய்த எய்தவன் கு எய்திய மா கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயம் அத்து ஏ. - 1.0.5
6 - வையம் என்னை இகழவும், மாசு எனக்கு
எய்தவும், இது இயம்புவது யாது? எனில்,
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மா கதை மாட்சி தெரிக்க ஏ. - 1.0.6
7 - துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும் என் பா. அரோ. - 1.0.7
8 - முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிகட்கு ஒன்று உணர்த்துவன்;
பித்தர் சொன்ன உம் பேதையர் சொன்ன உம்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுப ஓ? - 1.0.8
9 - அறையும் ஆடு அரங்கு உம் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடில், தச்சர் உம் காய்வர் ஓ?
இறை உம் ஞானம் இலாத என் புன் கவி
முறையின் நூல் உணர்ந்தார் உம் முனிவர் ஓ! - 1.0.9
நூல் வரலாறு
10 - தேவ பாடையின் இக் கதை செய்தவர்
மூவர், ஆன் அவர் தம் உளும் முந்திய
நாவினார் உரையின் படி நான் தமிழ்ப்
பா இன் ஆல் இது உணர்த்திய பண்பு. அரோ. - 1.0.10
11 - நடையில் நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராம அவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மா கதை,
சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்தது ஏ. - 1.0.11
1.1 . ஆற்றுப் படலம் (12 - 31)
12 - நுவல்பொருள் உரைத்தல்
ஆசு அலம் புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம். - 1.1.1
13 - மேகம் கடலிற்படிந்து நீருண்டு மீண்டமை
நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்,
ஆறு அணிந்து சென்று, ஆர்கலி மேய்ந்து, அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டது ஏ. - 1.1.2
14 - மேகம் மேருமலைமேல் கவிந்து பரவிய தோற்றம்
பம்பி மேகம் பரந்தது,'பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணின் ஆன்;
அம்பின் ஆட்டுதும்' என்று, அகன் குன்றின்மேல்
இம்பர் வாரி, எழுந்தது போன்றது ஏ. - 1.1.3
15 - மழைத்தாரையின் தோற்றம்
'புள்ளி மால் வரை பொன்' என நோக்கி, வான்
வெள்ளி வீழ் இடை வீழ்த்து என தாரைகள்
உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் அவ்
வள்ளியோரின் வழங்கின மேகம் ஏ. - 1.1.4
16 - வெள்ளம்பெருகிய நிலை
மானம் நேர்ந்து, அறம் நோக்கி, மனு நெறி
போன தண் குடை வேந்தன் புகழ் என,
ஞானம் முன்னிய நால் மறையாளர் கைத்
தானம் என்னத் தழைத்தது நீத்தமே. - 1.1.5
17 - வெள்ளம் விலைமாதரை யொத்தமை
தலையும் ஆகமும் தாளும் தழீஇ, அதன்
நிலை நிலாது, இறை நின்றது போலவே
மலையின் உள்ள எலாம் கொண்டு, மண்டல் ஆல்
விலையின் மாதரை ஒத்தது, வெள்ளம் ஏ. - 1.1.6
18 - வெள்ளம் வணிகரை ஒத்தமை
மணியும் பொன்னும் மயில் தழைப் பீலியும்
அணியும் ஆனை வெண் கோடும் அகிலும் தன்
இணை இல் ஆரமும் இன்ன கொண்டு ஏகலான்
வணிக மாக்களை ஒத்தது வாரியே. - 1.1.7
19 - வெள்ளம் வானவில்லை ஒத்தமை
பூ நிரைத்தும், மென் தாது பொருந்தியும்,
தேன் அளாவியும், செம் பொன் விராவியும்,
ஆனை மா மத ஆறு ஓடு அளாவியும்,
வான வில்லை நிகர்த்தது வாரியே. - 1.1.8
20 - மழைவெள்ளம் கடலணைகண்ட கவிவெள்ளம் ஒத்தமை
மலை எடுத்து, மரங்கள் பறித்து, மாடு
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்,
அலை கடல் தலை, அன்று அணை வேண்டிய
நிலை உடைக் கவி நீத்தம் அ நீத்தம் ஏ. - 1.1.9
21 - வெள்ளம் கட்குடியரை ஒத்தமை
ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பு இகந்து
ஊக்கமே மிகுந்து, உள் தெளிவு இன்றி ஏ,
தேக்கு எறிந்து வருதலில் தீம் புனல்
வாக்கு தேன் நுகர் மாக்களை மானும் ஏ. - 1.1.10
22 - வெள்ளம் போர்ப்படை போன்றமை
பணை முகக் களி யானை பல் மாக்கள் ஓடு
அணி வகுத்து என ஈர்த்து, இரைத்து, ஆர்த்தலின்,
மணி உடைக் கொடி தோன்ற வந்து ஊன்றல் ஆல்,
புணரி மேல் பொரப் போவது போன்றது ஏ. - 1.1.11
சரயு வருணனை (23-31)
23 - சரயுவின் பெருமை
இரவி தன் குலத்து எண் இல் பல் வேந்தர் தம்
பரவும் நல் ஒழுக்கின் படி பூண்டது,
சரயு என்பது தாய் முலை அன்னது, இவ்
உரவு நீர் நிலம் அத்து ஓங்கும் உயிர்க்கு எலாம். - 1.1.12
24 - சரயுநீர்ப் பெருக்கில் நறுமணம் விரவுதல்
கொடிச்சியர் இடித்த சுண்ணம்,
குங்குமம், கொட்டம், ஏலம்,
நடுக்கு உறு சந்தம், சிந்தூரம் அத்து
ஓடு, நரந்தம், நாகம்,
கடுக்கை, ஆர், வேங்கை, கோங்கு,
பச்சிலை, கண்டில்வெண்ணெய்,
அடுக்கலின் அடுத்த தீம் தேன்,
அகில் ஓடு நாறும் அன்று ஏ. - 1.1.13
25 - வைய மன்னர்தம் வான்படைபோல வெய்ய பாலையிற் சரயுநீர் விரைதல்
எயினர் வாழ் சீறூர் அப்பு
மாரியின் இரியல் போக்கி,
வயின் வயின், எயிற்றிமார்கள்,
வயிறு அலைத்து ஓட ஓடி,
அயில் முகக் கணையும் வில்லும்
வாரிக்கொண்டு, அலைக்கும் நீரால்,
செயிர் தரும் கொற்ற மன்னர்
சேனையை மானும் அன்று ஏ. - 1.1.14
26 - சரயுவெள்ளம் முல்லையிற்புக்குக் கண்ணனை ஒத்தமை
செறி நறும் தயிர் உம், பாலும்,
வெண்ணெயும், சேந்த நெய்யும்,
உறி ஒடு வாரி உண்டு,
குருந்து ஒடு மருதம் உந்தி,
மறி உடை ஆயர் மாதர்
வளை துகில் வாரும் நீரால்,
பொறி வரி அரவின் ஆடும்
புனிதன் உம் போலும் அன்று ஏ. - 1.1.15
27 - மருதம்புக்க சரயு வெள்ளம் பொருகரிபோலப் பொலிந்த தோற்றம்
கதவு இன் ஐ முட்டி, மள்ளர் கை
எடுத்து ஆர்ப்ப எய்தி,
நுதல் அணி ஓடை பொங்க,
நுகர் வரி வண்டு கிண்டத்,
ததை மணி சிந்த உந்தித்
தறி இறத் தடக்கை சாய்த்து,
மத மழை யானை என்ன,
மருதம் சென்று அடைந்தது அன்று ஏ. - 1.1.16
28 - வெள்ளத் தோற்றம்
முல்லையைக் குறிஞ்சி ஆக்கி,
மருதத்தை முல்லை ஆக்கிப்
புல்லிய நெய்தல் தன்னைப்
பொரு அரு மருதம் ஆக்கி,
எல்லை இல் பொருள்கள் எல்லாம்
இடை தடுமாறும் நீரால்
செல் உறு கதியில் செல்லும்
வினை எனச் சென்றது அன்று ஏ. - 1.1.17
29 - சரயுவினின்று பல கால்கள் பிரிதல்
காத்த கால் மள்ளர் வெள்ளக்
கலி பறை கறங்கக் கைபோய்ச்
சேத்த நீர்த் திவலை பொன்னும்
முத்தொடு திரையின் வீசி,
நீத்தம் ஆன்று, அலைய ஆகி
நிமிர்ந்து, பார் கிழிய நீண்டு,
கோத்த கால் ஒன்றின் ஒன்று
குலம் எனப் பிரிந்தது அன்று ஏ! - 1.1.18
30 - சரயு பரம்பொருளை ஒத்தமை
கல் இடைப் பிறந்து போந்து
கடல் இடைக் கலந்த நீத்தம்
எல்லை இல் மறைகள் ஆல் உம்
இயம்பு அரும் பொருள் இது என்னத்
தொல்லையின் ஒன்றே ஆகித்
துறை தொறும் பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும்
பொருளும் போல், பரந்தது அன்று ஏ. - 1.1.19
31 - சரயு உயிரை ஒத்து விளங்குதல்
தாது உகு சோலை தோறும்,
சண்பகக் காடு தோறும்,
போது அவிழ் பொய்கை தோறும்,
புது மணல் தடங்கள் தோறும்,
மாதவி வேலிப் பூக வனம் தொறும்,
வயல்கள் தோறும்,
ஓதிய உடம்பு தோறும்,உயிர் என
உலாயது, அன்று ஏ. - 1.1.20
1.2 . நாட்டுப் படலம் (32 - 92)
32 - கோசலநாட்டின் பெருமை
வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்,
தீம் கவி செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்;
ஆங்கு அவன், புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி,
மூங்கையான் பேசல் உற்றான் என்ன யான் மொழியல் உற்றேன். - 1.2.1
33 - மருதவளம்
வரம்பு எலாம் முத்தம்; தத்தும்
மடை எலாம் பணிலம்; மா நீர்
குரம்பு எலாம் செம்பொன்;
மேதிக் குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
பரம்பு எலாம் பவளம்; சாலிப்
பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
கரம்பு எலாம் செந்தேன்; சந்தக்
கா எலாம் களி வண்டு ஈட்டம். - 1.2.2
34 - மருதநிலத்தில், பல ஒலிகளும் தம்முட் கலத்தல்
ஆறு பாய் அரவம்; மள்ளர் ஆலை பாய் அமலை; ஆலைச்
சாறு பாய் ஒதை; வேலைச் சங்கின் வாய் பொங்கும் ஓசை;
ஏறு பாய் தமரம்; நீரில் எருமை பாய் துழனி; இன்ன
மாறு மாறு ஆகி தம்மின் மயங்கும் மா மருத வேலி. - 1.2.3
35 - மருதமாகிற மன்னனின் திருவோலக்கம்
தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளை கண் விழித்து நோக்கத்
தெள் திரை எழினி காட்டத் தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாது ஓ! - 1.2.4
36 - வண்டு முதலியன தங்கும் இடங்கள்
தாமரைப் படுவ வண்டும் தகைவு அரும் திருவும்; தண் தார்
காமுகர்ப் படுவ மாதர் கண்களும் காமன் அம்பும்;
மா முகில் படுவ வாரிப் பவளமும் வயங்கு முத்தும்;
நாமுதல் படுவ மெய்யும் நாம நூல் பொருளும்; மன் ஓ. - 1.2.5
37 - சங்குமுதலியன தங்கும் இடங்கள்
நீர் இடை உறங்கும் சங்கம்; நிழல் இடை உறங்கும் மேதி;
தார் இடை உறங்கும் வண்டு; தாமரை உறங்கும் செய்யாள்;
தூர் இடை உறங்கும் ஆமை; துறை இடை உறங்கும் இப்பி;
போர் இடை உறங்கும் அன்னம்; பொழி இடை உறங்கும் தோகை. - 1.2.6
38 - மருதத்தில் கண்மலர்ந்தொளிரும் பொருள்கள்
படை உழ எழுந்த பொன்னும், பணிலங்கள் உயிர்த்த முத்தும்,
இடறிய பரம்பில் காந்தும் இனம் மணி தொகையும், நெல்லும்
மிடை பசும் கதிரும், மீனும், மென் தழை கரும்பும், வண்டும்,
கடைசியர் முகமும், போதும், கண் மலர்ந்து ஒளிரும் மாது ஓ. - 1.2.7
39 - பாணர்பாடல் மகளிரைத் துயிலெழுப்புதல்
தெள் விளி சிறியாழ்ப் பாணர் தேம் பிழி நறவ மாந்தி
வள் விசி கருவி பம்ப வயின் வயின் வழங்கு பாடல்
வெள்ளி வெண் மாடத்து உம்பர் வெயில் விரி பசும் பொன் பள்ளி
எள் அரும் கருங் கண் தோகை இன் துயில் எழுப்பும் அன்று ஏ. - 1.2.8
40 - கடல்மீனும் கள்ளுண்டு களித்தல்
ஆலை வாய் கரும்பின் தேனும் அரி தலை பாளைத் தேனும்,
சோலை வாய் கனியின் தேனும் தொடை இழி இறாலின் தேனும்,
மாலை வாய் உகுத்த தேனும், வரம்பு இகந்து ஓடி, வங்க
வேலை வாய் மடுப்ப, உண்டு, மீன் எலாம் களிக்கும் மாதோ. - 1.2.9
41 - மள்ளர் களைபிடுங்காமல் நிற்றல்
பண்கள் வாய் மிழற்றும் இன் சொல் கடைசியர் பரந்து நீண்ட
கண் கை கால் முகம் வாய் ஒக்கும் களை அலால் களை இலாமை,
உண் கள் வார் கடைவாய் மள்ளர், களைகலாது உலாவி நிற்பார்;
பெண்கள் பால் வைத்த நேயம் பிழைப்பர் ஓ சிறியோர் பெற்றஆல். - 1.2.10
42 - மங்கையரின் மிகுதி
புது புனல் குடையும் மாதர் பூ ஒடு நாவி பூத்த
கதுப்பு உறு வெறியே நாறும் கருங் கடல் தரங்கம் என்றால் ,
மதுப் பொதி மழலைச் செவ்வாய் வாள் கடை கண்ணின் மைந்தர்
விதுப்பு உற நோக்கும் மின்னார் மிகுதியை விளம்பல் ஆம் ஓ! - 1.2.11
43 - மைந்தர் கூட்டம்
வெண் தளக் கலவைச் சேறும், குங்கும விரை மென் சாந்தும்
குண்டலக் கோல மைந்தர் குடைந்த நீர் கொள்ளை சாற்றில்,
தண்டலைப் பரப்பும் சாலி வேலியும் தழீஇய வைப்பும்
வண்டல் இட்டு ஓடும் மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாது ஓ! - 1.2.12
44 - பண்ணைகளின் சிறப்பு
சேல் உண்ட ஒண் கணார் இல் திரிகின்ற செங்கால் அன்னம்
மால் உண்ட நளினப் பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளி, கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு துயிலப் பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை. - 1.2.13
45 - சோலையில் திருமணமும் துயிலெடையும்
குயில் இனம் வதுவை செய்யக் கொம்பு இடை குனிக்கு மஞ்ஞை
அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு செய்யப்
பயில் சிறை அரச அன்னம் பன் மலர் பள்ளி நின்றும்
துயில் எழத் தும்பி காலைச் செவ்வழி முரல்வ சோலை. - 1.2.14
46 - கோசலநாட்டுத் தலைமக்களின் பொழுதுபோக்கு
பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவார் உம்
பருந்தொடு நிழல் சென்று அன்ன இயல் இசை பயன் துய்ப்பார் உம்
மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவார் உம்
விருந்தினர் முகம் கண்டு அன்ன விழா அணி விரும்புவார் உம். - 1.2.15
47 - கோழிப்போர்
கறுப்பு உறு மனமும் கண்ணில் சிவப்பு உறு சூட்டும் காட்டி
உறுப்பு உறு படையில் தாக்கி , உறு பகை இன்றிச் சீறி
வெறுப்பு இல களிப்பின் வெம்போர் மதுகைய வீர வாழ்க்கை
மறுப் பட ஆவி பேணா வாரணம் பொருத்துவார் உம். - 1.2.16
48 - எருமைப் போர்
எருமை நாகு ஈன்ற செங்கண் ஏற்றை ஓடு ஏற்றை, சீற்றத்து
உரும் இவை என்னத் தாக்கி ஊழ் உற நெருக்கி ஒன்றாய்
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன அனைய நோக்கி
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சு உற ஆர்க்கின்றார் உம். - 1.2.17
49 - மள்ளர் உழு பகடு உரப்புதல்
முள் அரை முளரி வெள்ளி முளை இற முத்தும் பொன்னும்
தள் உற, மணிகள் சிந்தச் சலஞ்சலம் புலம்பச் சாலில்
துள்ளி மீன் துடிப்ப, ஆமை தலை புடை சுரிப்பத் தூம்பின்-
உள் வரால் ஒளிப்ப, மள்ளர் உழுபகடு உரப்புவாரும். - 1.2.18
50 - விருந்தோம்புதலும் - சுற்றமருந்துதலும்
முந்து முக் கனியின் நானா முதிரையின் முழுத்த நெய்யின்
செம் தயிர் கண்டம் கண்டம் இடையிடை செறிந்த சோற்றின்
தந்தம் இல் இருந்து தாமும் விருந்தொடும் தமரின் ஓடும்
அந்தணர் அமுதர் உண்டி அயில்வுறும் அமலைத்து எங்கும். - 1.2.19
51 - நெய்தல்நிலச் சிறப்பு
முறை அறிந்து, அவாவை நீக்கி,
முனி உழி முனிந்து, வெஃகும்
இறை அறிந்து உயிர்க்கு நல்கும்
இசை கெழு வேந்தன் காக்கப்
பொறை தவிர்ந்து உயிர்க்கும்
தெய்வப் பூதலம் தன்னில், பொன்னின்
நிறை பரம் சொரிந்து, வங்கம்,
நெடுமுதுகு ஆற்றும் நெய்தல். - 1.2.20
52 - நெல்லைக் கடிமனையுய்த்தல்
எறிதரும் அரியின் சும்மை
எடுத்து வான் இட்ட போர்கள்
குறி கொளும் போத்தின் கொல்வார்,
கொன்ற நெல் குவைகள் செய்வார்,
வறியவர்க்கு உதவி மிக்க
விருந்து உண மனையின் உய்ப்பான்
நெறிகள் உம் புதையப் பண்டி
நிரைத்து மண் நெளிய ஊர்வார். - 1.2.21
53 - மள்ளர் கொள்ளும் பல்வகை வளங்கள்
கதிர்படு வயலின் உள்ள, கடி கமழ் பொழிலின் உள்ள,
முதிர்பலம் மரத்தின் உள்ள முதிரைகள் புறவின் உள்ள
பதிபடு கொடியின் உள்ள படிவளர் குழியின் உள்ள
மது வளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார். - 1.2.22
54 - ஆண்வண்டு, மகளிர் கண்களைப் பெண்வண்டென மயங்குதல்
பருவ மங்கையர் பங்கய வான் முகத்து
உருவ உண்கணை ஒண் பெடை ஆம் என,
கருதி அன்பு ஒடு காமுற்று வைகலும்
மருத வேலியின் வைகின வண்டு அரோ. - 1.2.23
55 - உழத்தியர் சிறப்பும் - வாளையின் மதர்ப்பும்
வேளை வென்ற உழத்தியர் வெம் முலை
ஆளை நின்று முனிந்திடும் அங்கு ஒர் பால்
பாளை தந்த மதுப் பருகிப் பரு
வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம். - 1.2.24
56 - எருமைப்பாலால் நெற்பயிர் வளர்தல்
ஈரம் நீர் படிந்து இ நிலத்தே சில
கார்கள் என்ன வரும் கருமேதிகள்
ஊரில் நின்ற கன்று உள்ளிட மென் முலை
தாரை கொள்ளத் தழைப்பன சாலியே. - 1.2.25
57 - கழுநீர்பாய நாற்று வளர்தல்
முட்டில் அட்டில் முழங்கு உற வாக்கிய
நெடும் உலை கழுநீர் நெடு நீத்தம் தான்,
பட்டம் மென் கமுகு ஓங்கு படப்பை போய்,
நட்ட செந்நெலின் நாறு வளர்க்கும் ஏ. - 1.2.26
58 - குருவி, கூட்டில் மாணிக்கத்தைக் கொண்டுபோய் வைத்தல்
சூடு உடை தலைத் தூநிற வாரணம்
தாள் துணைக் குடையும் தகை சால் மணி
மேட்டு இமைப்பன, மின் மினி ஆம் எனக்
கூட்டின் உய்க்கும் குருவிக் குழாம் அரோ. - 1.2.27
59 - இடைச்சியர் தயிர்கடைதல்
தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளல் போய்
மாய, வெள் வளை வாய்விட்டு அரற்றவும்,
தேயும் நுண் இடை சென்று வணங்கவும்,
ஆய மங்கையர் அங்கை வருந்துவார். - 1.2.28
60 - உழத்தியர் பாக்கினின்று முத்தினைக் கொழித்தல்
குற்ற பாகு கொழிப்பன; கோண் நெறி
கற்றிலாத கரும் கண் நுளைச்சியர்
முற்றில் ஆர முகந்து தம் முன்றிலில்
சிற்றில் கோலிச் சிதறிய முத்தமே. - 1.2.29
61 - செம்மறிப்போர்
துருவை மென் பிணை ஈன்ற துளக்கு இலா
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான்
உரும் இடித்து எனத் தாக்குறும் ஒல் ஒலி
வெருவி மால் வரை சூல் மழை மின்னுமே. - 1.2.30
62 - தினைமுதலியவற்றிலிருந்து ஒலிப்பன இவையெனல்
தினைச் சிலம்புவ தீம் சொல் இளம் கிளி;
நனைச் சிலம்புவ நாகு இள வண்டு; பூம்
புனைச் சிலம்புவ புள் இனம்; வள்ளியோர்
மனைச் சிலம்புவ மங்கல வள்ளையே. - 1.2.31
திணை மயக்கம் (63-66)
63 - கன்று உடை பிடி நீக்கிக் களிற்று இனம்,
வன் தொடர்ப் படுக்கும் வனம் வாரி சூழ்,
குன்று உடை குல மள்ளர் குழூஉக் குரல்,
இன் துணை களி அன்னம் இரிக்கும் ஏ. - 1.2.32
64 - வள்ளி கொள்பவர் கொள்வன மா மணி;
துள்ளி கொள்வன தூங்கிய மாங்கனி;
புள்ளி கொள்வன பொன் விரி புன்னையில்
பள்ளி கொள்வன பங்கயத்து அன்னமே. - 1.2.33
65 - கொன்றை வேய் குழல் கோவலர் முன்றிலில்
கன்று உறக்கும் குரவை; கடைசியர்
புன் தலை புனம் காப்பு உடைபோதரச்
சென்று இசைக்கும் நுளைச்சியர் செவ்வழி. - 1.2.34
66 - சேம்பு கால்பொரச் செங்கழுநீர்க் குளத்
தூம்பு காலச் சுரி வளை மேய்வன,
காம்பு கால் பொர கண் அகன் மால்வரைப்
பாம்பு நான்று என பாய் பசும் தேறலே. - 1.2.35
67 - மகளிர் தொழில் ஈதலும் விருந்தோம்புதலுமே எனல்
பெரும் தடம் கண் பிறை நுதலார்க்கு எலாம்,
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,
வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்
விருந்தும் அன்றி, விழைவன யாவையே. - 1.2.36
68 - அன்னசத்திரங்களின் இயல்பு
பிறை முகம் தலைப் பெட்பின் இரும்பு போழ்
குறை கறித் திரள் குப்பை, பருப்பொடு
நிறை வெண் முத்தின் நிறத்து அரிசிக் குவை.
உறைவ, கோட்டம் இல் ஊட்டிடம் தோறெலாம். - 1.2.37
69 - சுரப்பன இவை எனல்
கலம் சுரக்கும் நிதியம்; கணக்கிலா
நிலம் சுரக்கும் நிறை வளம்; நல் மணி
பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும் ஒழுக்கம்; குடிக்கு எலாம். - 1.2.38
நாட்டவர் நல் ஒழுக்கம் (70-71)
70 - கூற்றம் இல்லை, ஒர் குற்றம் இலாமையால்;
சீற்றம் இல்லை, தம் சிந்தையில் செவ்வியால்;
ஆற்றல் நல்லறம் அல்லது இலாமையால்,
ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே. - 1.2.39
71 - நெறிகடந்து பரந்தன நீத்தமே;
குறி அழிந்தன குங்குமத் தோள்களே;
சிறிய மங்கையர் தேயும் மருங்குலே;
வெறியவும் அவர் மென் மலர் கூந்தலே. - 1.2.40
72 - புகைகள் பல திரண்டு முகில்போல முழங்கின எனல்
அகில் இடும் புகை, அட்டில் இடும் புகை,
நகல் இன் ஆலை நறும் புகை, நான்மறை
புகலும் வேள்வியில் பூ புகை ஓடு அளாய்,
முகிலின் விம்மி முழங்கின எங்கணும். - 1.2.41
73 - மகளிர் சாயல்முதலியனபோல மயில்முதலியன இயங்குகின்றன எனல்
இயல்புடை பெயர்வன மயில்; மணி இழையின்
வெயில் புடை பெயர்வன; வெறி அலர் குழலின்
புயல் புடை பெயர்வன பொழில்; அவர் விழியின்
கயல் புடை பெயர்வன கடி கமழ் கழனி. - 1.2.42
74 - அந்நாட்டு அலர்வன இவை எனல.
இடை இற, மகளிர்கள் எறிபுனல் மறுகக்
குடைபவர் துவர் இதழ் அலர்வன குமுதம்;
மடைபெயர் அனம் என மடம் நடை, அளகக்
கடைசியர் முகம் என மலர்வன கமலம். - 1.2.43
75 - நகுவன இவை எனல்
விதியினை நகுவன அயில் விழி; பிடியின்
கதியினை நகுவன அவர்நடை; கமலப்
பொதியினை நகுவன புணர் முலை; கலை வாழ்
மதியினை நகுவன வனிதையர் வதனம். - 1.2.44
76 - 'இகலுவ' இவை எனல்
பகலின் ஒடு இகலுவ படர் மணி; மடவார்
நகிலின் ஒடு இகலுவ நனி வளர் இள நீர்;
துகிலின் ஒடு இகலுவ சுதை புரை நுரை; கார்
முகிலின் ஒடு இகலுவ கடி மண முரசம். - 1.2.45
77 - 'நிகர்வன' இவை எனல்
கார் ஒடு நிகர்வன கடி பொழில்; கழனிப்
போரொடு நிகர்வன பொலன் வரை; பணை சூழ்
நீரொடு நிகர்வன நிறை கடல்; நிதி சால்
ஊரொடு நிகர்வன இமையவர் உலகம். - 1.2.46
78 - நெய்தல் வளம்
நெல் மலை அல்லன நிரைவரு தரளம்,
சொல் மலை அல்லன தொடு கடல் அமிர்தம்,
நல் மலை அல்லன நதி தரு நிதியம்
பொன் மலை அல்லன மணி படு புளினம். - 1.2.47
79 - பந்தாடுமிடமும் - கலைபயிலிடமும்
பந்தினை இளையவர் பயில் இடம், மயில் ஊர்
கந்தனை அனையவர் கலை தெரி கழகம்
சந்தனம் வனம் அல, சண்பகம் வனம் ஆம்;
நந்தன வனம் அல, நறை விரி புறவம். - 1.2.48
80 - மகளிரின் சொல் நடை பல் இவற்றின் உயர்வு
கோகிலம் நவில்வன இளையவர் குதலைப்
பாகு இயல் கிளவிகள்; அவர் பயில் நடம் ஏ
கேகயம் நவில்வன; கிளர் இள வளையின்
நாகுகள் உமிழ்வன நகை புரை தரளம். - 1.2.49
81 - பழையர் உழவர் முதலியோர் மனையில் நிகழ்வன
பழையர்தம் மனையன பழம் நறை நுகரும்
உழவர்தம் மனையன உழுதொழில் புரியும்
மழவர்தம் மனையன மண ஒலி இசையின்
கிழவர்தம் மனையன கிளை பயில் வளை யாழ். - 1.2.50
82 - சொரிவன இவை எனல்
கோதைகள் சொரிவன குளிர் இள நறவம்;
பாதைகள் சொரிவன பரும் மணி கனகம் ;
ஊதைகள் சொரிவன உறையுறும் அமுதம்;
காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள். - 1.2.51
83 - மங்கையரை மயில்கள் பின்தொடர்தல்
இடம் கொள் சாயல் கண்டு இளைஞர் சிந்தை போல்,
தடம் கொள் சோலை வாய் மலர் பெய் தாழ்குழல்,
வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும்,
தொடர்ந்து போவன; தோகை மஞ்ஞைகள். - 1.2.52
84 - வண்மை முதலியன அந்நாட்டில் இல்லாமைக்கு ஏது
வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, நேர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால். - 1.2.53
85 - பண்டங்கள் பெய்த பண்டிகள்
எள்ளும், ஏனலும், இறுங்கும், சாமையும்,
கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும்,
அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும்,
தள்ளும் நீர்மையில் தலை மயங்குமே. - 1.2.54
86 - பண்டங்கள் கலத்தல்
உயரும் சார்வு இலா உயிர்கள் செய் வினைப்
பெயரும் பல் கதி பிறக்கும் ஆறு போல்,
அயிரும், தேனும், இன் பாகும், ஆயர் ஊர்த்
தயிரும், வேரியும், தலை மயங்கும் ஏ. - 1.2.551
87 - விழாவும் - வேள்வியும்
கூறு பாடலும், குழலின் பாடலும்,
வேறு வேறு நின்று இசைக்கும் வீதி வாய்,
ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம் எனச்
சாறும் வேள்வியும் தலைமயங்குமே. - 1.2.56
88 - எல்லா ஒலியும் உழவர் வாயொலியில் அடங்குதல்
மூக்கில் தாக்கு உறும் மூரி நந்தும் நேர்
தாக்கில் தாக்குறும் பறையும், தண்ணுமை
வீக்கித் தாக்குறும் விளியும், மள்ளர் தம்
வாக்கில் தாக்குறும் ஒலியின் மாயும் ஏ. - 1.2.57
89 - மகளிர் மக்களுக்கு மாலையிற் பாலூட்டுதல்
தாலி ஐம்படை தழுவும் மார்பு இடை
மாலை வாய் அமுது ஒழுகும் மக்களைப்
பாலின் ஊட்டுவார் செங்கை, பங்கயம்
வால் நிலா உற குவிவ மானும் ஏ. - 1.2.58
90 - மாதர்மாட்சி
பொற்பில் நின்றன பொலிவு; பொய் இலா
நிற்பின் நின்றன நீதி; மாதரார்
அற்பின் நின்றன அறங்கள்; அன்னவர்
கற்பின் நின்றன காலம் மாரி ஏ. - 1.2.59
91 - அத்தேசம் எல்லை காண்பரியது எனல்
சோலை மா நிலம் துருவி, யாவர் ஏ
வேலை கண்டு தாம் மீள வல்லவர்;
சாலும் வார் புனல் சரயுவும் பல
காலின் ஓடியும் கண்டது இல்லை ஏ. - 1.2.60
91 - கோசலநாடு ஊழிபேரினும் பேராச்சிறப்பினதெனல்
வீடு சேர நீர் வேலை கால் மடுத்து
ஊடு பேரினும் உலைவு இலா நலம்
கூடு கோசலம் என்னும் கோது இலா
நாடு கூறினாம். நகரம் கூறுவாம். - 1.2.61
1.3. நகரப் படலம் (93 - 167)
93 - அயோத்தியின் பெருமை (93-99)
செவ்விய, மதுரம் சேர்ந்த நல் பொருளில்
சீரிய, கூரிய, தீம் சொல்
வவ்விய கவிஞர் அனைவரும், வடநூல்
முனிவரும் புகழ்ந்தது; வரம்பு இல்
எவ்வுலகத்தோர் யாவரும் தவம் செய்து
ஏறுவான் ஆதரிக்கின்ற
அவ் உலகத்தோர் இழிவதற்கு அருத்தி
புரிகின்றது அயோத்தி மா நகரம், - 1.3.1
94 - அயோத்தியை வியத்தல்.
நில மகள் முகமோ! திலகமோ!!
கண்ணோ!!! நிறை நெடு மங்கல நாணோ!!!
இலகுபூண் முலை மேல் ஆரமோ!!!
உயிரின் இருக்கையோ!!! திருமகட்கு இனிய
மலர் கொல் ஓ!!! மாயோன் மார்பின் நல்
மணிகள் வைத்த பொன் பெட்டி யோ!!! வானோர்
உலகின்மேல் உலகு ஓ!!! ஊழியின் இறுதி
உறையுள் ஓ!!! யாது என உரைப்பாம். - 1.3.2
95 - பருதியும் மதியும் உலாவரற் காரணம்
உமைக்கு ஒருபாகத்து ஒருவனும், இருவர்க்கு
ஒருதனிக் கொழுநனும், மலர்மேல்
கமை பெரும் செல்வக் கடவுளும் , உவமை,
கண்டிலா நகர் அது காண்பான்,
அமைப்பரும் காதல் முன் பிடித்து உந்த,
அந்தரம் சந்திர ஆதித்தர்,
இமைப்பு இலர் திரிவர்; இது அலால் அதனுக்கு
இயம்பல் ஆம் ஏது வேறு உளதோ. - 1.3.3
96 - அயோத்தி அமராவதியினும் அளகையினும் விஞ்சியது
அயில் முகம் குலிசத்து அமரர் கோன்
நகரும் அளகையும் என்றிவை அயனார்
பயில் உறவு உற்றபடி பெரும்பான்மை
இப்பெருந் திருநகர் படைப்பான்
மயன் முதல் தெய்வத் தச்சரும் தத்தம்
மனம் தொழில் நாணினர் மறந்தார்;
புயல் தொடு குடுமி நெடு நிலை
மாடத்து இந்நகர் புகலுமாறு எவனோ? - 1.3.4
97 - அயோத்தியே புண்ணியபூமியும் போகபூமியுமெனல்
'புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம், '
என்னும் ஈது அரு மறை பொருளே,
மண் இடை யாவர் இராகவன் அன்றி மா
தவம் அறத்தொடும் வளர்த்தார்?
எண்ணரும் குணத்தின் அவன் இனிது இருந்து இ
ஏழ் உலகு ஆளிடம் என்றால்,
ஒண்ணும் ஓ இதனின் வேறு ஒறு போகம்
உறைவிடம் உண்டு என உரைத்தல்? - 1.3.5
98 - அயோத்தியை ஒக்கும்நகரம் அமரர்நாட்டிலும் இல்லையெனல்
தங்கு பேரருள் உம் தருமமும் துணையாத்
தம்பகைப் புலன் களைந்து அவிக்கும்
பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர்
யாவர்க்கும் புகலிடம் ஆன
செம் கண் மால், பிறந்து ஆண்டு அளப்பரும் காலம்
திருவின் வீற்று இருந்தனன் என்றால் ,
அங்கண்மா ஞாலத்து, அ நகர் ஒக்கும்
பொன் நகர் அமரர் நாட்டு யாதோ? - 1.3.6
99 - இந்நகரில் எல்லாப் பொருளும் உள்ளன எனல்
அரசு எலாம் அவண; அணி எலாம் அவண;
அரும் பெறல் மணி எலாம் அவண;
புரசை மால் களிறும் , புரவியும், தேரும்,
பூதலத்து யாவையும் அவண;
விரசுவரர் முனிவர் விண்ணவர் இயக்கர்
விஞ்சையர் முதலினோர் எவரும்
உரை செய்வார் ஆனார்; ஆனபோது அதனுக்கு
உவமைதான் அரிது அரோ உளதோ. - 1.3.7
100 - மதிலின் உயர்ச்சி
நால் வகை சதுரம் விதிமுறை நாட்டி,
நனிதவ உயர்ந்தன பனிதோய்
மால் வரை குலத்தில் யாவையும் இல்லை;
ஆதலால் உவமை மற்று இல்லை,
நூல் வரை தொடர்ந்து பயத்தொடும் பழகி,
நுணங்கிய நுவலரும் உணர்வே
போல்வகைத்து; அல்லால், உயர்வினோடு உயர்ந்தது
என்னலாம் பொன் மதில் நிலையே. - 1.38
101 - மதிலுக்குப் பெருமையால் ஒப்பன இவை எனல்
மேவரும் உணர்வு முடிவு இலாமையினால்
வேதமும் ஒக்கும், விண் புகலால்
தேவரும் ஒக்கும், முனிவரும் ஒக்கும்
திண் பொறி அடக்கிய செயலால்,
காவலில் கலை ஊர் கன்னியை ஒக்கும்,
சூலத்தால் காளியை ஒக்கும்,
யாவையும் ஒக்கும் பெருமையால்,
எய்தற்கு அருமையால் ஈசனை ஒக்கும். - 1.3.9
102 - மதிலின் உயர்ச்சி
பஞ்சி வான் மதியை ஊட்டிய அனைய
படர் உகிர்ப் பங்கயச் செம் கால்
வஞ்சிபோல் மருங்குல் குரும்பைபோல் கொங்கை
வாங்கு வேய் வைத்த மென் பணை தோள்
அம் சொலார் பயிலும் அயோத்தி மா நகரின்
அழகு உடைத்து அன்று என அறிவான்
இஞ்சி, வான் ஓங்கி இமையவர்
உலகம் காணிய, எழுந்தது ஒத்து உளது ஏ. - 1.3.10
103 - மதில் சூரியகுலத்தரசர்களை ஒத்துள்ளது எனல்
கோலிடை உலகம் அளத்தலின்,
பகைஞர் முடித்தலை கோடலின், மனுவின்
நூல் நெறி நடக்கும் செவ்வையின், யார்க்கும்
நோக்கு அரும் காவலின், வலியின்,
வேலொடு வாள் வில் பயிற்றலின்,வெய்ய
சூழ்ச்சியின், வெலற்கு அரு வலத்தில்,
சால்பு உடை உயர்வில், சக்கரம் நடத்தும்
தன்மையில், தலைவர் ஒத்து உளதே. - 1.3.11
104 - மதிற்பொறிகளும் - அவற்றின் ஆற்றலும்
சினம் அத்து அயில் கொலை வாள் சிலை மழுத் தண்டு
சக்கரம் தோமரம் உலக்கை
கனம் அத்து இடை உருமின் வெருவரும் கவண்கல்
என்று இவை கணிப்பில; கொதுகின்
இனத்தையும் உவணம் அத்து இறையையும் இயங்கும்
காலையும் இதம் அல நினைவார்
மனத்தையும் எறியும் பொறி உள; என்றால்,
மற்று இனி உணர்த்துவது எவன் ஓ? - 1.3.12
105 - நகருக்கு அணியாக மதில் அமைந்தமை
'பூணினும் புகழ் ஏ அமையும்,' என்று , இனைய
பொற்பில் நின்று, உயிர் நனி புரக்கும்,
யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும்
இரவிதன் குலம் முதல் நிருபர்,
சேணையும் கடந்து, திசையையும் கடந்து,
திகிரியும் செந்தனிக் கோலும்
ஆணையும் காக்கும் ஆகிலும், நகருக்கு
அணி என, இயற்றியது அன்று ஏ! - 1.3.13
106 - அகழியைப் பற்றி அறிவிப்போம் எனல்
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை
அலை கடல் சூழ்ந்து அன அகழி,
பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ்போய்,
புன் கவி எனத் தெளிவு இன்றி,
கன்னியர் அல்குல் தடம் என யார்க்கும்
படிவு அரும் காப்பினது ஆகி,
நல் நெறி விலக்கும் பொறி என எறியும்
கராத்தது; நவிலல் உற்றது நாம். - 1.3.14
107 - மேகம், அகழைக் கடலாக மயங்கிற்று எனல்
ஏகுகின்ற தம் கணங்களோடும்
எல்லை காண்கிலா
நாகம் ஒன்று அகன் கிடங்கை,
' நாம வேலையாம் ' எனா
மேகம், மொண்டுகொண்டு, எழுந்து,
'விண் தொடர்ந்த குன்றம்', என்று
ஆகம் நொந்து நின்று,
தாரை அ மதில் கண் வீசும் ஏ. - 1.3.15
108 - அகழில் உள்ள தாமரைக் காட்டின் தோற்றம்
அந்த மா மதில் புறத்து அகத்து எழுந்து அலர்ந்த நீள்
கந்தம் நாறு பங்கயத்த கானமான, மாதரார்
முந்து வாள் முகங்களுக்கு உடைந்து போன, மொய்த்து எலாம்
வந்து, போர் மலைக்க மா மதில் வளைத்த மானுமே. - 1.3.16
109 - அகழியில் முதலைகள் முழுகி எழும்புதல்
சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை, சுற்று முற்று பார் எலாம்
போழ்ந்த மா கிடங்கு இடை கிடந்து பொங்கு இடங்கர் மா,
தாழ்ந்த வங்க வாரியில் தடுப்ப ஒணா மதத்தின் ஆல்
ஆழ்ந்த யானை மீது எழுந்து அழுந்துகின்ற போலும் ஏ. - 1.3.17
110 - முதலைகள் ஒன்றோடொன்று பொருதல்
ஈரும் வாளின் வால் விதிர்த்து, எயிற்று இளம் பிறைக் குலம்
பேர மின்னி, வாய் விரித்து, எரிந்த கண் பிறங்கு தீச்
சோர, ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கர் மா,
போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலும் ஏ. - 1.3.18
111 - அகழி அரசர் சேனையை ஒக்கும் எனல்
ஆளும் அன்னம் வெண் குடைக் குலங்களா, அருங் கராக்
கோள் எலாம் உலாவுகின்ற குன்றம் அன்ன யானை ஆ
தாள் உலாவு வெம் கதத் துரங்கமும் தரங்கம் மா
வாளும் வேலும் மீனம் ஆக மன்னர் சேனை மானும் ஏ. - 1.3.19
112 - அகழியின் கரையமைப்பு
விளிம்பு தெற்றி முற்றுவித்து வெள்ளி கட்டி உள் உறப்
பளிங்கு பொன் தலத்து அகட்டு அடுத்து உற படுத்தலின்
தளிந்த கல் தலத்தொடு அச் சலத்தினைத் தனித்து உறத்
தெளிந்து உணர்த்துகிற்றும் என்றல் தேவரால் உம் ஆவது ஏ. - 1.3.20
113 - அகழியும் காவற்காடும்
அன்ன நீள் அகன் கிடங்கு, சூழ் கிடந்த ஆழியைத்
துன்னி வேறு சூழ் கிடந்த தூங்கு வீங்கு இருள் பிழம்பு
என்னலாம், இறும்பு சூழ் கிடந்த சோலை, எண்ணில் அப்
பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலும் ஏ. - 1.3.21
114 - கோபுர வாயிலின் சிறப்பு
எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற முன்னம் மால்
ஒல்லை உம்பர் நாடு அளந்த தாளின்மீது உயர்ந்த; ஆல்
மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறு உறா வழக்கினால்
நல்ல ஆறு சொல்லும் வேதம் நான்கும் அன்ன; வாயில் ஏ. - 1.3.22
115 - தாவு இல் பொன் தலத்தின் நல் தவத்தினோர்கள் தங்கு தாள்
பூ உயிர்த்த கற்பகப் பொதும்பர் புக்கு ஒதுங்கும் ஆல் ;
ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ வந்து அணைந்து இடா
ஓவியப் புறாவின் மாடு இருக்க ஊடு பேடை ஏ . - 1.3.23
116 - கல் அடித்து அடுக்கி, வாய் பளிங்கு அரிந்து கட்டி, மீது
எல் இடப் பசும்பொன் வைத்து, இலங்கு பல் மணிக் குலம்
வில் இடக் குயிற்றி, வாள் விரிக்கும் வெள்ளி மா மரம்
புல்லிடக் கிடத்தி, வச்சிரத்த கால் பொருத்தியே. - 1.3.24
117 - மரகதம் அத்து இலங்கு போதிகை தலத்து வச்சிரம்
புரை தபுத்து அடுக்கி, மீது பொன் குயிற்றி, மின் குலாம்
நிரை மணிக் குலத்தின் ஆளி நீள்வகுத்த ஓளிமேல்
விரவு கைத் தலத்தில் உய்த்த மேதகத்தின் மீது அரோ! - 1.3.25
118 - ஏழ் பொழிற்கும் ஏழ் நிலைத் தலம் சமைத்தது என்ன நூல்
ஊழ் உறக் குவித்து அமைத்த உம்பர் செம்பொன் வேய்ந்து, மீச்
சூழ் சுடர்ச் சிரம் அத்து நல் மணித் தசும்பு தோன்றலால்
வாழ் நிலக் குலம் கொழுந்தை மௌலி சூட்டி அன்ன ஏ. - 1.3.26
மாளிகைகளின் அமைதி (119-123)
119 - திங்களும் கரிது என வெண்மை தீற்றிய
சங்க வெண் சுதை உடைத் தவள மாளிகை,
வெம் கரும் கால் பொர மேக்கு நோக்கிய
பொங்கு இரும் பால் கடல் தரங்கம் போலும் ஏ. - 1.3.27
120 - புள்ளி அம் புறவு, இறை பொருந்தும் மாளிகை
தள்ளரும் தமனியத் தகடு வேய்ந்தன,
எள்ளரும் கதிரவன் இளம் வெயில் குழாம்
வெள்ளி அம் கிரி மிசை விரிந்த போலுமே. - 1.3.28
121 - வயிர நல் கால் மிசை மரகதத் துலாம்
செயிர் அறப் போதிகை கிடத்திச் சித்திரம்,
உயிர்பெறக் குயிற்றிய உம்பர் நாட்டவர்
அயிர் உற இமைப்பன அளவில் கோடி ஏ. - 1.3.29
122 - சந்திர காந்தத்தின் தலத்த, சந்தனப்
பந்தி செய் தூணின்மேல் பவளப் போதிகைச்
செந்தனி மணித் துலாம் செறிந்த, திண் சுவர்
இந்திர நீலத்த, எண் இல் கோடி ஏ. - 1.3.30
123 - பாடகக் கால் அடி பதுமம் அத்து ஒப்பன;
சேடரைத் தழீஇயன; செய்ய வாயின;
நாடகத் தொழிலன, நடுவு துய்யன
ஆடகத் தோற்றத்த அளவு இலாதன. - 1.3.31
124 - மாளிகைகள் தேவவிமானம்போலத் திகழ்தல்
புக்கவர் கண் இணை பொருந்து உறாது ஒளி
தொக்கு உடன் தயங்கி விண்ணவரில் தோன்றலால்,
திக்கு உற நினைப்பினில் செல்லும் தெய்வ வீடு
ஒக்க நின்று இமைப்பன உம்பர் நாட்டினும். - 1.3.32
125 - மாளிகையில் வாழ்வார் இயல்பும் அணிகளும்
அணி இழை மகளிரும் அலங்கல் வீரரும்
தணிவன அறம்; நெறி தணிவு இலாதன;
மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது
பணி பிறிது இயன்றன பாங்கும் இல்லை ஏ. - 1.3.33
126 - மாளிகைச் சிறப்பு
வான் உற நிமிர்ந்தன; வரம்பு இல் செல்வத்த;
தான் உயர் புகழன; தயங்கு சோதிய;
ஊனம் இல் அறம் நெறி உற்ற; எண் இலாக்
கோன் நிகர் குடிகள்தம் கொள்கை சான்றன. - 1.3.34
127 - மாளிகைகள் மலைகளை ஒத்திருத்தல்
அருவியில் தாழ்ந்து முத்து அலங்கு தாமத்த;
விரி முகில் குலம் எனக் கொடி விராயின;
பரு மணிக் குவையன; பசும்பொன் கோடிய;
பொரு மயில் கணத்தன மலையும் போன்றன. - 1.3.35
128 - மாளிகைகளிற் சூலங்கள் மின்வரிசைபோலுதல்
அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின;
முகிலொடு வேற்றுமை தெரிகலா; முழுத்
துகிலொடு நெடும் கொடி சூலம் மின்னுவ;
பகல் இடு மின் அணிப் பரப்புப் போன்ற ஏ. - 1.3.36
129 - கொடிச்சரங்கள் கற்பகமாலையை ஒத்தல்
துடி இடைப் பணை முலை தோகை அன்னவர்
அடி இணைச் சிலம்பு பூண்டு அரற்றும் மாளிகை
கொடி இடைத் தரள வெண் கோவை சூழ்வன
கடி உடைக் கற்பகம் கான்ற மாலையே. - 1.3.37
130 - மாளிகையின் கொடிகள் தேய்ப்பதால் மதி தேய்தல்
காண்வரு நெடு வரை கதலிக் கானம் போல்
கோள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன;
வாள்நிலா மழுங்கிட மடங்கி வைகலும்
சேண்மதி தேய்வது அக்கொடிகள் தேய்க்க ஏ. - 1.3.38
131 - அயோத்தி நகரெங்கும் மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும் அமைந்தமை
பொன் திணி மண்டபம் அல்ல பூ தொடர்
மன்றுகள் அல்லன மாட மாளிகை
குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம்
முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே. - 1.3.39
131 - அயோத்தியின் ஒளிபெற்று, தேவருலகு பொன்னுலகாயிற்று எனல்
மின் என, விளக்கு என, வெயில் பிழம்பு எனத்
துன்னிய தமனியத் தொழில் தழைத்த அக்
கன்னி நல் நகர் நிழல் கதுவலால் அரோ
பொன் உலகு ஆயது அப் புலவர் வானமே. - 1.3.40
133 - சூரியன் ஒளி அயோத்தியின் ஒளியே எனல்
எழும் இடத்து அகன்று இடை ஒன்றி எல் படு
பொழுது இடைப் போதலின் புரிசைப் பொன் நகர்
அழல்மணி திருத்திய அயோத்தி ஆளுடை
நிழல் எனப் பொலியு ஆல், நேமி வான் சுடர். - 1.3.41
134 - அகிற்புகையுண்ட மேகங்கள் தோய்தலால் கடல் நறுமணம்
கமழுகின்றதெனல்
ஆய்ந்த மேகலையவர் அம் பொன் மாளிகை
வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய்த்
தோய்ந்த மா கடல் நறும் தூபம் நாறுமேல்,
பாய்ந்த தாரையின் நிலை பகரல் வேண்டும் ஓ? - 1.3.42
135 - அயோத்தியில் உள்ள மகளிர் குதலைமுதலியவற்றின் இயல்பு
குழல் இசை மடந்தையர் குதலைக் கோதையர்
மழலை அம் குரல் இசை மகர யாழ் இசை
எழில் இசை மடந்தையர் இன் சொல் இன் இசை
பழையர்தம் சேரியில் பொருநர் பாட்டிசை. - 1.3.43
136 - யானைகள்செய்த குழிகளைச் சுண்ணம் தூர்க்கின்றது எனல்
கண் இடை கனல்சொரி களிறு கால் கொடு
மண் இடை வெட்டுவ; வேட்கும் மைந்தர்கள்
பண்ணைகள் பயில் இடம் குழி படைப்பன;
சுண்ணம் அக் குழிகளைத் தொடர்ந்து தூர்ப்பன. - 1.3.44
137 - மகளிர் பந்தாடல்
பந்துகள் மடந்தையர் பயிற்றுவார்; இடைச்
சிந்துவ முத்து இனம்; அவை திரட்டுவார்
அந்தம் இல் சிலதியர்; ஆற்ற குப்பைகள்
சந்திரன் ஒளி கெடத் தழைப்ப தண் நிலா. - 1.3.45
138 - நடனமாதர் கண்பட்டுக் காண்பார்க்கு உயிர் மெலிதலும் காதல் வளர்தலும்
அரங்கு இடை மடந்தையர் ஆடுவார், அவர்
கரும் கடை கண் அயில், காமர் நெஞ்சினை
உருங்குவ; மற்று அவர் உயிர்கள், அன்னவர்
மருங்குல் போல் தேய்வன; வளர்வது ஆசையே. - 1.3.46
139 - சோலை தேன் பொழிய, மகளிர் வருந்துதல்
பொழிவன சோலைகள் புதிய தேன் சில
விழைவன தென்றலும் மிஞிறும் மெல் என
நுழைவன; அன்னவை நுழைய நோவொடு
குழைவன பிரிந்தவர் கொதிக்கும் கொங்கை ஏ. - 1.3.47
140 - பாடலால் பறவைகளும் பரவசமாதல்
இறங்குவ மகர யாழ் எடுத்த இன்னிசை
நிறம் கிளர் பாடலான் நிமிர்வ; அவ் வழி
கறங்குவ வள் விசி கருவி; கண் முகிழ்த்து
உறங்குவ மகளிரோடு ஓதும் கிள்ளை ஏ. - 1.3.48
141 - ஆடவர்தோள்கள் அரிவையர்தாளால் உதைபட்டுச் சிவத்தல்
குதை வரிச் சிலை நுதல் கொவ்வை வாய்ச்சியர்
பதம் யுகம் தொழில்கொடு பழிப்பு இலாதன
ததை மலர்த் தாமரை அன்ன தாளினால்
உதைபடச் சிவப்பன, உரவுத் தோள்கள் ஏ. - 1.3.49
142 - சித்திரங்கள் இமையாத காரணம்
பொழுது உணர்வு அரிய அப் பொருவில் மா நகர்
தொழு தகை மடந்தையர் சுடர் விளக்கு எனப்
பழுது அறு மேனியைப் பார்க்கும் ஆசை கொல்
எழுது சித்திரங்களும் இமைப்பு இலாத ஏ. - 1.3.50
143 - மாளிகைகளில் மகளிர்மேனியே இருளகற்றுதல்
தணி மலர்த் திருமகள் தயங்கும் மாளிகை
இணர் ஒளி பரப்பி நின்று இருள் துரப்பன,
திணி சுடர் நெய் உடைத் தீ விளக்கம் ஓ?
மணி விளக்கு; அல்லன மகளிர் மேனி ஏ. - 1.3.51
144 - ஆடற்சதியை அளந்துகாட்டுவன குதிரைகளின் கிண் கிணி மாலை
பதங்களில் தண்ணுமை பாணி பண் உற
விதங்களின் விதி முறை சதி மிதிப்பவர்
மதங்கியர்; அ சதி வகுத்துக் காட்டுவ
சதங்கைகள், அல்லன புரவி தார்கள் ஏ. - 1.3.52
145 - மதங்கியர் அழகின் மாட்சி
முளைப் பிறை நெற்றியர் முறுவல் வெம் துயர்
விளைப்பன; அன்றியும், மெலிந்து நாள் தொறும்
இளைப்பன நுண் இடை; இளைப்ப, மென் முலை
திளைப்பன முத்தொடு செம் பொன் ஆரம் ஏ. - 1.3.53
146 - களிப்புடையன இவை எனல்
இடை இடை எங்கணும் களி அறாதன;
நடை இள அன்னங்கள், நளின நீர்க் கயல்,
பெடை இள வண்டுகள், பிரசம் மாந்திடும்
கடகரி, அல்லன மகளிர் கண்கள் ஏ. - 1.3.54
147 - யானையின் மதநீரால் பூமி குழைதல்
தழல் விழி யாளியும் துணையும் தாழ்வரை
முழை விழை கிரி நிகர் களிற்றின் மும்மத-
மழை விழும்; விழும் தொறும் மண்ணும் கீழ் உற
குழைவிழும்; அதில் விழும் கொடித் திண் தேர்கள் ஏ. - 1.3.55
148 - மாலை கலவைச்சாந்து இவற்றின் மிகுதி
ஆடுவார் புரவியின் குரத்தை ஆர்ப்பன,
சூடுவார் இகழ்ந்த அத் தொங்கல் மாலைகள்;
ஓடுவார் இழுக்குவ, ஊடல் ஊடு உறக்
கூடுவார் வன முலை கொழித்த சாந்தம் ஏ. - 1.3.56
149 - மாலை மணிகளைக் கழுவுதல்
இளைப்பு அரும் குரங்களால் இவுளி பாரினைக்
கிளைப்பன; அவ் வழி கிளர்ந்த தூளியின்,
ஒளிப்பன மணி; அவை ஒளிர மீது தேன்
துளிப்பன குமரர்தம் தோளின் மாலை ஏ. - 1.3.57
150 - நாறுவ இவை எனல்
விலக்கு அரும் கரி மதம் வேங்கை நாறுவ;
குலக் கொடி மாதர் வாய் குமுதம் நாறுவ;
கலக்கடை கணிப்பு அரும் கதிர்கள் நாறுவ;
மலர்க் கடி நாறுவ; மகளிர் கூந்தல் ஏ; - 1.3.58
151 - அயோத்திநகரின் ஆவணவீதிக்கு அளகாபுரி தோற்றது எனல்
கோவை இந் நகரொடு எண் குறிக்கலாத அத்
தேவர்தம் நகரியைச் செப்புகின்றது என்?
யாவையும் வழங்கு இடத்து இகலி இந் நகர்
ஆவணம் கண்டபின் அளகை தோற்றது ஏ. - 1.3.59
152 - மைந்தர்கூட்டத்தின் நிகழ்ச்சிகள் இவை எனல்
அதிர் கழல் ஒலிப்பன, அயில் இமைப்பன,
கதிர் மணி அணி வெயில் கால்வ, மான்மதம்
முதிர்வு உற கமழ்வன, முத்தம் மின்னுவ,
மதுகரம் இசைப்பன, மைந்தர் ஈட்டம் ஏ. - 1.3.60
153 - வாச்சிய ஒலிகள் கடலொலியை வென்றமை
வளை ஒலி, வயிர் ஒலி, மகர வீணையின்
கிளை ஒலி, முழவு ஒலி, கின்னரத்து ஒலி,
துளை ஒலி, பல் இயம் துவைக்கும் சும்மையின்
விளை ஒலி, கடல் ஒலி மெலிய விம்மும் ஏ. - 1.3.61
154 - மண்டப வகைகள்
மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்;
அன்னம் மென் நடையவர் ஆடும் மண்டபம்;
உன்ன அரும் அரு மறை ஓதும் மண்டபம்;
பன்ன அரும் கலை தெரி பட்டிமண்டபம். - 1.3.62
155 - தோரணம் தெரு புரவிப்பந்தி இவற்றின் சிறப்பு
இரவியில் சுடர் மணி இமைக்கும் தோரணம்
தெருவினில் சிறியன திசைகள்; சேண் விளங்கு
அருவியில் பெரியன ஆனைத் தானங்கள்;
பரவையில் பெரியன புரவிப் பந்தியே. - 1.3.63
163 - மாளிகையில் மாதர்கள் முகமும் விழிகளும் மலர்தல்
சூளிகை மழை முகில் தொடக்கும் தோரண
மாளிகை மலர்வன மகளிர் வாள் முகம்;
வாளிகள் அன்னவை மலர்வ, மற்றவை
ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்ப ஏ. - 1.3.64
157 - மன்னவர்கழலொலியோடும் மகளிர்சிலம்பொலியோடும்
மாறுகொள்வன இவை எனல்
மன்னவர் கழலொடு மாறு கொள்வன,
பொன் அணித் தேர் ஒலி, புரவித் தார் ஒலி;
இன் நகையவர் சிலம்பு ஏங்க ஏங்குவ,
கன்னியர் குடை துறைக் கமல அன்னம் ஏ . - 1.3.65
158 - மகளிர்சிலர் பொழுதுபோக்குந்திறன்
ஊடவும் கூடவும் உயிரின் இன் இசை
பாடவும் விறலியர் பாடல் கேட்கவும்
ஆடவும் அகன் புனல் ஆடி, அம் மலர்
சூடவும் பொழுது போம் சிலர்க்கு அத் தொல் நகர். - 1.3.66
159 - ஆடவரிற் சிலர் பொழுதுபோக்கும் முறை
முழங்கு திண் கட கரி முன்பின் ஊரவும்
எழும் குரம் அத்து இவுளியோடு இரதம் ஏறவும்
பழங்கணோடு இரந்தவர் பரிவு தீர்தர
வழங்கவும் பொழுது போம் சிலர்க்கு அம் மா நகர். - 1.3.67
160 - சிலர் போர்க்கலையாராய்ச்சியால் பொழுதுகழித்தல்
கரியொடு கரி எதிர் பொருத்தி, கைப் படை
வரி சிலை முதலிய வழங்கி, வால் உளைப்
புரவியில் பொரு இல் செண்டு ஆடிப் போர்க் கலை
தெரிதலின் பொழுது போம் சிலர்க்கு அச் சேண் நகர். - 1.3.68
161 - சிலர் பொழுதுகழிக்கும் முறை
நந்தன வனம் அத்து அலர் கொய்து, நவ்வி போல்
வந்து இளையவரொடு வாவி ஆடி, வாய்ச்
செம் துவர் அழிதரத் தேறல் மாந்திச் சூது
உந்தலின் பொழுது போம் சிலர்க்கு அவ் ஒண் நகர். - 1.3.69
162 - கொடிகளின் உயர்வு
நானா விதமா நளி மாதிர வீதி ஓடி,
மீன் நாறு வேலைப் புனல் வெண் முகில் உண்ணுமா போல்,
ஆனாத மாடம் அத்து இடை ஆடு கொடிகள் மீப் போய்,
வான் ஆறு நண்ணிப் புனல் வற்றிட நக்கும் மன் ஓ! - 1.3.70
163 - கோபுர மதில்களின் உயர்வு
வன் தோரணங்கள் புணர் வாயிலும் வானின் உம்பர்
சென்று ஓங்கி மேல் ஓர் இடம் இல் எனச் செம்பொன் இஞ்சி
குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு இசைக் குப்பை என்ன
ஒன்றோடு இரண்டும் உயர்ந்து ஓங்கின உம்பர் நாண. - 1.3.71
164 - எங்கும் மலர்ப்பல்லவப் பள்ளி
காடும், புனமும், கடல் அன்ன கிடங்கும், மாதர்
ஆடும் குளனும், அருவிச் சுனைக் குன்றும், உம்பர்
வீடும், விரவும் மணி பந்தரும், வீணை வண்டு
பாடும் பொழிலும், அல நல் அறப் பள்ளி மன் ஓ. - 1.3.72
165 - அயோத்தியில் கள்வாருமில்லை கொள்வாருமில்லை
தெள் வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும்
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள்
கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாது ஓ. - 1.3.73
166 - அயோத்திநகரில் கல்வியும் செல்வமும் சிறந்தவாறு
கல்லாது நிற்பார் பிறர் இன்மையின் கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை;
எல்லாரும் எல்லாப் பெரும் செல்வமும் எய்தலால் ஏ,
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாது ஓ. - 1.3.74
167 - அயோத்திமாநகரம் தருவை நிகர்க்கும் எனல்
ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து எண் இல் கேள்வி
ஆகு அம் முதல் திண் பணை போக்கி, அருந்தவத்தின்
சாகம் தழைத்து, அன்பு அரும்பித் தருமம் மலர்ந்து,
போகம் கனி ஒன்று பழுத்தது போலும்; அன்று ஏ! - 1.3.75
1.4 . அரசியற் படலம் (168-179)
168 - அம் மாண் நகருக்கு அரசன்,- அரசர்க்கு அரசன்:
செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்:
இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்
மொய் மாண் கழலோன் தரும் நல் அறம் மூர்த்தி அன்னான். - 1.4.1
169 - ஆதி மதியும், அருளும், அறனும், அமைவும்,
ஏது இல் மிடல் வீரமும், ஈகையும், எண்ணில், யாவும்,
நீதி நிலையும், இவை நேமியினோர்க்கு நின்ற
பாதி; முழுதும் இவற்கே பணி கேட்ப மன் ஓ! - 1.4.2
170 - மொய் ஆர்கலி சூழ் முது பாரில் முகந்து தானக்
கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை;
மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்ந்த, யாரும்
செய்யாத யாகம் இவன் செய்து மறந்த, மாதோ! - 1.4.3
171 - தாய் ஒக்கும், அன்பில்; தவம் ஒக்கும், நலம் பயப்பில்;
சேய் ஒக்கும், முன் நின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின், மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகும் கால் அறிவு ஒக்கும் எவர்க்கும், அன்னான். - 1.44
172 - ஈய்ந்தே கடந்தான் இரப்போர் கடல்; எண் இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர்; வாளால்
காய்ந்தே கடந்தான் பகை வேலை; கருத்து முற்றத்
தோய்ந்தே கடந்தான் திருவின் தொடர் போக பௌவம். - 1.4.5
173 - அயோத்தியரசன் பெயர் தசரதன்
வெள்ளமும் பறவையும் விலங்கும் வேசியர்
உள்ளமும் ஒரு வழி ஓட நின்றவன்
தள் அரும் பெரும் புகழ்த் தயரதப் பெயர்
வள்ளல் வள் உறை அயில் மன்னர் மன்னன் ஏ - 1.4.6
174 - உலகம் முழுவதையும் தசரதன் எளிதில் ஆளுதல்
நேமி மால் வரை மதிலாக, நீள் புறப்
பாமம் மா கடல் கிடங்கு ஆகப், பல் மணி
வாமம் மாளிகை மலை ஆக, மன்னற்குப்
பூமியும் அயோத்தி மா நகரம் போன்றது ஏ. - 1.4.7
175 - தசரதன் வேலின் சிறப்பு
ஆ வரும் வல் மை நேர் அறிந்து தீட்டல் ஆல்
மேவரும் கை அடை வேலும் தேயும் ஆல்;
கோ உடை நெடு மணி மகுட கோடியால்
சே அடி அணிந்த பொன் கழலும் தேயும் ஆல். - 1.4.8
176 - தசரதனின் வெண்கொற்றக்குடை
மண் இடை உயிர் தொறும், வளர்ந்து தேய்வு இன்றித்,
தண் நிழல் பரப்பவும், இருளைத் தள்ளவும்,
அண்ணல் தன் குடை மதி அமையும்; ஆதலான்,
விண் இடை மதியினை, ' மிகை இது ' என்ப ஏ. - 1.4.9
177 - உலகின் உயிர்களுக்குத் தசரதன் ஓர் உடம்பு
வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பல் ஆல்,
செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான். - 1.4.10
178 - தசரதன் திகிரியின் சிறப்பு
குன்று என உயரிய குவவுத் தோளினான்
வென்றி அம் திகிரி, வெம் பரிதி ஆம் என,
ஒன்று என, உலகு இடை உலாவி, மீ மிசை
நின்று நின்று, உயிர்தொறும் நெடிது காக்கும் ஏ. - 1.4.11
179 - தசரதன் உலகைக் கருத்துடன் பாதுகாத்தல்
எய் என எழு பகை எங்கும் இன்மையால்,
மொய் பொரு தினவு உறு முழவுத் தோளினான்,
வையகம் முழுவதும், வறியன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து இனிது அரசு செய்கின்றான். - 1.4.12
1.5 . திருவவதாரப் படலம் (180- 317 )
புதல்வரில்லாக்குறையைத் தசரதன் வசிட்டனுக்குக்கூறுதல் (180-183)
180 - ஆயவன், ஒரு பகல், அயனையே நிகர்
தூய மா முனிவனைத் தொழுது, 'தொல் குலத்
தாயரும், தந்தையும், தவமும், அன்பின் ஆல்
மேய வான் கடவுளும், பிறவும், வேறும் நீ.' - 1.5.1
181 - 'எம் குலத் தலைவர்கள் இரவி தன்னினும்
தம் குலம் விளங்குறத் தரணி தாங்கினார்,
மங்குநர் இல் என; வரம்பு இல் வையகம்,
இங்கு, நின் அருளினால், இனிதின் ஓம்பினேன்.' - 1.5.2
182 - 'அறுபதினாயிரம் ஆண்டு மாண்டு உற,
உறு பகை ஒடுக்கி, இவ் உலகை ஓம்பினேன்;
பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம்
மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு, அரோ.' - 1.5.3
183 - 'அரும் தவ முனிவரும், அந்தணாளரும்
வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார்,
இரும் துயர் உழக்குவர் என் பின், என்பது ஓர்
அரும் துயர் வருத்தும் என் அகம் அத்து ஐ' என்றனன். - 1.5.4
184 - முரசு அறை செழும் கடை முத்தம் மா முடி
அரசர்தம் கோமகன் அனைய கூறலும்,
விரை செறி கமலம் மென் பொகுட்டு மேவிய
வர சரோருகன் மகன் மனத்தின் எண்ணினான். - 1.5.5
185 - அலைகடல் நடுவண் ஒர் அனந்தன் மீமிசை
மலை என விழி துயில் வளரும் மா முகில்,
'கொலை தொழில் அரக்கர் தம் கொடுமை தீர்ப்பென்' என்று,
உலைவு உறும் அமரருக்கு உரைத்த வாய்மையை. - 1.5.6
186 - சுடு தொழில் அரக்கரால் தொலைந்து, வான் உளோர்,
கடு அமர் களன் அடி கலந்து கூறலும்,
படு பொருள் உணர்ந்த அப் பரமன், 'யாம் இனி
அடுகிலம், மாயனோடு அறைதிர்' என்னவே. - 1.5.7
187 - கறை மிடற்று இறை சொலக், கடவுளோர்களும்,
மறை தெரி முனிவரும், வச்சிர ஆயுதத்து
இறைவனும், வணங்கி நின்று, எழுந்து போந்து, உயர்
நறை மலரவன் இடம் நண்ணல் மேயினார். - 1.5.8
188 - வடவரைக் குடுமியின் நடுவண் மாசு அறு
சுடர் மணி மண்டபம் துன்னி, நான்முகக்
கடவுளை அடிதொழுது, அமரர், கண் நுதல்
உடையவன் அருளியது உரைத்திட்டார், அரோ. - 1.5.9
189 - 'பாகசாதனன் தனைப் பாசத்து ஆர்த்து, அடல்
மேகநாதன், புகுந்து, இலங்கை மேய நாள்
சேகு அற மீட்ட ஓதிமனும், தேவரும்,
ஏகியே, வைகுந்த வாயில் எய்தினார். - 1.5.10
190 - 'இருபது கரம், தலை ஈர் ஐந்து என்னும் அத்
திரு இலி வலிக்கு ஒரு செயல் இன்று எங்களால்,
கரு முகில் என வளர் கருணை அம் கடல்
பொருது இடர் தணிக்கின் உண்டு' எனும் புணர்ப்பின் ஆல் . - 1.5.11
191 - திரை கெழு பயோததித் துயிலும் தெய்வ வான்
மரகத மலையினை வழுத்தி நெஞ்சினால்,
கர கமலம் குவித்து இருந்த காலையில்,
பர கதி உணர்ந்தவர்க்கு உதவும் பண்ணவன் - 1.5.12
192 - கரு முகில் தாமரைக் காடு பூத்து, நீடு
இரு சுடர் இரு புறத்து ஏந்தி, ஏடு அவிழ்
திருவொடும் பொலிய, ஓர் செம்பொன் குன்றின் மேல்
வருவ போல், கலுழன் மேல் வந்து, தோன்றினான். - 1.5.13
193 - எழுந்தனர் விண்ணவர்க்கு இறையும், தாமரைச்
செழும் தவிசு உகந்த அத் தேவும், சென்று எதிர்
விழுந்தனர் அடிமிசை விண்ணுளோர் ஒடு உம்,
தொழும் தொறும் தொழும் தொறும் களி துளங்குவார். - 1.5.14
194 - ஆடினர், பாடினர், அங்கும் இங்கும் ஆய்
ஓடினர், உவகை மா நறவு உண்டு, ஓர்கிலார்,
' வீடினர் அரக்கர் ' என்று உவக்கும் விம்மல் ஆல்,
சூடினர், முறை முறை, துளவத் தாள் மலர். - 1.5.15
195 - பொன்வரை இழிவது ஓர் புயலின் பொற்பு உற,
என்னை ஆள் உடையவன் தோள் நின்று, எம்பிரான்,
சென்னி வான் தடவு மண்டபம் அத்து சேர்ந்து, அரி
துன்னு பொன் பீடம் மேல் பொலிந்து தோன்றினான். - 1.5.16
196 - விதியொடு, முனிவரும், விண் உளோர்கள் உம்,
மதிதெரி குலிசியும், மற்று உளோர்கள் உம்,
அதிசயமுடன் உவந்து அயல் இருந்துழி,
கொதி கொள் வேல் அரக்கர்தம் கொடுமை கூறினார். - 1.5.17
197 - 'ஐயிரு தலையினோன் அனுசன் ஆதி ஆம்
மெய் வலி அரக்கரால் விண்ணும் மண்ணும் ஏ
செய் தவம் இழந்தன, திருவின் நாயக!
உய்திறம் இல்லை' என்று உயிர்ப்பு வீங்கினார். - 1.5.18
198 - 'எங்கும், நீள் வரங்களால், அரக்கர் என்று உளார்,
பொங்கும் மூவுலகையும் புடைத்து அழித்தனர்;
செம் கண் நாயக! இனித் தீர்த்தல் இல்லை ஏல்,
நுங்குவர் உலகை, ஓர் நொடியின் ' என்றனர். - 1.5.19
199 - என்றனர், இடர் உழந்து இறைஞ்சி ஏத்தலும்,
மன்றல் அம் துளவினான், ' வருந்தல்! வஞ்சகர்-
தம் தலை அறுத்து இடர் தணிப்பன் தாரணிக்கு:
ஒன்று நீர் கேண்ம்!' என உரைத்தல் மேயினான். - 1.5.20
200 - ' வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய்க்,
கானினும், வரையினும், கடி தடத்தினும்,
சேனையோடு அவதரித்திடுமின் சென்று!' என,
ஆனனம் மலர்ந்தனன், அருளின் ஆழியான். - 1.5.21
201 - ' மசரதம் அனையவர் வரமும், வாழ்வும், ஓர்
நிசரத கணைகளால் நீறு செய்ய யாம்
கசரத துரகம் ஆள் கடல் கொள் காவலன்
தசரதன் மதலை ஆய் வருதும் தாரணி.' - 1.5.22
202 - ' வளை ஒடு, திகிரியும், வடவை தீ தர
விளைதரு கடு உடை விரிகொள் பாயலும்,
இளையவர் என அடி பரவ, ஏகி, நாம்
வளை மதில் அயோத்தியில் வருதும்' என்றனன். - 1.5.23
203 - என்று அவன் உரைத்த போது, எழுந்து துள்ளினார்,
நன்றிகொள் மங்கல நாதம் பாடினார்,
'மன்று அலர் செழும் துளவு அணியும் மாயனார்
இன்று எமை அளித்தனர்' என்னும் ஏம்பலால். - 1.5.24
204 - 'போயது எம் பொருமல்' என்னா
இந்திரன் உவகை பூத்தான்;
தூய மா மலரின் மேவும்
தொல் மறை முகத்தினானும்,
சேய் இரு விசும்பு உளோரும் ,
'தீர்ந்தது எம் சிறுமை' என்றார்:
மா இரு ஞாலம் உண்டோன்
கலுழன் மேல் சரணம் வைத்தான். - 1.5.25
205 - என்னை ஆள் உடைய ஐயன்
கலுழன் மீது எழுந்து போய
பின்னர், வானவரை நோக்கிப்
பிதாமகன் பேசுகின்றான்,
'முன்னர் ஏய் எண்கின் வேந்தன்
யான்' என மொழிகின்றான், மற்று,
'அன்ன ஆறு எவரும் நீர் போய்
அவதரித்திடுமின்!' என்றான். - 1.5.26
206 - தரு உடைக் கடவுள் வேந்தன்
சாற்றுவான் 'எனது கூறு
மருவலர்க்கு அசனி அன்ன
வாலியும் மகனும்' என்ன,
இரவி, மற்று, 'எனது கூறு அங்கு
அவற்கு இளையவன்' என்று ஓத
அரியும் மற்று, 'எனது கூறு
நீலன்' என்று அறைந்திட்டான் ஆல். - 1.5.27
207 - வாயு மற்று,'எனது கூறு
மாருதி' எனலும், மற்றோர்
'காயும் மற்கடங்கள் ஆகிக்
காசினி அதனின் மீது
போயிடத் துணிந்தோம்'என்றார்;
புயல் வண்ணன் ஆதி வானோர்
மேயினர் என்னில், இந்த
மேதினிக்கு அவதி உண்டு ஓ? - 1.5.28
208 - அருள் தரு கமலக் கண்ணன்
அருள் முறை, அலர் உளோனும்
இருள் தவிர் குலிசத்தானும் ,
அமரரும், இனையர் ஆகி
மருள் தரு வனத்தின், மண்ணின்
வானரர் ஆகி வந்தார்;
பொருள் தரும் எவரும் தத்தம்
உறை இடம் சென்று புக்கார். - 1.5.29
209 - வசிட்டன் யாகம் செய்யின் குறைதீருமெனல்
'ஈது முன் நிகழ்ந்த வண்ணம்' என முனி இதயத்து எண்ணி,
'மாதிரம் பொருத திண் தோள் மன்ன, நீ வருந்தல் ஏழ் ஏழ்
பூதலம் முழுதும் காக்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி,
தீது அற முயலின், ஐய! சிந்தை நோய் தீரும்' என்றான். - 1.5.30
210 - தசரதன் தான்செய்யவேண்டியதை வினாதல்
என்ன மா முனிவன் கூற,
எழுந்து, பேர் உவகை பொங்க,
மன்னவர் மன்னன், அந்த
மா முனி சரணம் சூடி,
'உன்னையே புகல் புக்கேனுக்கு
உறுகண் வந்து அடைவது உண்டு ஓ?
அன்னதற்கு அடியேன் செய்யும்
பணி இனிது அளித்தி' என்றான். - 1.5.31
மகப்பேறு உண்டு எனல் (211-213)
211 - 'மாசு அறு சுரர்கள் ஓடு மற்று உளோர் தமையும் ஈன்ற
காசிபன் அருளும் மைந்தன், விபண்டகன், கங்கை சூடும்
ஈசனும் புகழ்தற்கு ஒத்தோன், இரும் கலை பிறவும் எண்ணில்,
தேசு உடைத் தந்தை ஒப்பான்; திரு அருள் புனைந்த மைந்தன். - 1.5.32
212 - 'வரு கலை பிறவும், நீதி
மனுநெறி, வரம்பு இல் வாய்மை
தருகலை, மறையும், எண்ணில்,
சதுமுகற்கு உவமை சான்றோன்,
திருகலை உடைய இந்தச்
செகம் அத்து உளோர் தன்மை தேரா
ஒரு கலை முகச் சிருங்க
உயர் தவன் வருதல் வேண்டும். - 1.5.33
213 - 'பாந்தளின் மகுட கோடி
பரித்த பார் அதனின் வைகும்
மாந்தர்கள் விலங்கு, என்று உன்னும்
மனத்தன், மா தவத்தன், எண்ணில்,
பூ தவிசு உகந்து உளோன் உம்,
புராரியும் புகழ்தற்கு ஒத்த
சாந்தனால் வேள்வி முற்றில் தனயர்கள்
உளர் ஆம்' என்றான். - 1.5.34
214 - கலைக்கோட்டுமுனியைப்பற்றித் தசரதன் வினாதல்
ஆங்கு உரை இனைய கூறும்
அரும் தவர்க்கு அரசன் செய்ய
பூங் கழல் தொழுது வாழ்த்திப்
பூதலம் மன்னர் மன்னன்,
'தீங்கு அறு குணத்தால் மிக்க
செழும் தவன் யாண்டை உள்ளான்?
ஈங்கு நான் கொணரும் தன்மை
இயம்புதி, இறைவ!' என்றான். - 1.5.35
215 - 'புத்து ஆன கொடு வினையோடு அரும் துயரம்
போய் ஒளிப்பப், புவனம் தாங்கும்
சத்து ஆன குணம் உடையோன், தயாவோடு
தண் அளியின் சாலை போல்வான்,
எத்தானும் வெலற்கு அரியான், மனு குலத்தே
வந்து உதித்தோன், இலங்கு மௌலி
உத்தானபாதன் அருள் உரோமபதன் என்று
உளன் இவ் உலகை ஆள்வோன்.' - 1.5.36
216 - அன்னவன் தான் புரந்து அளிக்கும் திருநாட்டில்
நெடு காலம் அளவு அது ஆக
மின்னி எழும் முகில் இன்றி வெம் துயரம்
பெருகுதலும், வேந்தன், நல் நூல்
மன்னும் முனிவரை அழைத்து, மா தானம்
கொடுக்கினும் வான் வழங்காது ஆகப்,
பின்னும் முனிவரர்க் கேட்பக், 'கலைக்கோட்டு
முனி வரின் வான் பிலிற்றும்' என்றார். - 1.5.37
217 - 'ஓதம் நெடும் கடல் ஆடை உலகினில் வாழ்
மனிதர் விலங்கு எனவே உன்னும்
கோது இல் குணத்து அரும் தவனைக் கொணரும் வகை
யாவது? 'எனக் குணிக்கும் வேலைச்,
சோதி நுதல், கருநெடும் கண், துவர் இதழ் வாய்த்,
தரள நகைத், துணை மென் கொங்கை
மாதர் எழுந்து, 'யாம் ஏகி அரும் தவனைக்
கொணர்தும்' என வணக்கம் செய்தார்.' - 1.5.38
218 - "ஆங்கு அவர் அம்மொழி உரைப்ப, அரசன் மகிழ்ந்து,
அவர்க்கு அணி தூசு ஆதி ஆய
பாங்கு உள மற்றவை அருளிப், 'பனிப் பிறையைப்
பழித்தநுதல், பணைத்த வேய்த் தோள்
ஏங்கும் இடை, தடிக்கும் முலை, இருண்ட குழல்,
மருண்ட விழி, இலவச் செவ்வாய்ப்,
பூங்கொடியீர்! ஏகும் 'எனத், தொழுது இறைஞ்சி
இரதம் மிசைப் போயினாரே." - 1.5.39
219 - ஓசனை பல கடந்து, இனி ஒர் ஓசனை
ஏசு அறு தவன் உறை இடம் இது, என்றுழிப்,
பாசு இழை மடந்தையர், பன்னசாலை செய்து,
ஆசு அறும் அரும் தவத்தவரின், வைகினார். - 1.5.40
220 - "அரும் தவன் தந்தையை அற்றம் நோக்கியே
கரும் தடம் கண்ணியர் கலை வலாளனில்
பொருந்தினர் ; பொருந்துபு, விலங்கு எனாப் புரிந்து
இருந்தவர் இவர் என, இனைய செய்தனன்." - 1.5.41
221 - "அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்து,
'இருக்க' என, இருந்தபின், இனிய கூறலும்,
முருக்கு இதழ் மடந்தையர் முனிவனைத் தொழாப்,
பொருக்கென எழுந்து போய்ப் புரையுள் புக்கனர்." - 1.5.42
222 - "திருந்து இழையவர் சில தினங்கள் தீர்ந்துழி
மருந்தினும் இனியன வருக்கை வாழை மாத்
தரும் தரும் கனியொடு தாழை இன் பலம்
'அருந்தவ! அருந்து' என அருளினார், அரோ." - 1.5.43
223 - "இன்னன பல் பகல் இறந்த பின், திரு
நல் நுதல் மடந்தையர், நவை இல் மாதவன்
தன்னை எம் இடத்தினும் சார்தல்வேண்டும் என்று,
அன்னவன் தொழுதலும், அவரொடு ஏகினான்." - 1.5.44
224 - "விம்முறும் உவகையர், வியந்த நெஞ்சினர்.
அம்ம! 'இது!இது!' என அகலும் நீள் நெறி,
செம்மையின் முனிவரன் தொடரச், சென்றனர்,
தம் மனம் என மருள் தையலார்கள் ஏ!" - 1.5.45
225 - "வளம் நகர் முனிவரன் வரும் முன், வானவன்
களன் அமர் கடு எனக் கருகி, வான் முகில்
சளசள என மழைத் தாரை கான்றன,
குளனொடும் நதிகள் தம் குறைகள் தீரவே." - 1.5.46
226 - பெரும் புனல் நதிகளும், குளனும், பெட்பு உறக்,
கரும்பொடு செந்நெலும் கவின் கொண்டு ஓங்கிட,
இரும் புயல் ககனம் மீது இடைவிடாது எழுந்து
அரும் புனல் சொரிந்த போது, அரசு உணர்ந்தனன். - 1.5.47
227 - 'காமமும் வெகுளியும் களிப்பும் கைத்து எழு
கோ முனி இவண் அடைந்தனன் கொல்? கொவ்வை வாய்த்
தாமரை மலர் முகத் தரள வாள் நகைத்
தூம மென் குழலியர் புணர்த்த சூழ்ச்சி ஆல்.' - 1.5.48
228 - என்று எழுந்து அரும் மறை முனிவர் யாரொடும்
சென்று இரண்டு யோசனை சேனை சூழ்தர
மன்றல் அம் குழலியர் நடுவண் மா தவம்
குன்றினை எதிர்ந்தனன் குவவுத் தோளினான். - 1.5.49
229 - வீழ்த்தனன் அடி மிசை, விழிகள் நீர் தர,
'வாழ்ந்தனன் இனி! 'என மகிழும் சிந்தையான்;
தாழ்ந்து எழு மாதரார் தம்மை நோக்கி, 'நீர்
போழ்ந்தனிர் எனது இடர் புணர்ப்பினால்!' என்றான். - 1.5.50
230 - அரசனும் முனிவரும் அடைந்த அ இடை,
வரம் முனி வஞ்சம் என்று உணர்ந்த மாலை வாய்,
வெருவினர் விண்ணவர்; வேந்தன் வேண்டலால்
கரை எறியாது அலை கடலும் போன்றனன். - 1.5.51
231 - வள் உறு வயிர வாள் மன்னன் பல் முறை
எள் அரு முனிவனை இறைஞ்சி, யாரினும்
தள் அரும் துயரமும், சமைவும், சாற்றலும்,
உள் உறு வெகுளி போய் ஒளித்தது, ஆம், அரோ. - 1.5.52
232 - அருள் சுரந்து, அரசனுக்கு ஆசியும் கொடுத்து,
உருள் தரு தேரின் மீது ஒல்லை ஏறி, நல்
பொருள் தரு முனிவரும் தொடரப் போயினன்,
மருள் ஒழி உணர்வு உடை வரத மா தவன். - 1.5.53
233 - அடைந்தனன் வளம் நகர், அலங்கரித்து எதிர்
மிடைந்திட, முனியொடும் வேந்தன் கோயில் புக்கு,
ஒடுங்கல் இல் பொன் குழாத்து உறையுள் எய்தி, ஓர்
மடங்கல் ஆதனம் அத்து இடை முனியை வைத்தனன். - 1.5.54
234 - அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி வேறு
உரைக்குவது இலது என உவந்து தான் அருள்
முருக்கு இதழ் இளம் முலை முகம் நலாள் தனை
இருக்கு ஒடு விதி முறை இனிதின் ஈந்தனன். - 1.5.55
235 - 'வறுமை நோய் தணிதர வான் வழங்கவே
உறு துயர் தணிந்தது அவ் உலகம்; வேந்து அருள்
செறி குழல் போற்றிடத், திருந்து மா தவம் அத்து
அறிஞன் ஆண்டு இருக்கும் நல், அரச!' என்றனன். - 1.5.56
236 - கலைக்கோட்டுமுனியை அழைத்துவரத் தசரதன் புறப்பாடு
என்றலுமே, முனிவரன் தன் அடி இறைஞ்சி, '
ஈண்டு ஏகிக் கொணர்வென்' என்னாத்
துன்று கழல் முடி வேந்தர் அடி போற்றச்,
சுமந்திரனே முதல்வர் ஆய
வன் திறல் சேர் அமைச்சரொடும், மா மணித் தேர்
ஏறுதலும், வானோர் வாழ்த்தி,
"இன்று எமது வினை முடிந்தது" எனச்,
சொரிந்தார் மலர் மாரி இடைவிடாமல். - 1.5.57
237 - தசரதன் உரோமபதனை அடைதல்
காகளமும் பல் இயமும் கனை கடலின்
மேல் முழங்கக், கானம் பாட
மாகதர்கள், அரு மறை நூல் வேதியர்கள்
வாழ்த்து எடுப்ப, மதுரச் செவ்வாய்த்
தோகையர் பல்லாண்டு இசைப்பக், கடல் தானை
புடை சூழச், சுடரோன் என்ன,
ஏகி, அரு நெறி நீங்கி, உரோமபதன்
திரு நாட்டை எதிர்ந்தான் அன்றே. - 1.5.58
238 - தசரதனை வரவேற்க உரோமபதன் வருதல்
கொழுந்து ஓடிப் படர் கீர்த்திக் கோ வேந்தன்
அடைந்தமை சென்று ஒற்றர் கூறக்,
கழுந்து ஓடும் வரி சிலைக் கைக் கடல் தானை
புடை சூழக், கழல் கால் வேந்தன்,
செழும் தோடும் பல் கலனும் வில் வீச,
மாகதர்கள் திரண்டு பாட,
எழுந்து ஓடும் உவகையுடன், யோசனை சென்றான்,
அரசை எதிர்கோள் எண்ணி. - 1.5.59
239 - உரோமபதன் வணங்கத் தசரதன் தழுவுதல்
எதிர் கொள்வான் வருகின்ற வய வேந்தன்
தனைக் கண்ணுற்று, எழிலி நாண
அதிர்கின்ற பொலம் தேர் நின்று அரசர் பிரான்
இழிந்துழிச் சென்று அடியின் வீழ,
முதிர்கின்ற பெரும் காதல் தழைத்து ஓங்க,
எடுத்து இறுக முயங்கலோடும்,
கதிர் கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி,
இவை உரைத்தான் களிப்பின் மிக்கான். - 1.5.60
240 - தசரதனை உரோமபதன் நகருக்கு அழைத்து வருதல்
"யான் செய்த மா தவமோ? இவ் உலகம் செய்
தவமோ? யாதோ? இங்கண்
வான் செய்த சுடர் வேலோய்! அடைந்தது?" என,
மனம் மகிழா, மணித் தேர் ஏற்றித்,
தேன் செய்த தார் மௌலித் தேர் வேந்தைச்
செழு நகரில் கொணர்ந்தான், தெவ்வர்
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன்
என்று உரைக்கும் உரவுத் தோளான். - 1.5.61
241 - உரோமபதன் தசரதனுக்கு விருந்தளித்தல்
ஆடகப் பொன் சுடர் இமைக்கும் மணி மாடத்து
இடை ஓர் மண்டபத்தை அண்ணிப்,
பாடகச் செம் பதும மலர்ப் பாவையர்
பல்லாண்டு இசைப்பப், பைம் பொன் பீடம் அத்து
ஏடு துற்ற வடி வேலோன் தனை இருத்திக்,
கடன் முறைகள் யாவும் ஈந்து,
தோடு துற்ற மலர்த் தாரான் விருந்து அளிப்ப,
இனிது உவந்தான் சுரர் நாடு ஈந்தான். - 1.5.62
242 - தசரதன் அயோத்தி மீளுதல்
செவ்வி நறும் சாந்து அளித்துத் தேர் வேந்தன்
தனை நோக்கி,'இவண் நீ சேர்ந்த
கவ்வை உரைத்து அருளுக' என, நிகழ்ந்த
பரிசு அரசர் பிரான் கழறலோடும்,
'அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும்
தவனைக் கொணர்ந்து ஆங்கண் விடுப்பென், ஆன்ற
செவ்வி முடியோய்!' எனலும், தேர் ஏறிச்
சேனை ஒடும் அயோத்தி சேர்ந்தான். - 1.5.63
243 - வரம் இரத்தல் உரோமபதன் கலைக்கோட்டுமுனியிடம்
மன்னர் பிரான் அகன்ற அதன் பின் வய வேந்தன்
அரு மறை நூல் வடிவு கொண்டது
அன்ன முனிவரன் உறையுள் தனை அணுகி,
அடி இணைத் தாமரைகள் அம் பொன்
மன்னும் மணி முடி அணிந்து, வரன்முறை செய்திட,
"இவண் நீ வருதற்கு ஒத்தது
என்னை?" என, "அடியேற்கு ஓர் வரம் அருளும்
அடிகள்!" என, "யாவது?' என்றான். - 1.5.64
244 - உரோமபதன் கலைக்கோட்டுமுனியை அயோத்திக்குப் போய்வர வேண்டுதல்
'புறவு ஒன்றின் பொருட்டு ஆகத் துலை புக்க
பெரும் தகை தன் புகழில் பூத்த
அறன் ஒன்றும் திரு மனத்தான், அமரர்களுக்கு
இடர் இழைக்கும் அவுணர் ஆயோர்
திறல் உண்ட வடி வேலான், தசரதன், என்று
உயர் கீர்த்திச் செங்கோல் வேந்தன்,
விறல் கொண்ட மணி மாட அயோத்தி நகர்
அடைந்து, இவண் நீ மீடல்' என்றான். - 1.5.65
245 - கலைக்கோட்டுமுனி அயோத்திக்குப் புறப்படுதல்
'அவ் வரம் தந்தனம், இனித் தேர் கொணர்தி' என
அரும் தவத்தோன் அறைதலோடும்,
வெவ் அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன்,
அடி இறைஞ்சி, "வேந்தர் வேந்தன்
கவ்வை ஒழிந்து உயர்ந்தனன்" என்று, அதிர் குரல் தேர்
கொணர்ந்து, "இதனில் கலை வலாள!
செவ்வி நுதல் திருவின் ஒடும் போந்து ஏறுக"
என, ஏறிச் சிறந்தான் மன் ஓ. - 1.5.66
246 - கலைக்கோட்டுமுனி தேரிற் செல்லுதல்
குனி சிலை வயவனும் கரங்கள் கூப்பிடத்,
துனி அறு முனிவரர் தொடர்ந்து சூழ்வர,
வனிதையும், அரும் மறை வடிவு போன்று ஒளிர்
முனிவனும் பொறி மிசை நெறியை முன்னினார். - 1.5.67
247 - தேவர்களின் மகிழ்ச்சி
அந்தர துந்துமி முழக்கி, ஆய் மலர்
சிந்தினர், களித்தனர், அறமும், தேவரும்,
'வெந்து எழு கொடும் வினை வீழ்க்கும் மெய்ம் முதல்
வந்து எழ அருள் தருவான்!' என்று எண்ணியே. - 1.5.68
248 - கலைக்கோட்டு முனிவரவைத் தசரதன் அறிதல்
தூதுவர், அவ் வழி அயோத்தி துன்னினார்,
மாதிரம் பொருத தோள் மன்னர் மன்னன் முன்
ஓதினர் முனிவரவு: ஓத, வேந்தனும்,
காதல் என்று அளவு அறு கடல் உள் ஆழ்ந்தனன். - 1.5.69
249 - முனியை எதிர்கொளத் தசரதன் எழுதல்
எழுந்தனன் பொருக்கென, இரதம் ஏறினன்;
பொழிந்தன மலர் மழை; ஆசி பூத்தன;
மொழிந்தன பல் இயம்; முரசம் ஆர்த்தன;
விழுந்தன தீவினை வேர் இன் ஓடும் ஏ. - 1.5.70
250 - 'பிதிர்ந்தது எம் மனத் துயர்ப் பிறங்கல்' என்றுகொண்டு,
அதிர்ந்து எழு முரசு உடை அரசர் கோமகன்,
முதிர்ந்த மா தவம் உடை முனியைக் கண்களால்
எதிர்ந்தனன், யோசனை இரண்டு ஒடு ஒன்றின் ஏ. - 1.5.71
251 - நல் தவம் அனைத்தும் ஓர் நவை இலா உருப்
பெற்று இவண் அடைந்து எனப் பிறங்குவான் தனைச்,
சுற்றிய சீரையும், உழையின் தோற்றமும்,
முற்றுறப் பொலிதரு மூர்த்தியான் தனை. - 1.5.72
252 - அண்டர்கள் துயரமும் அரக்கர் ஆற்றலும்
விண்டிடப் பொலிதரும் வினை வலாளனைக்,
குண்டிகை குடை ஒடு குலவு நூல் முறைத்
தண் ஒடு பொலிதரு தட கையான் தனை. - 1.5.73
253 - கலைக்கோட்டுமுனியைத் தசரதன் வணங்குதல்
இழிந்து போய் இரதம் ஆண்டு இணை கொள் தாள் மலர்
விழுந்தனன் வேந்தர்தம் வேந்தன்; மெய்ம்மையால்
மொழிந்தனன் ஆசிகள், முதிய நால் மறைக்
கொழுந்து மேல் படர்தரக் கொளு கொம்பு ஆயினான். - 1.5.74
254 - கலைக்கோட்டுமுனியை அழைத்துப் போதல்
அயல் வரும் முனிவரும் ஆசி கூறிடப்
புயல் பொழி தட கையால் தொழுது, பொங்கு நீர்க்
கயல் பொரு விழியொடும், கலை வலாளன் ஐ,
இயல்பொடு கொணர்ந்தனன் இரதம் ஏற்றியே. - 1.5.75
255 - தசரதனும் முனியும் அயோத்தி அடைதல்
அடி குரல் முரசு அதிர் அயோத்தி மா நகர்,
முடி உடை வேந்தன், அம் முனிவன் ஓடு உம், ஓர்
கடிகையின் அடைந்தனன், கமல வாள் முக
வடிவு உடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே. - 1.5.76
256 - வசிட்டனும் கலைக்கோட்டுமுனியும் அவையை அடைதல்
கசடு உறு வினைத் தொழில் கள்வர் ஆய் உழல்
அசட்டர்கள் ஐவரை அறுவர் ஆக்கிய
வசிட்டனும், அரு மறை வழக்கு நீங்கலா
விசிட்டனும், வேந்து அவை விதியின் மேவினார். - 1.5.77
257 - கலைக்கோட்டுமுனியை உபசரித்தல்
மா மணி மண்டபம் மன்னி மாசு அறு
தூ மணித் தவிசு இடைச் சுருதியே நிகர்
கோ முனிக்கு அரசனை இருத்திக் கொள் கடன்
ஏம் உறத் திருத்தி வேறு இனைய செப்பினான். - 1.5.78
258 - தசரதன் கலைக்கோட்டுமுனியைத் துதித்தல்
'சான்றவர் சான்றவ! தரும மாதவம்
போன்று ஒளிர் புனித! நின் அருளில் பூத்த என்
ஆன்ற தொல் குலம் இனி அரசின் வைகும் ஆல்:
யான் தவம் உடைமையும் இழப்பு இன்று ஆம், அரோ!' - 1.5.79
259 - என்னலும், முனிவரன் இனிதின் நோக்கு உறா,
'மன்னவர் மன்ன! கேள்! வசிட்டன் என்னும் ஓர்
நல் நெடும் தவன் துணை நவை இல் செய்கையால்
நின்னை இவ் உலகினில் நிருபர் நேர்வர் ஓ?' - 1.5.80
260 - என்றன பல பல இனிமை கூறி,' நல்
குன்று உறழ் வரி சிலைக் குவவுத் தோளினாய் !
நன்றி கொள் அரி மகம் நடத்த எண்ணியோ
இன்று எனை அழைத்தது இங்கு? இயம்புவாய்!' என்றான். - 1.5.81
261 - தசரதன் புதல்வனில்லாக்குறையைப் போக்கவேண்டுதல் (261-262)
எனக் கலை மா முகச் சிருங்கன் இவ் உரை
தனைச் சொலத், தரணிபர்க்கு அரசன் தான் மகிழ்ந்து,
அனைத்து உலகு உயிர் ஒடு உம் அறங்கள் உய்யத், தன்
மனத் துயர் அகன்றிட, வணங்கிக் கூறுவான். - 1.5.82
262 - 'உலப்பு இல் பல் ஆண்டு எலாம் உறுகண் இன்றியே
தலம் பொறை ஆற்றினென், தனயர் வந்திலர்;
அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை,
நலப் புகழ் பெற, இனி, நல்க வேண்டும், ஆல்.' - 1.5.83
263 - கலைக்கோட்டுமுனி மாமகம் தொடங்கச் செல்லுதல்
என்றலும்,'அரச! நீ இரங்கல்! இவ் உலகு
ஒன்றுமோ? உலகம் ஈர் ஏழும் ஓம்பிடும்
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்,
இன்று நீ இயற்றுதற்கு எழுக ஈண்டு' என்றான். - 1.5.84
264 - தசரதன் வேள்விச்சாலையிற் புகுதல்
ஆயதற்கு உரியன கலப்பை யாவையும்
ஏயெனக் கொணர்ந்தனர்; நிருபர்க்கு ஏந்தலும்
தூய நல் புனல் படீஇச், சுருதி நூல் முறை
சாய்வு அறத் திருத்திய சாலை புக்கனன். - 1.5.85
265 - ஓர் ஆண்டு அசுவமேதயாகம் செய்தல்
முழங்கு அழல் மும்மையும் முடுகி, ஆகுதி
வழங்கியே, ஈர் அறு திங்கள் வாய்த்த பின்,
தழங்கின துந்துமி; தா இல் வானகம்
விழுங்கினர் விண்ணவர் வெளி இன்று என்ன ஏ. - 1.5.86
266 - புத்திரகாமயாகம் செய்தல்
முகம் மலர் ஒளிர் தர மொய்த்து, வான் உளோர்
அகம் விரை நறு மலர் தூவி ஆர்த்து எழத்,
தகவு உடை முனியும், அத் தழலின் நாப் பண் ஏ
மகவு அருள் ஆகுதி வழங்கினான், அரோ. - 1.5.87
267 - பூதம் சுதைப்பிண்டத்துடன் எழுதல்
அ இடை கனலில் நின்று, அம் பொன் தட்டம் மீத்
தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று, சூழ்
தீ எரிப் பங்கியும் சிவந்த கண்ணுமாய்,
ஏயெனப், பூதம் ஒன்று, எழுந்தது, ஏந்தியே. - 1.5.88
268 - கலைக்கோட்டுமுனி பிண்டத்தை மனைவியர்க்குப் பகிரச்சொல்லுதல்
வைத்தது தரை மிசை, மறித்தும் அவ் வழித்
தைத்தது பூதம்; அத் தவனும் வேந்தனை,
'உய்த்த நல் அமிர்தினை உரிய மாதர்கட்கு
அத்தகு மரபினால், அளித்தி ஆல்!' என்றான் . - 1.5.89
269 - தசரதன் கௌசலைக்கு ஒருபங்கு கொடுத்தல்
மாமுனி அருள் வழி மன்னர் மன்னவன்
தூம மென் சுரி குழல் தொண்டைத் தூய வாய்க்
காமர் ஒண் கௌசலை கரத்தின் ஓர் பகிர்
தாம் உற அளித்தனன் சங்கம் ஆர்த்து எழ. - 1.5.90
270 - தசரதன் கைகேயிக்கு ஒருபங்கு கொடுத்தல்
கைகயன் தனயை தன் கரத்தும், அ முறை
செய்கையின், அளித்தனன், தேவர் ஆர்த்து எழப்,
பொய்கையும் நதிகளும் பொழிலும் ஓதிமம்
வைகுறு கோசல மன்னர் மன்னன் ஏ. - 1.5.91
271 - தசரதன் சுமித்திரைக்கு ஒருபங்கு கொடுத்தல்
நமித்திரர் நடுக்கு உறு நலம் கொள் மொய்ம்பு உடை
நிமித் திரு மரபு உளான், முன்னர் நீர்மையின்
சுமித்திரைக்கு அளித்தனன், சுரர்க்கு வேந்து,'இனிச்
சமித்தது என் பகை' எனத் தமர் ஒடு ஆர்ப்ப ஏ. - 1.5.92
272 - உதிர்ந்தவற்றையும் சுமித்திரைக்கு அளித்தல்
பின்னும் அப் பெரும் தகை, பிதிர்ந்து வீழ்ந்தது
தன்னையும், சுமித்திரை தனக்கு நல்கினான் ,
ஒன்னலர்க்கு இடமும், வேறு உலகின் ஓங்கிய
மன் உயிர் தமக்கு நீள் வலமும் துள்ள ஏ. - 1.5.93
273 - தசரதன் யாகசாலையினின்று எழுதல்
வாம் பரி வேள்வியும், மகாரை நல்குவது
ஆம் புரை ஆவுதி பிறவும், அந்தணன்
ஓம்பிட, முடிந்த பின், உலகு காவலன்
ஏம்பலொடு எழுந்தனன் யாரும் ஏத்தவே. - 1.5.94
274 - தசரதன் அவையை அடைதல்
முருடு அரு பல் இயம் முழங்கி ஆர்த்தன;
இருள் தரும் உலகமும் இடரின் நீங்கின;
தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி,
அருள் தரும் அவையின் வந்து அரசன் எய்தினான். - 1.5.95
275 - தசரதன் அந்தணர்க்குத் தட்சிணைகொடுத்தல்
செய்ம் முறை கடன் முறை திறம்பல் இன்றியே,
மெய்ம் முறை கடவுளுக்கு ஈந்து, விண் உளோர்க்கு
அம்முறை அளித்து, நீடு அந்தணாளர்க்கும்
கை முறை அளித்தனன், கனக மாரியே. - 1.5.96
276 - தசரதன் நீராடல்
வேந்தர்கட்கு அரசொடு, வெறுக்கை, தேர், பரி,
வாய்ந்த நல் துகிலொடு, வரிசைக்கு ஏற்பன,
ஈந்தனன், பல் இயம் துவைப்ப ஏகி நீர்
தோய்ந்தனன், சரயு நல் துறை கண் எய்தியே. - 1.5.97
277 - தசரதன் அவையில்வந்து வசிட்டனை வணங்குதல்
முரசு இனம் கறங்கிட முத்த வெண் குடை
விரசி மேல் நிழற்றிட, வேந்தர் சூழ்தர,
அரசு அவை அடைந்துழி, அயனும் நாண் உற,
உரைசெறி முனிவன் தாள் வணங்கி ஓங்கினான். - 1.5.98
278 - தசரதன் கலைக்கோட்டுமுனியை வணங்குதல்
அரிய நல் தவம் உடை வசிட்டன் ஆணை ஆல்,
இரலை நல் சிருங்கமா இறைவன் தாள் தொழா,
உரிய பல் பல உரை பயிற்றி, 'உய்ந்தனன்,
பெரிய நல் தவ! இனிப் பெறுவது யாது?' என்றான். - 1.5.99
279 - கலைக்கோட்டுமுனி வழிக்கொண்டேகுதல்
'எந்தை! நின் அருளினால் இடரின் நீங்கி ஏ
உய்ந்தனன் அடியனேன்' என்ன, ஒள் தவன்,
சிந்தையுள் மகிழ்ச்சியால் வாழ்த்தித், தேர் மிசை
வந்த மா தவரொடும் வழி கொண்டு ஏகினான். - 1.5.100
280 - மற்றை முனிவரும் ஆசிகூறி ஏகுதல்
வாங்கிய துயர் உடை மன்னன், பின்னரும்,
பாங்கு உடை முனிவர் தாள் பழிச்சி ஏத்தல் கொண்டு,
ஓங்கிய உவகையர் ஆசியோடு எழா,
நீங்கினர், இருந்தனன் நேமி வேந்தனே. - 1.5.101
281 - மனைவிமார் வயாக்கொள்ளுதல்
தெரிவையர் மூவரும், சிறிது நாள் செலீஇ,
மருவிய வயாவொடு வருத்தம் துய்த்து, அவர்
பொருவு அரு திரு முகம் அன்றிப், பொற்பு நீடு
உருவமும், மதியமோடு ஒப்பத் தோன்றினார். - 1.5.102
282 - கோசலை இராமனைப்பெறுதல் (282-284)
அ இடை பருவம் வந்து அடைந்த எல்லையின்,
மா இரும் புவி மகள் மகிழ்வின் ஓங்கிட,
வேய் புனர்பூசமும், விண் உளோர் புகழ்
தூய கர்க்கடகமும், எழுந்து துள்ளவே. - 1.5.103
283 - சித்தரும், இயக்கரும், தெரிவைமார்களும்,
வித்தக முனிவரும், விண் உளோர்களும்,
நித்தரும், முறை முறை நெருங்கி ஆர்ப்பு உறத்,
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே. - 1.5.104
284 - ஒரு பகல் உலகு எலாம் உதரம் அத்து உள் பொதிந்து
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்
கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்,
திரு உறப், பயந்தனள் திறம் கொள் கோசலை. - 1.5.105
285 - கைகேயி பரதனைப்பெறுதல்
ஆசையும் விசும்பும் நின்று அமரர் ஆர்த்து எழ,
வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்து உறப்,
பூசமும் மீனமும் பொலிய நல்கினாள்
மாசு அறு கேகயன் மாது மைந்தனை. - 1.5.106
286 - சுமித்திரை இலக்குமணனைப்பெறுதல்
தளை அவிழ் தரு உடைச் சயிலகோபனும்
கிளையும் அந்தரம் மிசைக் கெழுமி ஆர்த்து எழ,
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வு உற
இளையவள் பயந்தனள் இளைய வீரனை. - 1.5.107
287 - சுமித்திரை சத்துருக்கனைப் பெறுதல்
படம் கிளர் பல் தலைப் பாந்தள் ஏந்து பார்
நடம் கிளர்தர , மறை நவில நாடகம்,
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட,
விடம் கிளர் விழியினாள் மீட்டும் ஈன்றனள். - 1.5.108
288 - வானத்தவர்கொண்ட மகிழ்ச்சி
ஆடினர் அரம்பையர்; அமுத ஏழ் இசை
பாடினர் கின்னரர்; துவைத்த பல் இயம்!
வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால்,
ஓடினர் உலவினர் உம்பர் முற்றும் ஏ. - 1.5.109
289 - சோதிடர் நாட்கணித்தல்
ஓடினர் அரசன் மாட்டு, உவகை கூறி நின்று,
ஆடினர் சிலதியர்; அந்தணாளர்கள்
கூடினர், நாளொடு கோளும் நின்றமை
நாடினர், உலகு இனி நவை இன்று என்றனர். - 1.5.110
290 - தசரதன் குழந்தைகள்முகம் பார்த்தல்
மா முனி தன்னொடு, மன்னர் மன்னவன்,
ஏம் உறு புனல் படிந்து, இசைந்த ஒண் பொருள்
ஆம் முறை வழங்கி, வெண் சங்கம் ஆர்ப்பு உறக்,
கோமகர் திரு முகம் குறுகி நோக்கினான். - 1.5.111
291 - முரசறையுமாறு தசரதன் கட்டளையிடுதல் (291-293)
'இறை தவிர்ந்திடுக பார் யாண்டு ஒர் ஏழ் ஒடு ஏழ்,
நிறை நிதிச் சாலை தாழ் நீக்கி யாவையும்
முறை கெட வறியவர் முகந்து கொள்க; என
அறை பறை!' என்றனன், அரசர் கோமகன். - 1.5.112
292 - 'படை ஒழிந்திடுக; தம் பதிகளே இனி
விடைபெறுகுக முடி வேந்தர்; வேதியர்
நடை உறு நியமமும் நவை இன்று ஆகுக;
புடை கெழு விழா ஒடு பொலிக எங்கணும்.' - 1.5.113
293 - 'ஆலையம் புதுக்குக; அந்தணாளர்தம்
சாலையும் சதுக்கமும் சமைக்க சந்தியும்;
காலையும் மாலையும் கடவுளர்க்கு அணி
மாலையும் தூபமும் வழங்குக!' என்றனன். - 1.5.114
294 - நகரமாந்தர் மகிழ்தல் (294-298)
என்புழி, வள்ளுவர் யானை மீ மிசை
நன் பறை அறைந்தனர்; நகர மாந்தரும்,
மின் பிறழ் நுசுப்பினார் தாமும், விம்மல் ஆல்
இன்பம் என்று அளக்க அரும் அளக்கர் எய்தினார். - 1.5.115
295 - ஆர்த்தனர் முறை முறை, அன்பினால் உடல்
போர்த்தனர் புளகம், வேர் பொடித்த, நீள் நிதி
தூர்த்தனர் எதிர் எதிர் சொல்லினார்க்கு எலாம்;
தீர்த்தன் என்று அறிந்தது ஓ அவர் தம் சிந்தை ஏ! - 1.5.116
296 - பண்ணையும், ஆயமும், திரளும், பாங்கரும்,
கண் அகன் திரு நகர் களிப்புக் கைம்மிகுந்து
எண்ணெயும் களபமும் இழுதும் நானமும்
சுண்ணமும் தூவினார் வீதி தோறும் ஏ. - 1.5.117
297 - சுந்தரப் பொடிகளும் செம் பொற் சுண்ணமும்
சந்தனம் நீரொடும் கலந்து தையலார்
பந்தியில் சிவிறியால் சிதறப் பார் மிசை
இந்திரவில் எனக் கிடந்தது எங்கும் ஏ. - 1.5.118
298 - இ தகை மா நகர், ஈர் அறு நாளும்,
சித்தம் உறும் களியோடு சிறந்து ஏ,
தம் தமை ஒன்றும் உணர்ந்தில; தாவா
மெய் தவன் நாமம் விதிப்ப மதித்தான். - 1.5.119
299 - இராமன் எனப் பெயரிடுதல்
கரா மலையத் தளர் கை கரி, எய்த்து ஏ,
'அரா அணையில் துயில்வோய்! 'என அ நாள்,
விராவி அளித்து அருள் மெய்ப் பொருளுக்கு ஏ
'இராமன்' எனப் பெயர் ஈந்தனன், அன்று, ஏ. - 1.5.120
300 - பரதன் எனப் பெயரிடுதல்
கரம் தலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப,
விரதம் மறைப் பொருள் மெய்ந் நெறி கண்ட
வரதன், உதித்திடும் மற்றைய ஒளியைப்
'பரதன்' எனப் பெயர் பன்னினன், அன்று, ஏ. - 1.5.121
301 - இலக்குவன் எனப் பெயரிடுதல்
'உலக்குநர் வஞ்சகர்; உம்பரும் உய்ந்தார்;
நிலம் கொடி உம் துயர் நீத்தனள்! இந்த
விலக்கு அரு மொய்ம்பின் விளங்கு ஒளி நாமம்,
இலக்குவன்' என்ன இசைத்தனன், அன்று, ஏ, - 1.5.122
302 - சத்துருக்கன் எனப் பெயரிடுதல்
முத்து உருக் கொண்டு செம் முளரி அலர்ந்தால்
ஒத்து இருக்கும் எழில் உடைய இவ் ஒளியால்,
எத்திருக்கும் கெடும், என்பதை எண்ணாச்,
'சத்துருக்கன்' எனச் சாற்றினன் நாமம். - 1.5.123
303 - பெயரிட்டபோது தசரதன் தானச்சிறப்பு
பொய் வழி இல் முனி புகல் தரு முறையால்,
இ வழி பெயர்கள் இசைத்துழி, இறைவன்
கை வழி நிதி எனும் நதி கலை மறையோர்
மெய் வழி உவரி நிறைத்தன மேல் மேல். - 1.5.124
304 - தசரதனுக்கு இராமனிடத்து அன்பு
காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே
ஓவிய எழில் உடை ஒருவனை அலது, ஓர்
ஆவியும் உடலமும் இலது என, அருளின்
மேவினன் உலகு உடை வேந்தர் தம் வேந்தன். - 1.5.125
305 - குமாரர் வளர்கை
அமிர்து உகு குதலையோடு அணி நடை பயிலாத்,
திமிரம் அது அற வரு தினகரன் எனவும்,
தமரம் அது உடன் வளர் சதுர் மறை எனவும்,
குமரர்கள், நிலமகள் குறைவு அற, வளர் நாள். - 1.5.126
306 - வசிட்டன் கல்வி கற்பித்தல்
சவுளமொடு உபநயனமும் முறை தருகுற்று,
இ அளவது என ஒரு கரை பிறிது இல வாய்,
உவள் அரு மறையின் ஒடு ஒழிவு அறு கலையும்,
தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே. - 1.5.127
307 - குமாரர்கள் படைபயிலுதல்
யானையும் இரதமும் இவுளியும் முதல் ஆ
ஏனைய பிறவும் அவ் இயல்பினின் அடையுற்று
ஊன் உறு படைபல சிலையொடு பயிலா
வானவர் தனி முதல் கிளையொடும் வளர. - 1.5.128
308 - எல்லாரும் குமாரர்களைவிரும்பி அணுகுதல்
அரு மறை முனிவரும், அமரரும், அவனித்
திருவும், அ நகர் உறை செனமும், 'நம் இடரோடு
இரு வினை துணிதரும் இவர்களின் இவண் நின்று
ஒரு பொழுது அகல்கிலம், முறை' என உறுவார். - 1.5.129
309 - இராமனும் இலக்குவனும்
ஐயனும் இளவலும் அணி நில மகள் தன்
செய் தவம் உடைமைகள் தெரிதர நதியும்,
மைதவழ் பொழில்களும் வாவியும் மருவி,
நெய் குழல் உறும் இழை என நிலை திரிவார். - 1.5.130
310 - பரதனும் சத்துருக்கனும்
பரதனும் இளவலும் ஒரு நொடி பகிராது
இரதமும் இவுளியும் இவரினும், மறை நூல்
உரைதரு பொழுதினும் ஒழிகிலர், எனை ஆள்
வரதனும் இளவலும் என மருவினர் ஏ. - 1.5.131
311 - குமாரர்கள் முனிவர்களிடம்சென்று மாலை நகர் மீளுதல்
வீரரும் இளைஞரும் வெறி பொழில்களின் வாய்
ஈரமொடு உறைதரு முனிவரர் இடை போய்ச்
சோர் பொழுது அணி நகர் துறுகுவர் எதிர்வார்
கார் வர அலர் பயிர் பொருவுவர் களியால். - 1.5.132
312 - குமாரர்களுக்காக எல்லாரும் கடவுளரை வேண்டுதல்
ஏழையர் அனைவரும் இவர் தட முலை தோய்
கேழ் கிளர் மதுகையர் கிளைகளும் இனையார்
வாழிய என அவர் மனன் உறு கடவுள்
தாழ்குவர் கவுசலை தயரதன் எனவே. - 1.5.133
313 - இராம இலக்குவர்க்கு உவமைகூறுதல்
”கடல் தரு முகில் ஒளிர் கமலம் அது அலரா
வட வரையுடன் வரு செயல் என, மறையும்
தடவுதல் அறிவு அரு தனி முதலவனும்
புடைவரும் இளவலும் என நிகர் புகல்வார். - 1.5.134
314 - இராமன் நகரத்தாரை நலம்வினாவுதல்
எதிர் வரும் அவர்களை எமை உடை இறைவன்,
முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா,
'எது வினை? இடர் இலை? இனிது நும் மனையும்?
மதிதரு குமரரும் வலியர் கொல்?' எனவே. - 1.5.135
315 - இராமனுக்கு மக்கள் விடை அளித்தல்
அஃது,'ஐய! நினை எமது அரசு என உடையேம்;
இஃது ஒரு பொருள் அல; எமது உயிருடன் ஏழ்
மகிதலம் முழுதையும் உறுக, இ மலரோன்
உகு பகல் அளவு?' என உரை நனி புரிவார். - 1.5.136
316 - உலகம்புகழ, தம்பியர் ஏத்த இராமன் இனிதுவாழ்தல்
இப் பரிசு அணி நகர் உறையும் யாவரும்
மெய்ப் புகழ் புனைதர இளைய வீரர்கள்
தப்பு அற அடி நிழல் தழுவி ஏத்துற
முப்பரம் பொருளுக்கு முதல்வன் வைகுறும். - 1.5.137
317 - தசரதனுடைய பெருமகிழ்ச்சி
அரசர் தம் பெருமகன், அகிலம் யாவையும்
விரசு உறு தனி குடை விளங்க, வென்றி சேர்
முரசு ஒலி கறங்கிட, முனிவர் ஏத்துறக்,
கரை செயல் அரியது ஓர் களிப்பின் வைகும் நாள். - 1.5.138
1.6 . கையடைப் படலம் (318 - 341 )
318 - தசரதன் அரசவை யடைதல்
நனை வரு கற்பக நாட்டு நல் நகர்
வனை தொழில் மதிமிகு மயற்கும் சிந்தையால்
நினையவும் அரியது, விசும்பின் நீண்டது, ஓர்
புனை மணி மண்டபம், பொலிய எய்தினான். - 1.6.1
319 - தசரதன் அரியணையில் அமர்ந்த தோற்றம்
தூய மெல் அரியணைப் பொலிந்து தோன்றினான்;
சேய் இரு விசும்பு இடைத் திரியும் சாரணர்,
'நாயகன் இவன் கொல்?' என்று அயிர்த்து,'நாட்டம் ஓர்
ஆயிரம் இல்லை ' என்று ஐயம் நீங்கினார். - 1.6.2
320 - விசுவாமித்திரன் வருதல்
மடங்கல் போல் மொய்ம்பின் ஆன் முன்னர்,"மன் உயிர்
அடங்கலும் உலகும் வேறு அமைத்துத் தேவரோடு
இடம் கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு" எனாத்
தொடங்கிய கோசிக முனிவன் தோன்றினான். - 1.6.3
321 - தசரதன் விசுவாமித்திர முனிவனை வரவேற்றல் (321-322)
வந்து முனி எய்துதலும், மார்பின் அணி ஆரம்
அந்தரம் தலம் அத்து இரவி அஞ்ச ஒளி விஞ்சக்
கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும்
இந்திரன் எனக் கடிது எழுந்து, அடி பணிந்தான். - 1.6.4
322 - தசரதன் முனிவற்கு இருக்கையீந்து வழிபட்டு
இன்மொழி கூறல் (322-323)
பணிந்து, மணி செற்றுபு குயிற்றி அவிர் பைம் பொன்
அணிந்த தவிசு இட்டு, அதின் அருத்தியொடு இருத்தி
இணைந்த கமலச் சரண் அருச்சனை செய்து 'இன்றே
துணிந்தது என் வினை தொடர்பு' எனத் தொழுது சொல்லும். - 1.6.5
323 - நிலம் செய் தவம் என்று உணரின் அன்று, நெடியோய்! என்
நலம் செய் வினை உண்டு எனினும் அன்று, நகர் நீ யான்
வலம் செய்து வணங்க எளிவந்த இது, முந்து என்
குலம் செய் தவம் என்று இனிது கூற, முனி கூறும். - 1.6.6
324 - விசுவாமித்திரமுனிவன் தசரதனைப் புகழ்தல் (324-325)
என் அனைய முனிவரரும் இமையவரும்
இடையூறு ஒன்று உடையர் ஆனால்
பல் நகமும் நகு வெள்ளிப் பனி வரை
பால் கடல் உம் பதும பீடத்து
தன் நகரும் கற்பக நாட்டு அணி நகர் உம்
மணி மாட அயோத்தி என்னும்
பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ?
இகல் கடந்த புலவு வேலோய்! - 1.6.7
325 - இன் தளிர்க் கற்பகம் நறும் தேன் இடை துளிக்கும்
நிழல் இருக்கை இழந்து போந்து
நின் தளிக்கும் தனிக் குடையின் நிழல் ஒதுங்கிக்,
குறை இரந்து நிற்ப, நோக்கிக்
குன்று அளிக்கும் குலம் மணித் தோள் சம்பரனைக்
குலத்தோடும் தொலைத்து, நீ கொண்டு,
அன்று அளித்த, அரசு அன்று ஓ புரந்தரன்
இன்று ஆள்கின்றது; அரச! என்றான். - 1.6.8
326 - தசரதன் முனிவன்பால் யான்செய்வது அருளுக என்றல்
உரைசெய்த அளவில் அவன் முகம் நோக்கி,
உள்ளத்தின் ஒருவராலும்
கரை செய்தல் அரியது ஒரு பேர் உவகைக்
கடல் பெருகக் கரங்கள் கூப்பி,
'அரைசு எய்தி இருந்த பயன் எய்தினன்; மற்று
இனிச் செய்வது அருளுக' என்று
முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழியப்
பின் மொழியும் முனிவன் ஆங்கே. - 1.6.9
327 - முனிவன், வேள்விகாக்க இராமனைத் தருதி எனல்
"தரு வனத்துள் யான் இயற்றும் தவ வேள்விக்கு
இடையூறாத் தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி
என நிருதர் இடை விலக்காவண்ணம்
செரு முகத்து காத்தி என நின் சிறுவர்
நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி” என உயிர் இரக்கும்
கொடுங் கூற்றின் உளையச் சொன்னான். - 1.6.10
328 - தசரதன் துயர் உறுதல்
எண் இலா அருந்தவத்தோன் இயம்பிய சொல்,
மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தால்
எனச் செவியில் புகுதலோடும்,
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த
ஆர் உயிர் நின்று ஊசல் ஆடக்
கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான்
கடும் துயரம் கால வேலான். - 1.6.11
329 - தசரதன் யானேகாப்பேன், வேள்விக்கு எழுக எனல்
தொடை ஊற்றில் தேன் துளிக்கும் நறும் தாரான்
ஒரு வண்ணம் துயரம் நீங்கிப்
'படையூற்றம் இலன்; சிறியன் இவன்; பெரிபோய்!
பணி இதுவேல், பனி நீர்க் கங்கை
புடை ஊற்றும் சடையானும் நான்முகனும்
புரந்தரனும் புகுந்து செய்யும்
இடையூற்றுக்கு இடையூறு ஆ, யான் காப்பென்
பெரு வேள்விக்கு எழுக' என்றான். - 1.6.12
330 - விசுவாமித்திரமுனிவன் வெகுளுதல்
என்றனன்; என்றலும், முனிவோடு எழுந்தனன், மண்
படைத்த முனி; 'இறுதி காலம்
அன்று' என 'ஆம்' என இமையோர் அயிர்த்தனர்; மேல்
வெயில் கரந்தது; அங்கும் இங்கும்
நின்றனவும் திரிந்தன; மீ நிவந்த கொழுங்
கடைப் புருவம், நெற்றி முற்றச்
சென்றன; வந்தது நகையும்; சிவந்தன கண்;
இருண்டன போய்த் திசைகள் எல்லாம். - 1.6.13
331 - வசிட்டமுனிவன் தசரதனுக்கு உறுதிகூறுதல் (331-332)
கறுத்த மா முனி கருத்தை உன்னி, நீ
பொறுத்தி என்று அவற் புகன்று,'நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்,
மறுத்தி ஓ?' எனா வசிட்டன் கூறினான். - 1.6.14
332 - 'பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய்
மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறு போல்,
ஐய! நின் மகற்கு, அளவில் விஞ்சை வந்து
எய்து காலம் இன்று எதிர்ந்தது' என்ன ஏ. - 1.6.15
333 - தசரதன் அழைக்க இராமன் வருதல்
குருவின் வாசகம் கொண்டு, கொற்றவன்,
'திருவின் கேள்வனைக் கொணர்மின் சென்று' என,
"வருக' என்றனன்” என்னல் ஓடு உம், வந்து,
அருகு சார்ந்தனன்,அறிவின் உம்பரான். - 1.6.16
334 - ஒஇராமலக்குமணரைத் தசரதன் விசுவாமித்திரனிடம்
ப்படைத்தல்
வந்த நம்பியைத் தம்பி தன்னோடு
முந்தை நால் மறை முனிக்குக் காட்டி,'நல்
தந்தை நீ,தனித் தாயும் நீ, இவர்க்கு
எந்தை! தந்தனன்; இயைந்த செய்க' என்றான். - 1.6.17
335 - இராமலக்குவருடன் விசுவாமித்திரமுனிவன் புறப்படுதல்
கொடுத்த மைந்தரைக் கொண்டு, சிந்தை முந்து
எடுத்த சீற்றம் விட்டு, இனிது வாழ்த்தி, மேல்
'அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம்' எனா
நடத்தல் மேயினான் நவை கண் நீங்கினான். - 1.6.18
336 - இராமன் படைக்கலம் தாங்குதல்
வென்றி வாள் புடை விசித்து, மெய்ம்மை போல்
என்றும் தேய்வு உறாத் தூணி யாத்து இரு
குன்றம் போன்று உயர் தோளில், கொற்றம் வில்
ஒன்று தாங்கினான்; உலகம் தாங்கினான். - 1.6.19
337 - இராமன் இலக்குமணனுடன் முனிவன்பின் செல்லுதல்
அன்ன தம்பியும் தானும், ஐயன் ஆம்
மன்னன் இன் உயிர் வழிக் கொண்டால் எனச்
சொன்ன மாதவன் தொடர்ந்த சாயை போல்
பொன்னின் மா நகர் புரிசை நீங்கினான். - 1.6.20
338 - மூவரும் சரயு என்னும் ஆற்றை அடைதல்
வரங்கள் மாசு அறத் தவம் செய்தோர்கள் வாழ்
புரங்கள் நேர் இலா நகரம் நீங்கிப் போய்
அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று
இரங்கு வார் புனல் சரயு எய்தினார். - 1.6.21
339 - மூவரும் ஒருசோலையை அடைதல்
கரும்பு கால் பொர கழனி வார்ந்த தேன்,
வரம்பு மீதிடும் மருத வேலிவாய்
அரும்பு கொங்கையார் அம் மெல் ஓதி போல்
சுரும்பு வாழ்வது ஓர் சோலை வைகினார். - 1.6.22
340 - சூரியாத்தமன காலத்தில் மூவரும் சரயுவைக் கடத்தல்
தாழும் மா மழை தழுவும் நெற்றியால்
சூழி யானை போல் தோன்றும் மால் வரைப்
பாழி மா முகட்டு உச்சிப் பச்சை மா
ஏழும் ஏறப் போய் ஆறும் ஏறினார். - 1.6.23
341 - இராமன் எதிர்ப்பட்ட சோலையைப்பற்றி வினவுதல்
தேவு மா தவன் தொழுது, தேவர்தம்
நாவுள் ஆவுதி நயக்கும் வேள்வியால்
தாவும் மா புகை தழுவும் சோலை கண்டு,
'யாவது? ஈது?' என்றான் எவர்க்கும் மேல் நின்றான். - 1.6.24
1.7 . தாடகை வதைப் படலம் (342- 418 )
342 - அங்கநாட்டு வரலாறும் காமனாச்சிரம வரலாறும் (342-343)
திங்கள் மேவும் சடைத் தேவன் மேல் மாரன் வேள்,
இங்கு நின்று எய்யவும், எரி தரும் நுதல் விழிப்
பொங்கு கோபம் சுடப், பூளை வீ அன்னதன்
அங்கம் வெந்து, அன்று தொட்டு, அனங்கன் ஏ ஆயினான். - 1.7.1
343 - வாரணத்து உரிவையான், மதனனைச் சினவும் நாள்
ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால், இவண் எலாம்
ஆரணத்து உறையுளாய்! அங்கநாடு; இதுவும் அக்
காரணக் குறி உடைக் காமன் ஆச்சிரமம் ஏ. - 1.7.2
344 - காமனாச்சிரமத்தின் பெருமை
பற்று அவா வேர் ஒடு உம் பகை அறப் பிறவி போய்
முற்ற வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று
உற்ற வானவன் இருந்து யோகு செய்தனன் எனில்
சொற்ற ஆம் அளவது ஓ மற்று இதன் தூய்மை ஏ. - 1.7.3
345 - விசுவாமித்திரன் இராமன் இலக்குவன் மூவரும் சுரஞ் சார்தல்
என்று அ அந்தணன் இயம்பலும் வியந்து அவ் வயின்
சென்று, உவந்து எதிர் எழும் செந்நெறிச் செல்வரொடு
அன்று உறைந்து, அலர் கதிர்ப் பருதி மண்டிலம் அகன்
குன்றில் நின்று இவர ஓர் சுடு சுரம் குறுகினார். - 1.7.4
346 - பாலைநில வருணனை (346-357)
பருதி வானவன் நிலம் பசை அறப் பருகுவான்
விருது மேல் கொண்டு , உலாம் வேனில் ஏ அல்லது ஓர்
இருது வேறு இன்மையால் , எரி சுடர்க் கடவுளும்
கருதின் வேம் உள்ளமும் ; காணில் வேம் நயனமும் . - 1.7.5
347 - படியின் மேல் வெம்மையைப் பகரினும் பகரும் நா
முடிய வேம்; முடிய மூடு இருளும் வான் முகடும் வேம்
விடியுமேல் வெயிலும் வேம்; மழையும் வேம்; மின்னின் ஓடு
இடியும் வேம் என்னில், வேறு யாவை வேவாத ஏ. - 1.7.6
348 - விஞ்சுவான் மழையின்மேல் அம்பும் வேலும் படச்
செஞ்சவே செரு முகத்து அமர் செயும் திறன் இலா
வஞ்சர் தீ வினையின் ஆல் மான மா மணி இழந்து
அஞ்சினார் நெஞ்சுபோல் என்றும் ஆறாது அரோ, - 1.7.7
349 - பேய் பிளந்து ஒக்க நின்று உலர் பெருங் கள்ளியின்
தாய் பிளந்து உக்க கார் அகில்களும் தழை இலா
வேய் பிளந்து உக்க வெண் தரளமும் விட அரா
வாய் பிளந்து உக்க செம் மணியுமே வனம் எலாம். - 1.7.8
350 - பாரும் ஓடாது நீடாது எனும் பாலது ஏ
சூரும் ஓடாது கூடாது அரோ சூரியன்
தேரும் ஓடாது மா மாகம் மீது ஏறி நேர்
காரும் ஓடாது நீள் காலும் ஓடாது அரோ. - 1.7.9
351 - கண் கிழித்து உமிழ் விடக் கனல் அரா அரசு கார்
விண் கிழித்து ஒளிரும் மின் அனைய பல மணி வெயில்
மண் கிழித்திட எழும் சுடர்கள், மண் மகள் உடல்
புண் கிழித்திட எழும் குருதியே போலும் ஏ. - 1.7.10
352 - புழுங்கு வெம் பசியொடு புரளும் பேர் அரா
விழுங்க வந்து எழுந்து எதிர் விரித்த வாயின் வாய்
முழங்கு திண் கரி புகும்; முடுகி மீ மிசை
வழங்கு வெம் கதிர் சுட மறைவு தேடி ஏ. - 1.7.11
353 - ஏக வெம் கனல் அரசு இருந்த காட்டினில்
காகமும் கரிகளும் கரிந்து சாம்பின
மாக வெம் கதிர் எனும் வடவை தீ சுட
மேகமும் கரிந்து இடை வீழ்ந்த போலும் ஏ; - 1.7.12
354 - பேய் தேரின் தோற்றம்
கானகம் அத்து இயங்கிய கழுதின் தேர் குலம்,
தான் அகம் கரிதலில் தலைக்கொண்டு ஓடி போய்
மேல் நிமிர்ந்து எழுந்திடில் விசும்பும் வேம் எனா
வானவர்க்கு இரங்கி நீர் வளைந்தது ஒத்தது ஏ. - 1.7.13
355 - ஏய்ந்த அக் கனல் இடை எழுந்த கானல் தேர்
காய்ந்த அக் கடும் வனம் காக்கும் வேனிலின்
வேந்தனுக்கு அரசு வீற்றிருக்கச் செய்தது ஓர்
பாய்ந்த பொன் கால் உடைப் பளிக்குப் பீடம் ஏ. - 1.7.14
356 - பாலைவனத்தின் பசையற்றநிலை
தா வரும் இரு வினை செற்றுத் தள்ள அரும்
மூவகைப் பகை அரண் கடந்து முத்தியில்
போவது புரிபவர் மனமும் பொன் விலைப்
பாவையர் மனமும் போல் பசையும் அற்றதே. - 1.7.15
357 - பொரி பரல் படர் நிலம் பொடிந்து கீழ் உற
விரிதலின், பெரு வழி விளங்கித் தோன்றலால்
அரி மணிப் பணத்து அரா அரசன் நாட்டினும்
எரி கதிர்க்கு இனிது புக்கு இயங்கல் ஆயதே. - 1.7.16
358 - பாலையின் வெப்பத்தால் அரசிளங்குமரர் வருந்துவர்
என விசுவாமித்திரர் எண்ணுதல்
எரிந்து எழு கொடும் சுரம் இனையது எய்தலும்,
அருந்தவன், இவர் பெரிது அளவு இல் ஆற்றல் ஐ
பொருந்தினர் ஆயினும், பூவின் மெல்லியர் ,
வருந்துவர் சிறிது, என மனத்தில் நோக்கினான். - 1.7.17
359 - விசுவாமித்திரன் பலை அதிபலையென்னும்
அருமறைகளிரண்டையும் அரசிளங்குமரர்க்கு உபதேசித்தல்
நோக்கினன் அவர் முகம், நோக்க நோக்கு உடை
கோக் குமரரும் அடி குறுக, நான்முகன்
ஆக்கிய விஞ்சைகள் இரண்டும் அவ் வழி
ஊக்கினன்; அவை அவர் உள்ளத்து உள்ளினார். - 1.7.18
360 - உள்ளிய காலையின் ஊழித் தீயையும்
எள்ளுறு கொழும் கனல் எரியும் வெஞ்சுரம்
தெள்ளு தண் புனல் இடை சேறல் ஒத்தது
வள்ளலும் முனிவனை வணங்கிக் கூறுவான். - 1.7.19
361 - இராமன் வினவுதல்
‘சுழி படு கங்கை அம் தொங்கல் மௌலியான்
விழிபட வெந்தது ஓ? வேறுதான் உண்டு ஓ?
பழிபடர் மன்னவன் படைத்த நாட்டின் ஊங்கு
அழிவது என் காரணம்? அறிஞ! கூறு' என்றான். - 1.7.20
362 - விசுவாமித்திரன் தாடகை வரலாறு கூறுதல்
என்றலும், இராமனை நோக்கி, இன் உயிர்
கொன்று உழல் வாழ்க்கையள்; கூற்றின் தோற்றத்தள்;
அன்றியும், ஐயிரு நூறு மையல் மா
ஒன்றிய வலியினள்; உறுதி கேள் எனா? - 1.7.21
363 - தாடகையுருவ வருணனை (363-365)
மண் உருத்து எடுப்பினும் கடலை வாரினும்
விண் உருத்து இடிப்பினும் வேண்டின் செய்கிற்பாள்;
எண் உருத் தெரிவு அரும் பாவம் ஈண்டி ஓர்
பெண் உருக் கொண்டெனத் திரியும் பெற்றியாள். - 1.7.22
364 - பெரு வரை இரண்டொடும் பிறந்த நஞ்சொடும்
உரும் உறழ் முழக்கொடும் ஊழித் தீயொடும்
இரு பிறை செறிந்து எழு கடல் உண்டாம் எனின்
வெருவரு தோற்றத்தள் மேனி மானும் ஏ. - 1.7.23
365 - சூடக அரவு உறழ் சூலக் கையினள்
காடு உறை வாழ்க்கையள் கண்ணில் காண்பர் ஏல்
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!
தாடகை என்பது அச் சழக்கி நாமமே. - 1.7.24
366 - தாடகை வரலாறு கூறுதல்
கல் நவில் தோளினாய்! கமலத்தோன் அருள்
மன் உயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து?
இன் உயிர் வளர்க்கும் ஓர் எரிகொள் கூற்றம் நேர்
அன்னவள் யாவள் என்று அறையக் கேட்டியால்! - 1.7.25
367 - சுகேதுவின் வரலாறு (367-371)
இயக்கர்தம் குலத்து உளான், உலகம் எங்கணும்
வியக்குறு மொய்ம்பினான், எரியின் வெம்மையான்,
மயக்கிலன், சரன் எனும் வலத்தினான் அருள்
துயக்கிலன், சுகேது என்று உளன், ஓர் தூய்மையான். - 1.7.26
368 - சுகேது தவஞ் செய்தது
அன்னவன் மகவு இலாது அயரும் சிந்தையான்,
மன் நெடுந் தாமரை மலரின் வைகுறும்
நல்நெடு முதல்வனை வழுத்தி, நல் தவம்
பன் நெடும் பகல் எலாம் பயின்ற பான்மை ஆன். - 1.7.27
369 - பிரமன் வரமளித்தல்
முந்தினன், அரும் மறை கிழவன் ‘முற்றும் நின்
சிந்தனை என்?' எனச் ‘சிறுவர் இன்மையால்
நொந்தனன், அருள்க!' என, ‘நுணங்கு கேள்வியாய்!
மைந்தர்கள் இலை; ஒரு மகள் உண்டாம்' என்றான். - 1.7.28
370 - பிரமன் வரங்கொடுத்து மறைதல்
‘பூ மட மயிலினைப் பொருவும் பொற்பு ஒடு உம்
ஏமுறும் மத மலை ஈ ஐஞ்ஞாறு உடை
தாமிகு வலி ஒடு உம் தனயை தோன்றும், நீ
போ!' என மலர் அயன் புகன்று போயினான். - 1.7.29
371 - சுகேது தன்மகளைச் சுந்தனுக்கு மணமுடித்தல்
ஆயவன் அருள் வழி அலர்ந்த தாமரைச்
சேயவள் என, வளர் செவ்வி கண்டு,’இவட்கு
ஆயவன் யார்கொல்?' என்று ஆய்ந்து, தன் கிளை
நாயகன் சுந்தன் என்பவற்கு நல்கினான். - 1.7.30
372 - சுந்தனும் தாடகையும் மணக்களிப்பெய்துதல்
காமனும் இரதியும் கலந்த காட்சி ஈது
ஆம் என இயக்கனும் அணங்கு அ(ன்)னாளும் வேறு
யாமமும் பகலும் ஓர் ஈறு இன்று என்னல் ஆய்
தாம் உறு பெரும் களி சலதி மூழ்கினார். - 1.7.31
373 - சுவாகு மாரீசர்கள் தோன்றுதல்
பல பல நாள் செலீஇப், பதுமை போன்று ஒளிர்
பொற்பினாள் வயிறு இடை, புவனம் ஏங்கிட,
வெற்பு அணி புயத்து மாரீசனும், விறல்
மல் பொரு சுவாகுவும் வந்து தோன்றினார். - 1.7.32
374 - மக்கள் வன்மைகண்டு சுந்தன் களித்தல்
மாயமும், வஞ்சமும், வரம்பில் ஆற்றலும்,
தாயினும் பழகினார் தமக்கும் தேர்வொணாது
ஆய், அவர் வளர்வுழி, அவரை ஈன்ற அக்
காய் சினத்து இயக்கனும் களிப்பின் மேன்மையான். - 1.7.33
375 - சுந்தன் அகத்தியராச்சிரமத்தில் மரங்களைப்பறித்து வீசுதல்
தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர
மோது உறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடும்
மாதவன் உறைவிடம் அதனின் வந்து, நீள்
பாதவம் அனைத்தையும் பறித்து வீசினான். - 1.7.34
376 - அகத்தியர் விழிக்கச் சுந்தன் சாம்பராதல்
விழைவு உறு மா தவம் வெஃகினோர் விரும்பு
உழை கலை இரலையை உயிர் உண்டு ஓங்கிய
வழை முதல் மரன் எலாம் மடிப்ப, மாதவன்
தழல் எழ விழித்தனன், சாம்பர் ஆயினான். - 1.7.35
377 - கணவன் இறந்தமைகேட்டுத் தாடகை மக்களோடு
அகத்தியராச்சிரமம் அடைதல்
மற்றவன் விளிந்தமை, மைந்தர் தம்மொடும்
பொன் தொடி கேட்டு, வெம் கனலிற் பொங்குறா,
‘முற்றுற முடிக்குவன் முனியை’ என்று எழா,
நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள். - 1.7.36
378 - தாடகையின் குமாரர்கள் அகத்தியரை அணுகுதல்
இடியொடு மடங்கலும் வளியும் ஏங்கிடக்
கடி கெட அமரர்கள், கதிரும் உட்கு உற
தடி உடை முகில் குலம் சலிப்ப, அண்டமும்
வெடி பட, அதிர்த்து எதிர் விளித்து மண்ட ஏ. - 1.7.37
379 - அகத்தியன் சபித்தல்
தமிழ் எனும் அளப்ப அரும் சலதி தந்தவன்,
உமிழ் கனல் விழி வழி ஒழுக, உங்கரித்து,
"அழிவன செய்தலால் அரக்கர் ஆகி ஏ
இழிக! ” என உரைத்தனன், அசனி எஞ்ச ஏ. - 1.7.38
380 - தாடகைமுதலியோர் அரக்கராதல்
வெரு கொள உலகையும் விண் உளோரையும்
முருக்கி எவ் உயிரும் உண்டு உழலும் மூர்க்கர் ஆம்
அரக்கர்கள் ஆயினர் அக் கணத்தினில்,
உருக்கிய செம்பு என உமிழ் கண் தீயினர். - 1.7.39
381 - சுபாகு மாரீசர்கள் சுமாலியோடு உறவுகொள்ளுதல்
ஆங்கு அவன் வெகுளியும் அறைந்த சாபமும்
தாங்கினர், எதிர் செயும் தருக்கு இலாமையின்
நீங்கினர்; சுமாலியை நேர்ந்து, ‘ நிற்கு யாம்
ஓங்கிய புதல்வர்' என்று உறவு கூர்ந்தனர். - 1.7.40
382 - சுபாகு மாரீசர்கள் இராவணனுக்கு மாமனாய் உலகிற்குத் தீமைபுரிதல்
அவன் ஒடு உம் பாதலம் அத்து அனேக நாள் செலீஇத்
தவன் உறு தசமுகன் தனக்கு மாதுலர்
இவர் எனப் புடைத்து அழித்து உலகம் எங்கணும்
பவனனில் திரிகுநர் பதகி மைந்தர்கள். - 1.7.41
383 - மக்களைப்பிரிந்த தாடகை இங்கு வசிக்கின்றாள் எனல்
மிகும் திறல் மைந்தரை வேறு நீங்கு உறாத்,
தகும் தொழில் முனிவரன் சலத்தை உன்னி ஏ,
வகுந்துவின் வசு அரி வதிந்தது இவ் வனம்
புகுந்தனள், அழலெனப் புழுங்கு நெஞ்சினாள். - 1.7.42
384 - தாடகையால் இவ் வனம் வளம் அழிந்தது எனல்
உளப் பரும் பிணிப்பு அறா உலோபம் ஒன்றும் ஏ
அளப்பு அரும் குணங்களை அழிக்கும் ஆறு போல்
கிளப்பு அரும் கொடுமைய அரக்கி கேடு இலா
வளப்பரு மருதம் வைப்பு அழித்து மாற்றினாள். - 1.7.43
385 - இராவணன் ஆணையால் இவள் இன்னல்செய்கின்றாள் எனல்
‘இலங்கை அரசன் பணி அமைந்து ஒர் இடையூறு ஆ
விலங்கல் வலி கொண்டு எனது வேள்வி நலிகின்றாள்:
அலங்கல் முகில் ஏ! இவள் இவ் அங்க நிலம் எங்கும்
குலங்களொடு அடங்க நனி கொன்று திரிகின்றாள்.' - 1.7.44
386 - தாடகை உயிரினத்தையே ஒழித்துவிடுவாள் எனல்
'முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம்
தன் உணவு எனக் கருது தன்மையினள், மைந்த!
என் இனி உணர்த்துவது? இனிச் சிறிது நாளில்,
மன் உயிர் அனைத்தையும் வயிற்றின் இடும்' என்றான். - 1.7.45
387 - தாடகை எங்கிருப்பவள் என்று இராமன் வினாவுதல்
அங்கு இறைவன் அ பரிசு உரைப்ப, அது கேளா,
கொங்கு உறை நறைக் குல மலர்க் குழல் துளக்கா .
'எங்கு உறைவது இ தொழில் இயற்றுபவள்?' என்றான்,
சங்கு உறை கரம் அத்து ஒரு தனிச் சிலை தரித்தான். - 1.7.46
388 - தாடகை வருதல் (388-389)
கை வரை எனத் தகைய காளை உரை கேளா,
ஐவரை அகம் அத்து இடை அடைத்த முனி,’ஐய!
இ வரை இருப்பது அவள்' என்பதனின் முன்பு, ஓர்
மை வரை நெருப்பு எரிய வந்தது என வந்தாள். - 1.7.47
389 - சிலம் புகள் சிலம்பு இடை செறித்த கழலோடு
நிலம் புக மிதித்தனள்; நெளித்த குழி வேலைச்
சலம் புக, அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப்
பிலம் புக, நிலை கிரிகள் பின் தொடர, வந்தாள். - 1.7.48
390 - தாடகை சினத்தோடு விழித்துப்பார்த்தல்
இறை கடை துடித்த புருவத்தள், எயிறு என்னும்
பிறை கடை பிறக்கிட மடித்த பில வாயள்,
மறைக் கடை அரக்கி, வடவை கனல் இரண்டு ஆய்
நிறைக் கடல் முளைத்து என நெருப்பு எழ விழித்தாள். - 1.7.49
391 - தாடகை ஆர்ப்பரித்தல்
கடம் கலுழ் தடம் களிறு கையொடு கை தெற்றா
வடம் கொள நுடங்கும் இடையாள், மறுகி வானோர்
இடங்களும் நெடும் திசையும் ஏழ் உலகும் எங்கும்
அடங்கலும் நடுங்க, உரும் அஞ்ச, நனி ஆர்த்தாள். - 1.7.50
392 - தாடகை இராமலக்குமணர்களைப் பார்த்துப் பேசுதல் (392-393)
ஆர்த்து, அவரை நோக்கி, நகை செய்து, எவரும் அஞ்சக்,
கூர்த்த நுதி முத்தலை அயில் கொடிய கூற்றைப்
பார்த்து, எயிறு தின்று, பகு வாய் முழை திறந்து, ஓர்
வார்த்தை உரை செய்தனள், இடிக்கும் மழை அன்னாள். - 1.7.51
393 - 'கடக்க அரும் வலத்து எனது காவல் இதில் யாவும்
கெடக் கரு அறுத்தனன்; இனிச் சுவை கிடக்கும்
விடக்கு அரிது எனக் கருதி ஓ? விதி கொடு உந்தப்
பட கருதி ஓ? பகர்மின் வந்த பரிசு!' என்று ஏ. - 1.7.52
394 - தாடகை இராமலக்குமணர்களை நோக்கிச் சினத்தல்
மேகம் அவை இற்று உக விழித்தனள்; புழுங்கா
மாக வரை இற்று உக உதைத்தனள்; மதித் திண்
பாகம் எனும் முற்று எயிறு அதுக்கி, அயில் பற்றா,
'ஆகம் உற உய்த்து எறிவன்' என்று எதிர் அழன்றாள். - 1.7.53
395 - இராமன் அவளைப் பெண்ணென எண்ணிக் கணைதொடாமை
அண்ணல் முனிவற்கு அது கருத்து எனினும்,'ஆவி
உண்' என வடி கணை தொடுக்கிலன்; உயிர்க்கே
துண் எனும் வினைத் தொழில் தொடங்கி உளள் ஏனும்,
பெண் என மனத்திடை பெரும் தகை நினைந்தான். - 1.7.54
396 - முனிவன் இராமன் கருத்தறிந்து மொழிதல்
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்றாள்,'தனை
எறிந்து கொல்வென்' என்று ஏற்கவும் பார்க்கிலாச்
செறிந்த தார் அவன், சிந்தைக் கருத்து எலாம்
அறிந்து, நால் மறை அந்தணன் கூறுவான். - 1.7.55
397 - தாடகையைப் பெண்ணல்லள் எனல்
'தீது என்று உள்ளவை யாவையும் செய்து, எமைக்
கோது என்று உண்டிலள்: இத்தனையே குறை :
யாது என்று எண்ணுவது? இ கொடியாளையும்
மாது என்று எண்ணுவது ஓ? மணிப் பூணினாய்!' - 1.7.56
398 - ஆடவர் ஆண்மை இவள்பேர்சொன்னாலும் அகலும் எனல்
'நாண்மை ஏ உடையார்ப் பிழைத்தால் நகை;
வாண்மை ஏ பெற்ற வன் திறல் ஆடவர்
தோண்மையே இவள் பேர் சொலத் தோற்கும் ஆல்;
ஆண்மை என்னும் அது, ஆர் இடை வைகும் ஏ?' - 1.7.57
399 - ஆடவர்க்கும் தாடகைக்கும் வேறுபாடின்றெனல்
'இந்திரன் இடைந்தான்; உடைந்து ஓடினார்
தந்திரம் படத் தானவர் வானவர்;
மந்தரம் இவள் தோள் எனின், மைந்தரோடு
அந்தரம் இனி யாது கொல் ஆம்? ஐயா!' - 1.7.58
400 - விசுவாமித்திரர் மேலுஞ்சில கூறுதல்
'மன்னர் மன்னவன் காதல! மற்றும் ஒன்று
இன்னம் யான் உரைக்கின்றது யாது எனின்,
முன்னோர் காலம் நிகழ்ந்த முறைமை ஈது'
என்ன ஓதல் உற்றான் தவம் அத்து ஈறு இலான். - 1.7.59
401 - திருமால் கியாதியைக் கொன்ற வரலாறு கூறுதல்
'பிருகு என்னும் பெரும் தவன் தன் மனை,
வரு கயல் கண், கியாதி, வல் ஆசுரர்க்கு
உருகு காதல் உற உறவு ஆதலே
கருதி ஆவி கவர்ந்தனன் நேமியான்.' - 1.7.60
402 - இந்திரன் குமதியைக் கொன்ற வரலாறு கூறுதல்
'வானகம் தனில், மண்ணினின், மன் உயிர்
போனகம் தனக்கு என்று எணும் புந்தியள்,
தானவள், குமதிப் பெயராள் தனை
ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர் கோன்.' - 1.7.61
403 - திருமாலுக்கும் இந்திரனுக்கும் தீமையாவிளைந்தது? எனல்
'ஆதலால், அரிக்கு, ஆகண்டலன் தனக்கு,
ஓது கீர்த்தி உண்டு ஆயது அல்லாது, இடை
ஏதம் என்பன எய்திய ஓ? சொலாய்!
தாது அடர்ந்து தயங்கிய தாரினாய்!' - 1.7.62
404 - இவள் பெண் அல்லள் எனல்
'கறங்கு அடல் திகிரிப் படி காத்தவர்
பிறங்கடைப் பெரியோய்! பெரியாரொடும்
மறம் கொடு இ தரை மன் உயிர் மாய்த்து, நின்று,
அறம் கெடுத்தவட்கு, ஆண்மையும் வேண்டும் ஓ!' - 1.7.63
405 - இவள் கூற்றினும் கொடியள் எனல்
'சாற்றும் நாள் அற்றது எண்ணித், தருமம் பார்த்து,
ஏற்றும் விண் என்பது அன்றி, இவளைப் போல்.
நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர்
கூற்று உண்டு ஓ? சொலாய்! கூற்று உறழ் வேலினாய்!' - 1.7.64
406 - இவளைப் பெண் எனல் எளிமையாம் என்றல்
'மன்னும் பல் உயிர் வாரித் தன் வாய்ப் பெய்து
தின்னும் புன்மையின் தீமை எது ஓ? ஐய!
பின்னும் தாழ் குழல் பேதைமைப் பெண் இவள்
என்னும் தன்மை எளிமையின் பாலது ஏ!' - 1.7.65
407 - விசுவாமித்திரன் தாடகையைக் கொல்லுக எனல்
'ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன், இவள்
சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்:
ஆறி நின்றது அறன் அன்று; அரக்கியைக்
கோறி!' என்று எதிர் அந்தணன் கூறினான். - 1.7.66
408 - இராமன் இசைதல்
ஐயன் அங்கு அது கேட்டு,'அறன் அல்லவும்
எய்தினால் அது செய்க என்று ஏவினால்,
மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ அறஞ் செயும் ஆறு?' என்றான். - 1.7.67
409 - தாடகை இராமன்மேல் சூலத்தை வீசுதல்
கங்கைத் தீம் புனல் நாடன் கருத்து எலாம்
மங்கைத் தீ அனையாளும் மனம் கொளா,
செம் கை சூல வெம் தீயினைத் தீய தன்
வெம் கண் தீயொடு மேல் செல வீசினாள். - 1.7.68
410 - தாடகைவீசிய சூலம் இராமனைநோக்கி வருதல்
புதிய கூற்று அனையாள் புகைந்து ஏவிய
கதிர் கொள் மூவிலைக் கால வெம் தீ, முனி
விதியை மேல் கொண்டு நின்றவன்மேல், உவா
மதியின்மேல் வரும் கோள் என, வந்தது ஏ. - 1.7.69
411 - இராமபிரான் தாடகையின் சூலத்தை இருதுண்டாக்குதல்
மாலும் அ கணம் வாளியைத் தொட்டதும்
கோல வில் கால் குனித்ததும் கண்டிலர்
காலனைப் பறித்து அக் கடியாள் விட்ட;
சூலம் அற்றன துண்டங்கள் கண்டனர். - 1.7.70
412 - தாடகை மலைகளை வீசுதலும் இராமன் அவற்றை விலக்குதலும்
அல்லின் மாரி அனைய நிறத்தவள்,
சொல்லின் மாத்திரையில் கடல் தூர்ப்பது ஓர்
கல்லின் மாரியைக் கை வகுத்தாள்; அது
வில்லின் மாரியின் வீரன் விலக்கினான். - 1.7.71
413 - இராமபாணம் தாடகையின் மார்பில் ஊடுருவிச்சென்றது எனல்
சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப் போயிற்று அன்றே ஏ. - 1.7.72
414 - இராமபாணம்பட்டுத் தாடகை கீழே வீழ்தல்
பொன் நெடுங் குன்றம் அன்னான் புகர் முகப் பகழி என்னும்
மன் நெடுங் கால வன் காற்று அடித்தலும், இடித்து வானில்
கல் நெடு மாரி பெய்யக் கடை உகத்து எழுந்த மேகம்,
மின் ஒடு உம் அசனி ஒடும் வீழ்வதே போல வீழ்ந்தாள். - 1.7.73
415 - தாடகையிறந்தது இராவணனுக்கு ஓர் உற்பாதமாம் எனல்
பொடி உடைக் கானம் எங்கும் குருதிநீர் பொங்க வீழ்ந்த
தடி உடை எயிற்றுப் பேழ் வாய் தாடகை, தலைகள் தோறும்
முடி உடை அரக்கற்கு அந்நாள் முந்தி உற்பாதம் ஆகப்
படி இடை அற்று வீழ்ந்த வெற்றியம் பதாகை ஒத்தாள். - 1.7.74
416 - காடுமுழுதும் குருதிபரவுதல்
கான் திரிந்து ஆழி ஆகத் தாடகை கடின மார்பத்து
ஊன்றிய பகழி வாய் ஊடு ஒழுகிய குருதி வெள்ளம்.
ஆன்ற அக் கானம் எல்லாம் ஆயினது; அந்தி மாலைத்
தோன்றிய செக்கர் வானம் தொடக்கு அற்று வீழ்ந்தது ஒத்து ஏ. - 1.7.75
417 - கூற்றுவன் அரக்கர் குருதிச்சுவையறிந்தான் எனல்
வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத
காசு உலாம் கனகப் பசும் பூண் காகுத்தன் கன்னிப் போரில்
கூசி வாள் அரக்கர் தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி
ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்தது அன்று ஏ. - 1.7.76
418 - தேவர் மகிழ்ச்சி
'யாமும் எம் இருக்கை பெற்றேம், உனக்கு இடையூறும் இல்லை,
கோ மகற்கு இனிய தெய்வப் படை கலம் கொடுத்தி' என்னா
மா முனி உரைத்துப், பின்னர் வில்கொண்ட மழை அனான்மேல்
பூ மழை பொழிந்து வாழ்த்தி, விண்ணவர் போயினார் ஏ. - 1.7.77
1.8 . வேள்விப் படலம் (419 - 477 )
419 - விசுவாமித்திரன் இராமனுக்குப் படைக்கலம் தருதல்
விண்ணவர் போய பின்றை
விரிந்த பூ மழையினாலே
தண் எனும் கானம் நீங்கித்
தாங்கரும் தவத்தின் மிக்கோன்
மண்ணவர் வறுமை நோய்க்கு
மருந்து அன சடையன் வெண்ணெய்
அண்ணல் தன் சொல்லே அன்ன
படைக்கலம் அருளினான் ஏ. - 1.8.1
420 - படைக்கலங்கள் இராமபிரானை அடைதல்
ஆறிய அறிஞன் கூறி
அளித்தலும், அண்ணல் தன் பால்
ஊறிய உவகையோடும்
உம்பர்தம் படைகள் எல்லாம்,
தேறிய மனத்தான் செய்த
நல் வினைப் பயன்கள் எல்லாம்
மாறிய பிறப்பில் தேடி
வருவபோல் வந்த அன்று ஏ. - 1.8.2
421 - படைக்கலங்கள் இராமபிரானுக்குப் பணிபுரிய முன்வருதல்
'மேவினம் பிரிதல் ஆற்றேம்;
வீர! நீ விதியின் எம்மை
ஏவின செய்து நிற்றும்
இளையவன் போல' என்று
தேவர் தம் படைகள் செப்பச்
'செவ்விது' என்று அவனும் நேரப்
பூவை போல் நிறத்தினாற்குப்
புறம் தொழில் புரிந்த அன்று ஏ. - 1.8.3
422 - இராமபிரான் வினாவும் விசுவாமித்திரன் விடையும்
இனையன நிகழ்ந்த பின்னர்க்
காவதம் இரண்டு சென்றார்,
அனையவர் கேட்க ஆண்டு ஓர்
அரவம் வந்து அணுகித் தோன்ற,
'முனைவ! ஈது யாவது?' என்று
முன்னவன் வினவப் பின்னர்
வினை அற நோற்று நின்ற
மேலவன் விளம்பலுற்றான். - 1.8.4
423 - விசுவாமித்திரனும் இராமலக்குமணரும் கோமதிநதியை அடைதல்
'மானச மடுவில் தோன்றி வருதலால் சரயு என்று ஏ
மேல் முறை அமரர் போற்றும் விழு நதி அதனின் ஓடும்,
ஆன கோமதி வந்து எய்தும் அரவம் அது' என்ன அப்பால்
போனபின், பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார். - 1.8.5
424 - கௌசிகிநதியின் வரலாறு (424-433) குசன் மக்கட்பேறு
'சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த தூ நதி யாவது?' என்று
வர முனிதன்னை அண்ணல் வினவுற, மலருள் வைகும்
பிரமன் அன்று அளித்த வென்றிப் பெரும் தகை குசன் என்று ஓதும்
அரசர் கோன், மனைவி தன் பால் அளித்தவர் நால்வர் ஆவர். - 1.8.6
425 - குசனுடைய மைந்தர்பெயரும் அவர் ஆண்ட நகரங்களின் பெயரும்
குசன், குசநாபன், கோது இல்
குணத்தின் ஆதூர்த்தன், கொற்றத்து
இசை கெழு வசு என்று ஓதும்
இவர் பெயர், இவர்கள் தம் உள்
குசன் கவுசாம்பி, நாபன்
குளிர் மகோதயம், ஆதூர்த்தன்
வசை இல் தன்மம் வனம், மற்றை
வசு கிரிவிரசம் வாழ்ந்தார். - 1.8.7
426 - குசநாபற்கு நூறுபெண்கள் பிறந்தமை
அவர்களில் குசநாபற்கு ஏ ஐயிருபதின்மர் அம் சொல்
துவர் இதழ்த் தெரிவை நல்லார் தோன்றினர், வளரும் நாளில்,
இவர், பொழில் தலைக்கண் ஆயத்து எய்துழி, வாயு எய்திக்,
கவர் மனத்தினன் ஆய், அந்தக் கன்னியர் தம்மை நோக்கி. - 1.8.8
427 - நூறுமகளிரும் வாயுதேவன் விருப்பிற்கு இசையாது இடர் உறுதல்
'கொடித் தனி மகரம் கொண்டான்
குனி சிலைச் சரத்தால் நொந்தேன்;
வடித் தடம் கண்ணீர்! என்னை
மணத்திர்' என்று உரைப்ப 'எந்தை
அடி தலம் அத்து உரைத்து, நீரோடு
அளித்திடின் அணைதும்' என்ன,
ஒடித்தனன் வெரிநை; வீழ்ந்தார்
ஒளி வளை மகளிர் எல்லாம். - 1.8.9
428 - குசநாபன் மகளிரைப் பிரமதத்தனுக்கு மணஞ்செய்வித்தல்
சமிரணன் அகன்ற பின்னர்த்,
தையலார் தவழ்ந்து சென்று ஏ
அமிர்து உகு குதலை மாழ்கி,
அரசன் மாட்டு உரைப்ப, அன்னான்
நிமிர் குழல் மடவார்த் தேற்றி,
நிறை தவன் சூளி நல்கும்
திமிர் அறு பிரமதத்தற்கு
அளித்தனன், திரு அனார் ஐ. - 1.8.10
429 - மகளிர் கூன்நீக்கமும் குசநாபன் புதல்வற்பேறும்
அவன் மலர்க் கைகள் தீண்டக்,
கூன் நிமிர்ந்து அழகு வாய்த்தார்;
புவனம் முற்று உடைய கோவும்
புதல்வர் இல்லாமை, வேள்வி
தவர்களின் புரிதலோடும்,
தகை உறு அத் தழலின் நாப்பண்
கவன வேகத் துரங்கக்
காதிவந்து உதயம் செய்தான். - 1.8.11
430 - காதி அரசெய்தியதும் மக்களைப்பெற்றதும்
அன்னவன் தனக்கு வேந்தன் அரசொடு முடியும் ஈந்து,
பொன் நகர் அடைந்த பின்னர்ப், புகழ் மகோதயத்தில் வாழும்
மன்னவன் காதிக்கு, யானும் கவுசிகி என்னும் மாதும்
முன்னர் வந்து உதிப்ப, அந்த முடி உடை வேந்தர் வேந்தன். - 1.8.12
431 - கௌசிகியை இரிசிகன் மணந்துவாழ்ந்து பிரமபதம்புகுதல்
பிருகுவின் மதலை ஆய பெரும் தகை பிதாவும் ஒவ்வா
இரிசிகன் என்பவற்கு மெல் இயலாளை ஈந்தான்;
அரு மறை அவனும் சில் நாள் அறம் பொருள் இன்பம் முற்றி
விரி மலர்த் தவிசோன் தன் பால் விழுத் தவம் செய்து மீண்டான். - 1.8.13
432 - இரிசிகன் பிரமனுலகிற்புகுதல்
காதலன் சேணில் நீங்கக் கௌசிகி தரிக்கல் ஆற்றாள்,
மீது உறப் படரல் உற்றாள், விழு நதி வடிவம் ஆகி;
மா தவர்க்கு அரசும் நோக்கி,"மா நிலத்து உறுகண் நீக்கப்
போதுக நதியாய்” என்னாப் பூ மகன் உலகு புக்கான். - 1.8.14
433 - கௌசிகிவரலாறுகேட்டு வியந்த குமரர் வினாவும் முனிவன் விடையும்
'எம் முனாள் நங்கை, இந்த இரு நதி ஆயினாள்' என்று
அம் முனி புகலக் கேளா அதிசயம் மிகவும் தோன்றச்
செம்மலும் இளைய கோவும் சிறிது இடம் தீர்ந்த பின்னர்
'மை மலி பொழில் யாது?’ என்ன மாதவன் கூறல் உற்றான் . - 1.8.15
434 - சித்தாச்சிரமத்தின் பெருமை
'தங்கள் நாயகரில், தெய்வம்
தான் பிறிது இல்' என்று எண்ணும்
மங்கைமார் சிந்தை போலத்
தூயது; மற்றும் கேளாய்!
எம் கண் நால் மறைக்கும் தேவர்
அறிவுக்கும் பிறர்க்கும் எட்டாச்
செம் கண் மால் இருந்து மேல் நாள்
செய் தவம் செய்தது; அன்று ஏ. - 1.8.16
435 - திருமால் தவஞ்செய்தமை
'பாரின்பால் விசும்பின்பாலும்
பற்று அறப் படிப்பது, அன்னான்
பேர்' என்பான்,'அவன் செய் மாயப்
பெரும் பிணக்கு ஓருங்கு தேர்வார்
ஆர்?' என்பான், அமல மூர்த்தி
கருதியது, அறிதல் தேற்றாம்;
ஈர் ஐம்பான் ஊழிக் காலம்
இரும் தவம் இயற்றி இட்டான். - 1.8.17
436 - மாவலி வரலாறு (436-452)
மாவலி மூன்றுலகும் வௌவுதல்
ஆனவன் இங்கு உறைகின்ற அந் நாள்வாய்,
ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான்,
வானமும் வையமும் வௌவுதல் செய்தான். - 1.8.18
437 - மாவலி வேள்விமுற்றித் தானம்வழங்கக் கருதுதல்
செய்தவன் வானவரும் செயல் ஆற்றா
நெய் தவழ் வேள்வியை முற்றினன் நின்றான்
ஐயம் இல் சிந்தையன் அந்தணர் தம்பால்
வையமும் யாவும் வழங்க வலித்தான். - 1.8.19
438 - தேவர்முறையீடும் திருமால் அருளுதலும்
ஆயது அறிந்தனர் வானவர் அ நாள்
மாயனை வந்து வணங்கி இரந்தார்;
'தீயவன் வெம் தொழில் தீர்' என நின்றார்;
நாயகனும் அது செய்ய நயந்தான். - 1.8.20
439 - திருமால் காசிபன் மகவாதல்
காலம் நுனித்து உணர் காசிபனுக்கும்
வால் அதிதிக்கும் ஒர் மா மகவு ஆகி,
நீல நிறத்து நெடும் தகை வந்து, ஓர்
ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான். - 1.8.21
440 - வாமனன் மாவலியிடம் செல்லுதல்
முப்புரி நூலினன், முஞ்சியன், விஞ்சை
கற்பது ஒர் நாவன், அனல் படு கையன்,
அற்புதன், அற்புதர் ஏ அறியும் தன்
சித் பதம் ஒப்பது ஒர் மெய் கொடு சென்றான். - 1.8.22
441 - மாவலி வாமனனைவரவேற்று முகமன் கூறுதல்
அன்று அவன் வந்தது அறிந்து, உலகு எல்லாம்
வென்றவன் முந்தி வியந்து, எதிர் கொண்டான்;
'நின் தனின் அந்தணர் இல்லை; நிறைந்தோய்
என் தனின் உய்ந்தவர் யார் உளர்?' என்றான். - 1.8.23
442 - வாமனன் மாவலியைப் பாராட்டுதல்
ஆண் தகை அவ் வகை கூற அறிந்தோன்,
'வேண்டினர் வேட்கையின் மேல்பட வீசி
நீண்ட கையாய்! இனி நின் உழை வந்தோர்
மாண்டவர்; அல்லவர் மாண்பு இலர்' என்றான். - 1.8.24
443 - மாவலி வழங்கலும் வெள்ளி தடுத்தலும்
சிந்தை உவந்து எதிர்'என் செய?' என்றான்,
அந்தணன் 'மூவடி மண் அருள் உண்டேல்,
வெம் திறலோய்! தரவேண்டும்' எனா முன்,
'தந்தனன்' என்றனன்: வெள்ளி தடுத்தான். - 1.8.25
444 - வெள்ளிகூறிய தடையுரை
'கண்ட திறத்து இது கைதவம், ஐய!
கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல்;
அண்டமும் முற்றும் அகண்டமும் மேல் நாள்
உண்டவன் ஆம் இது, உணர்ந்து கொள்!' என்றான். - 1.8.26
445 - வெள்ளியை நோக்கி மாவலி விளம்பல் (445-451)
'நினக்கு இலை; என் கை நிமிர்ந்து இட, வந்து
தனக்கு இயலா வகை தாழ்வது, தாழ்வு இல்
கனக் கரி ஆனது கை தலம் என்னின்,
எனக்கு இதன் மேல் நலம் யாது கொல்?' என்றான். - 1.8.27
446 - 'துன்னினர் துன்னலர் என்பது சொல்லார்,
முன்னிய நல் நெறி நூலவர், முன் வந்து
உன்னிய தானம் உயர்ந்தவர் கொள்க
என்னின், இவன் துணை யாவர் உயர்ந்தார்?' - 1.8.28
447 - 'வெள்ளியை ஆதல் விளம்பினை; மேலோர்
வள்ளியர் ஆக, வழங்குவது அல்லால்
எள்ளுவ என் சில? இன் உயிரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்று ஆல்.' - 1.8.29
448 - 'மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது
ஏந்திய கை கொடு இரந்தவர்; எந்தாய்!
வீந்தவர் என்பவர்; வீந்தவரேனும்
ஈந்தவர் அல்லது இருந்தவர் யார் ஏ?' - 1.8.30
449 - 'அடுப்ப அரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்,
கொடுப்பவர் முன்பு,'கொடேல்' என நின்று
தடுப்பவர் ஏ பகை; தம்மையும் அன்னார்
கெடுப்பவர்; அன்னது ஒர் கேடு இலை' என்றான். - 1.8.31
450 - கட்டுரையில்'தம கைத்து உள போழ்து ஏ
இட்டு, இசை கொண்டு, அறன் எய்த முயன்றோர்,
உள் தெறு வெம் பகை ஆவது உலோபம்;
விட்டு இடல்' என்று விலக்கினர் தாம் ஏ. - 1.8.32
451 - 'எடுத்து, ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன் ஏ,
தடுப்பது, நினக்கு அழகிது? ஓ தகவு இல் வெள்ளி!
கொடுப்பது விலக்கு கொடியோர் தமது சுற்றம்,
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி ஒழியும் காண்.' - 1.8.33
452 - மாவலி வாமனனுக்கு மூன்றடிமண் தருதல்
முடிய இம் மொழி எலாம் மொழிந்து, மந்திரி
கொடியன், என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன்
'அடி ஒரு மூன்றும் நீ அளந்து கொள்க' என,
நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான். - 1.8.34
453 - குறளன் நெடியோனாதல்
கயம் தரும் நறும் புனல் கையில் தீண்டலும்,
பயந்தவர்களும் இகழ் குறளன், பார்த்து, எதிர்
வியந்தவர், வெருக் கொள, விசும்பின் ஓங்கினான்;
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்ப ஏ. - 1.8.35
454 - திரிவிக்கிரமன் உலகளந்தமை
நின்ற கால், மண் எலாம் நிரம்பி, அப்புறம்
சென்று பாவிற்று இலை சிறிது பார் எனா,
ஒன்ற வான் அகம் எலாம் ஒடுக்கி, உம்பரை
வென்ற கால், மீண்டது, வெளி பெறாமை ஏ. - 1.8.36
455 - விசுவாமித்திரமுனிவன் வாமனனை வியத்தல்
'உலகு எலாம் உள் அடி அடக்கி ஓர் அடிக்கு
அலகு இலாது அவ் அடிக்கு அன்பன் மெய்யதாம்;
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன்,
சிலை குலாம் தோளினாய்! சிறியன் சால ஏ!' - 1.8.37
456 - வாமனன் இந்திரனுக்கு விண்ணுலகம் ஈந்து தன் முன்னையிடம் சேர்தல்
'உரியது இந்திரற்கு' என உலகம் ஈந்து போய்,
விரி திரைப் பால் கடல் பள்ளி மேவினான்;
கரியவன் உலகு எலாம் கடந்த தாள் இணை
திருமகள் கரம் தொடச் சிவந்து காட்ட ஏ. - 1.8.38
457 - சித்தாச்சிரமத்தின் பெருமை
'ஆதலால், அரு வினை அறுக்கும்; ஆரிய!
காதலால் கண்டவர் பிறவி காண்குறார்;
வேத நூல் முறைமையால் வேள்வி முற்றுவேன் கு
ஈது அலால் இல்லை வேறு இருக்கல் பாலது ஏ.' - 1.8.39
458 - விசுவாமித்திரன் வேள்வி தொடங்குதல்
'ஈண்டு இருந்து இயற்றுவென், யாகம் யான்,' எனா,
நீண்ட பூம் பழுவம் அத்து நெறியின் எய்திப், பின்
வேண்டுவ கொண்டு, தன் வேள்வி மேவினான்,
காண்தகு குமரரைக் காவல் ஏவி ஏ. - 1.8.40
459 - வேள்வியை இராமலக்குமணர் காத்தல்
எண்ணுதற்கு ஆக்க அரிது; இரண்டு மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை,
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்,
கண்ணினைக் காக்கின்ற இமையில் காத்தனர். - 1.8.41
460 - இராமபிரான் அரக்கர் எப்பொழுது வருவர் என முனிவனை வினவுதல்
காத்தனர் திரிகின்ற காளை வீரரில்
மூத்தவன், முழுது உணர் முனியை முன்னி,"நீ
தீ தொழில் இயற்றுவர் என்ற தீயவர்
ஏத்த அரும் குணத்தினாய்! வருவது என்று?“ என்றான். - 1.8.42
461 - அரக்கர் வருதல்
வார்த்தை மாறு உரைத்திலன் முனிவன், மௌனியாய்ப்
போர்த் தொழில் குமரனும் தொழுது போந்த பின்
பார்த்தனன் விசும்பினைப், பருவ மேகம் போல்
ஆர்த்தனர், இடித்தனர், அசனி அஞ்ச ஏ. - 1.8.43
462 - அரக்கர் சினந்து பொருதல் (462-464)
எய்தனர், எறிந்தனர், எரியும் நீரும் ஆ
பெய்தனர், பெரும் வரை பிடுங்கி வீசினர்,
வைதனர், தெழித்தனர், மழுக் கொண்டு ஓச்சினர்,
செய்தனர் ஒன்று அல தீய மாயம் ஏ. - 1.8.44
463 - ஊன் நகு படைக்கலம் உருத்து வீசின,
கானகம் மறைத்தன கால மாரி போல்;
மீன் நகு திரைக் கடல் விசும்பு போர்த்து என,
வானகம் மறைத்தன வளைந்த சேனை ஏ. - 1.8.45
464 - வளைந்த சேனையின் தோற்றம்
வில்லொடு மின்னு வாள் மிடைந்து உலாவிடப்
பல் இயம் கடிப்பினின் இடிக்கும் பல் படை
ஒல் என உரறிய ஊழிப் பேர்ச்சியின்,
வல்லை வந்து எழுந்தது ஓர் மழையும் போன்றது; ஏ. - 1.8.46
465 - அரக்கர் படையினை இராமபிரான் இலக்குவற்குக் காட்டுதல்
"கவர் உடை எயிற்றினர், கடித்த வாயினர்,
துவர் நிறப் பங்கியர், சுழல் கண் தீயினர்,
பவர் சடை அந்தணன் பணித்த தீயவர்,
இவர்” என இலக்குவற்கு இராமன் காட்டினான். - 1.8.47
466 - இலக்குவன் இராமபிரானிடம் கூறுதல்
கண்ட அக் குமரனும், கடைக் கண் தீ உக
விண் தனை நோக்கித் தன் வில்லை நோக்கினான்;
"அண்டர் நாயக! இனிக் காண்டி; ஈண்டு அவர்
துண்டம் வீழ்வன” எனத் தொழுது சொல்லினான். - 1.8.48
467 - இராமபிரான் வேள்விச்சாலையைச் சரக்கூடமாக்குதல்
'தூம வேல் அரக்கர் தம் நிணமும் சோரியும்
ஓம வெம் கனல் இடை உகும்' என்று உன்னி, அத்
தாமரைக் கண்ணனும் சரங்களே கொடு
கோமுனி இருக்கை ஓர் கூடம் ஆக்கினான். - 1.8.49
468 - சித்தாச்சிரம முனிவர் இராமபிரானிடம் அடைக்கலம் புகுதல்
நஞ்சு அட எழுதலும், நடுங்கி, நாள் மதிச்
செஞ் சடைக் கடவுளை அடையும் தேவர் போல்
வஞ்சனை அரக்கரை வெருவி, மாதவர்,
'அஞ்சன வண்ண; நின் அபயம் யாம்' என்றார். - 1.8.50
469 - இராமபிரான் அரக்கரொடு பொருதல் (469-470)
கவித்தனன் கரதலம்; கலங்கலீர் எனச்
செவி தலம் நிறுத்தினன் சிலையின் தெய்வ நாண்;
புவி தலம் குருதியின் புணரி ஆக்கினன்;
குவித்தனன் அரக்கர்தம் சிரத்தின் குன்றம் ஏ. - 1.8.51
470 - இராமபிரான் ஏவிய வாளி, சுவாகுவைக் கொன்று
மாரீசனைக் கடலிலே தள்ளுதல்
திருமகள் நாயகன் தெய்வ வாளி தான்,
வெரு வரு தாடகை பயந்த வீரர்கள்
இருவரில், ஒருவனைக் கடலின் இட்டது; அங்கு
ஒருவனை அந்தகன் புரம் அத்து இன் உய்த்ததே. - 1.8.52
471 - அரக்கர்படை இரிந்து ஓடுதல்
துணர்த்த பூ தொடையலான் பகழி தூவினான்,
கணம் அத்து இடை விசும்பினைக் கவித்துத் தூர்த்தலால்,
பிணம் அத்து இடை நடந்து'இவர் பிடிப்பர் ஈண்டு' எனா
உணர்த்தினர் ஒருவர் முன் ஒருவர் ஓடினார். - 1.8.53
472 - போர்க்களத்தில் நிகழ்ந்தவை
ஓடின அரக்கரை உருமின் வெம் கணை
கூடின; குறைத்தலை, மிறைத்துக் கூத்து நின்று
ஆடின; அலகையும், ஐயன் கீர்த்தியைப்
பாடின; பரந்தன பறவைப் பந்தர் ஏ. - 1.8.54
473 - தேவர்கள் இராமபிரானைப் பாராட்டுதல்
பந்தரைக் கிழித்தது பரந்த பூ மழை;
அந்தர துந்துமி முகிலின் ஆர்த்தன;
இந்திரன் முதலிய அமரர் ஈண்டினர்,
சுந்தர வில்லியைத் தொழுது வாழ்த்தினார். - 1.8.55
474 - புனித மா தவர், ஆசியின் பூ மழை பொழிந்தார்;
அனைய கானத்து மரங்களும், அலர் மழை சொரிந்த;
முனியும் , அவ் வழி வேள்வியை முறைமையின் முற்றி ,
இனிய சிந்தையன், இராமனுக்கு இனையன இசைத்தான். - 1.8.56
475 - விசுவாமித்திர முனிவன் இராமபிரானைப் பாராட்டுதல்
"பாக்கியம் எனக்கு உளது என
நினைவுறும் பான்மை
போக்கி, நிற்கு இது பொருள் என
உணர்கிலென், புவனம்
ஆக்கி மற்று அவை அகிலமும்
அணி வயிற்று அடக்கிக்
காக்கும் நீ, ஒரு வேள்வி
காத்தனை எனும் கருது ஏ. - 1.8.57
476 - இராமபிரான், முனிவன்பால் இன்று யான்செய்யும் பணி என் எனல்
என்று கூறிய பின்னர், அவ்
எழில் மலர்க் கானத்து
அன்று தான் உறைந்து,
அருந்தவ முனிவரோடு இருந்த
குன்று போல் குணத்தான்
எதிர், கோசலை குரிசில்,
'இன்று யான் செயும் பணி என் கொல்?
பணி' என இசைத்தான். - 1.8.58
477 - விசுவாமித்திர முனிவன் கூறுதல்
"அரிய யான் சொலின் ஐய! நின்கு அரியது ஒன்று இல்லை;
பெரிய காரியம் உள; அவை முடிப்பது பின்னர்;
விரியும் வார் புனல் மருதம் சூழ் மிதிலையர் கோமான்
புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக” எனப் போனார். - 1.8.59
1.9 . அகலிகைப் படலம் (478- 563 )
478 - மூவரும் சோணை நதியை அடைதல்
அலம்பும் மா மணி ஆரம் அத்து ஒடு அகில் அளை புளினம்
நலம் பெய் பூண் முலை நாகு இள வஞ்சி ஆம் மருங்குல்
புலம்பு மேகலைப் புது மலர் புனை அறல் கூந்தல்
சிலம்பு சூழும் கால் சோணை ஆம் தெரிவையைச் சேர்ந்தார். - 1.9.1
479 - சூரியாத்தமன வருணனை
நதிக்கு வந்து அவர் எய்தலும்,
அருணன் தன் நயனக்
கதிக்கும் முந்து உறு கலினம் மான்
தேரொடும், கதிரோன்
உதிக்கும் காலையில் தண்மை செய்வான்
தனது உருவில்
கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான்போல்
கடல் குளித்தான். - 1.9.2
480 - மூவரும் ஒரு சோலையில் தங்குதல்
கறங்கு தண் புனல் கடி நெடும் தாள் உடைக் கமலம் அத்து
அறம் கொள் நாள் மலர்க் கோயில்கள் இதழ்க் கதவு அடைப்பப்
பிறங்கு தாமரை வனம் விட்டுப் பெடையொடு களி வண்டு
உறங்குகின்றது ஓர் நறு மலர்ச் சோலை புக்கு உறைந்தார். - 1.9.3
481 - அச்சோலையைப்பற்றி இராமபிரான் வினாவ முனிவர்பிரான் விடைதருதல்
இனைய சோலை மற்ற யாது? என இராகவன் வினவ,
வினை எலாம் அற நோற்றவன் விளம்புவான் 'மேல் நாள்
தனயர் ஆனவர்க்கு இரங்கியே, காசிபன் தனது
மனை உளாள், தவம் புரிந்தனள் இவண்' என வலித்தான். - 1.9.4
482 - வித்தியாதரமங்கை திருமகள்பால் மலர்மாலை பெறுதல்
அண்ட கோளகைக்கு அ புறம் அத்து என்னை ஆள் உடைய
கொண்டல் நீள் பதத்து எய்தி ஓர் விஞ்சையர் கோதை
புண்டரீகை மென் பதத்து இசை புணர்த்தனள் புகழ
வண்டு அறா மது மாலை கைக் கொடுத்தனள் மகிழ்ந்து. - 1.9.5
483 - விஞ்சைமகள் மாலையைத் துருவாசமுனிவருக்கு அளித்தல் (483-484)
அன்ன மாலையை யாழ் இடை பிணித்து அயன் உலகம்
கன்னி மீடலும், கசட்டு உடை முனி எதிர் காணா
என்னை ஆள் உடை நாயகிக்கு இசை எடுப்பவள் என்று
அன்னள் தாள் இணை வணங்கி நின்று ஏத்தலும் அனையாள். - 1.9.6
484 - 'உலகம் யாவையும் படைத்து அளித்து
உண்டு உமிழ் ஒருவன்
இலகும் மார்பு அகத்து இருந்து உயிர்
யாவையும் ஈன்ற
திலக வாள் நுதல், சென்னியில்
சூடிய தெரியல்
அலகு இல் மா முனி பெறுக' என
அளித்தனள் அளியால். - 1.9.7
485 - துருவாசன் இந்திரலோகமடைதல்
'தெய்வம் நாயகி சென்னியில்
சூடிய தெரியல்
ஐய! யான் பெறப் புரிந்தது எத்
தவம்' என ஆடி
வெய்ய மாமுனி சென்னியில்
சூடியே, வினை போய்
உய்யும் ஆறு இது என்று உவந்து உவந்து
உம்பர் நாடு அடைந்தான். - 1.9.8
486 - இந்திரன் பவனிகண்டு முனிவர் வியப்படைதல் (486-489)
பெய்யும் மா முகில், வெள்ளி அம் பிறங்கல் மீப் பிறழும்
செய்ய தாமரை ஆயிரம் மலர்ந்து, செங் கதிரின்
மொய்ய சோதியை மிலைச்சிய முறைமை போன்று ஒளிரும்
மெய்யினோடு, அயிராவதக் களிற்றின்மேல் விளங்க. - 1.9.9
487 - அரம்பை மேனகை திலோத்தமை உருப்பசி, அனங்கன்
சரம் பெய் தூணியில் தளிர் அடி நூபுரம் தழைப்பக்,
கரும்பையும் சுவை கைப்பித்த குதலையர் விளரி
நிரம்பு பாடல் ஓடு, ஆடினர் வீதிகள் நெருங்க. - 1.9.10
488 - நீல மால் வரை தவழ்தரு கதிர் நிலாக் கற்றை
போலவே இரு புடையினும் சாமரை புரளக்
கோலம் மா மதி குறைவு அற நிறைந்து ஒளி குலாவ
மேல் இவர்ந்து என வெள்ளி அம் தனிக் குடை விளங்க. - 1.9.11
489 - தழங்கு பேரியும் குறடு ஒடு பாண்டிலும் சங்கும்
வழங்கு கம்பலை, மங்கல கீதம் அத்து ஐ மறைப்ப,
முழங்கும் நான் மறை மூரி நீர் முழக்கு என உலகை
விழுங்குமா வரும் விழா அணி கண்டு, உளம் வியந்தான் - 1.9.12
490 - துருவாசன் இந்திரனுக்குத் தந்த மாலையை
அயிராவதம் காலின் கீழ் இட்டுத் தேய்த்தல்
தனை ஒவாதவன், மகிழ்ச்சியால் வாசவன் தன் கை
வனையும் மாலையை நீட்டலும், தோட்டியால் வாங்கித்
துனை வலத்து அயிராவதம் அத்து எருத்து இடை தொடுத்தான்:
பனை செய் கையினால் பறித்து அடி படுத்தது அப் பகடு. - 1.9.13
491 - துருவாசமுனிவர் சினம்
கண்ட மாமுனி விழிவழி ஒழுகு வெம் கனலால்
அண்ட கூடமும் சாம்பராய் ஒழியும் என்று அழியா
விண்டு நீங்கினர் விண்ணவர் இரு சுடர் மீண்ட
எண் திசா முகம் இருண்டன சுழன்றது எவ் உலகும். - 1.9.14
492 - துருவாசமுனிவர் இந்திரனை வெகுளுதல்
புகை எழுந்தன உயிர் தொறும், எயில் பொடித்தவனின்
நகை எழுந்தன, நிவந்தன புருவம் நல் நுதலில்,
சிகை எழும் சுடர் விழியினன், அசனியும் திகைப்ப
மிகை எழுந்திடு சதமக! கேள் என வெகுண்டான். - 1.9.15
493 - துருவாசமுனிவன் மாலை பெற்ற வரலாறு கூறுதல்
பூத நாயகன் புவி மகள் நாயகன் பொரு இல்
வேத நாயகன் மார்பு அகத்து இனிது வீற்றிருக்கும்
ஆதி நாயகி விருப்பு உறு தெரியல் கொண்டு அணைந்த
மாதராள் வயின் பெற்றனன் முயன்ற மா தவத்தால். - 1.9.16
494 - துருவாசமுனிவன் இந்திரனுக்குச் சாபமிடுதல்
இன்று நின் பெரும் செவ்வி கண்டு, உவகையின் ஈந்த
மன்றல் அம் தொடை இகழ்ந்தனை, நினது மா நிதியும்
ஒன்று அலாத பல் வளங்களும் உவரி புக்கு ஒளிப்பக்,
குன்றி நீ துயர் உறுக என உரைத்தனன் கொதித்து ஏ. - 1.9.17
495 - இந்திரன் செல்வம் யாவும் கடலில் மறைதல்
அர மடந்தையர் கற்பகம் நவ நிதி அமிர்தச்
சுரபி வெம் பரி மத மலை முதலிய தொடக்கு அற்று
ஒரு பெரும் பொருள் இன்றியே உவரி புக்கு ஒளிப்ப
வெருவி ஓடினர் விண்ணவர் கண்ணன் மேவாரின். - 1.9.18
496 - தேவர்கள் திருமாலைச் சரணடைதல்
வெய்ய மாமுனி வெகுளியால், விண் அகம் முதலாம்
வையம் யாவையும் வறுமை நோய் நலிதர, வானோர்
தையல் பாகனும் சதுமுகக் கடவுளும் கூடிச்
செய்ய தாமரைத் திரு உறு மார்பனைச் சேர்ந்தார். - 1.9.19
497 - பிரமன் முதலியோர்க்குத் திருமால் அபயமளித்தல்
வெம் சொல் மாமுனி வெகுளியால்
விளைந்தமை விளம்பிக்,
கஞ்ச நாள் மலர்க் கிழவனும்
கடவுளர் பிறரும்
'தஞ்சம் இல்லை; நின் சரணமே
சரண்' எனச் சலியாது,
'அஞ்சல் அஞ்சல்' என்று உரைத்தனன்
உலகு எலாம் அளந்தோன். - 1.9.20
498 - திருமால் பாற்கடலைக் கடையுமாறு கட்டளையிடல்
மத்து மந்தரம், வாசுகி கடை கயிறு, அடை தூண்
மெத்து சந்திரன், சுர அசுரர் வேறு வேறு உள்ள
கொத்து இரண்டு பால் வலிப்பவர், ஓடதி கொடுத்துக்
கத்து வாரிதி மறுகு உற அமிழ்து எழக் கடைமின். - 1.9.21
499 - தேவர்களின் மகிழ்ச்சி
'யாமும் அவ் வயின் வருதும், நீர் கதும் என எழுந்து
போமின்,' என்று அருள் புரிதலும், இறைஞ்சினர் புகழ்ந்தார்,
'நாமம் இன்று' எனக் குனித்தனர்,'நல்குரவு ஒழிந்தது
ஆம்' எனும் பெரும் களி துளக்கு உறுத்தல் ஆல் அமரர். - 1.9.22
500 - தேவர்கள் பாற்கடல் கடைதல்
மலை பிடுங்கினர், வாசுகி பிணித்தனர், மதியம்
நிலை பெறும்படி நட்டனர்; ஓடதி நிரைத்தார்,
அலை பெறும்படி பயோததி கடைந்தனர், அவனி
நிலை தளர்ந்திட அனந்தனும் கீழ் உற நெளித்தான். - 1.9.23
501 - பாற்கடலைக் கடைதற்குத் திருமால் உதவிபுரிதல்
திறல் கொள் ஆமையாய், முதுகினில் மந்தரம் திரிய,
விறல் கொள் ஆயிரம் தட கைகள் பரப்பி மீ வலிப்ப,
மறன் இலா முனி வெகுளியின் மறைந்தன வரவே,
அறன் நிலார் மனத்து அடையலா நெடும் தகை அமைத்தான். - 1.9.24
502 - அமிர்தத்தைத் தேவர்களே பெறுதல்
இறந்து நீங்கின யாவையும் எம்பிரான் அருளால்
பிறந்த; அவ் வயின், சுர அசுரர் தங்களில் பிணங்கச்
சிறந்த மோகினி மடந்தையால் அவுணர் தம் செய்கை
துறந்து மாண்டனர்; ஆர் அமிர்து அமரர்கள் துய்த்தார். - 1.9.25
503 - பாற்கடலில் தோன்றிய பொருள்களைத் திருமால் பங்கிடுதல்
வெருவும் ஆலமும் பிறையும் வெள் விடையவற்கு ஈந்து,
தருவும் வேறு உள தகைமையும் சதமகற்கு அருளி,
மருவு தொல் பெரு வளங்களும் வேறு உற வழங்கித்,
திருவும் ஆரமும் அணிந்தனன் சீதர, மூர்த்தி. - 1.9.26
504 - தேவரைக் கொல்லவல்ல புதல்வனைத்
தருமாறு திதி தன் கணவனை வேண்டல்
அந்த வேலையில், திதி, பெரும் துயர் உழந்து அழிவாள்,
வந்து, காசிபன் மலர் அடி வணங்கி,'என் மைந்தர்
இந்திர ஆதியர் புணர்ப்பினால் இறந்தனர்; எனக்கு ஓர்
மைந்தன் நீ அருள், அவர் தமை மடித்தலுக்கு' என்றாள். - 1.9.27
505 - திதி தவம்புரிதல்
என்று கூறலும்,'மகவு உனக்கு அளித்தனம்; இனி நீ
சென்று, பார் இடை பருவம் ஓர் ஆயிரம் தீர
நின்று, மா தவம் புரிதியேல் நினைவு முற்றுதி' என்று
அன்று கூறிடப் புரிந்தனள் அரும் தவம் அனையாள். - 1.9.28
506 - இந்திரன் திதியின் கருவைச் சிதைத்தல்
கேட்ட வாசவன், அன்னவள் கு அடிமையில் கிடைத்து,
வாட்டம் மா தவத்து உணர்ந்து, அவள் வயிற்று உறு மகவை
வீட்டியே எழு கூறு செய்திடுதலும், விம்மி
நாட்டம் நீர் தர, மருத்து எனும் நாமமும் நவின்றான். - 1.9.29
507 - திதி தவம்செய்த இடமூம் சரவணமும் காட்டல்
ஆயது இவ் இடம், அவ் இடம் அவிர் மதி அணிந்த
தூயவன் தனக்கு உமை வயின் தோன்றிய, தொல்லை
வாயுவும் புனல் கங்கையும் பொறுக்கலா வலத்த
சேய் , வளர்த்து அருள் சரவணம் என்பதும் தெரித்தான். - 1.9.30
508 - சூரியோதய வருணனை
காலன் மேனியில் கருகு இருள் கடிந்து, உலகு அளிப்பான்,
நீல ஆர்கலித் தேரொடும் நிறை கதிர்க் கடவுள்,
மாலின் மா மணி உந்தியின் அயனொடு வந்த
மூல தாமரை முழு மலர் முளைத்தென, முளைத்தான். - 1.9.31
509 - மூவரும் கங்கையைக் காணுதல்
அங்குநின்று எழுந்து அயன் முதல் மூவரும் அனையார்
செம் கண் ஏற்றவன் செறி சடைப் பழுவத்தின் நிறை தேன்
பொங்கு கொன்றை ஈர்த்து ஒழுகலால் பொன்னியைப் பொருவும்
கங்கை என்னும் அக் கரை பொரு திரு நதி கண்டார். - 1.9.32
510 - கங்கையின் வரலாறு
'இந்த மா நதிக்கு உற்றுள தகைமைய யாவும்
எந்தை கூறுக' என்று இராகவன் வினவுற, எனை ஆள்
மைந்த! நின் திரு மரபு உளான், அயோத்தி மா நகர் வாழ்
விந்தை சேர் புயன், சகரன், இம் மேதினி புரந்தோன். - 1.9.33
511 - சகரனுடைய புத்திர பௌத்திரர்கள்
விறல் கொள் வேந்தனுக்கு உரியவர் இருவரில், விதர்ப்பை
பொறையின் நல்கிய அசமஞ்சற்கு அஞ்சுமான் புதல்வன்;
பறவை வேந்தனுக்கு இளைய மென் சுமதி முன் பயந்த
அறனின் மைந்தர்கள் அறுபதினாயிரர் வலத்தார். - 1.9.34
512 - சகரன் வேள்விக்குதிரையை இந்திரன் ஒளித்தது
திண் திறல் புனை சகரனும் தனயர் சேவகங்கள்
கண்டு, முற்றிய அய மகம் புரிதலும், கனன்று
வண்டு துற்ற தார் வாசவற்கு உணர்த்தினர் வானோர்,
ஒண் திறல் பரி கபிலனது இடையினில் ஒளித்தான். - 1.9.35
513 - வேள்விக்குதிரை மறைந்ததை அம்சுமான் சகரனிடம் தெரிவித்தல்
வாவு வாசிபின் சென்றனன் அஞ்சுமான், மறுகிப்
பூவின் ஓர் இடம் இன்றியே நாடினன் புகுந்து,
தேவர் கோ மகன் கரந்தமை அறிந்திலன், திகைத்து,
மேவு தாதை தன் தாதைபால் உரைத்தனன் மீண்டு. - 1.9.36
514 - சகரர் பூமியைக் குடைந்து வேள்விக்குதிரையைத் தேடுதல்
கேட்ட வேந்தனும், மதலையர்க்கு அ மொழி கிளத்த,
வாட்டம் மீ கொளச் சகரர்கள் வடவையின் மறுகி,
நாட்டம் வெம் கனல் பொழிதர நால் நிலம் தடவித்,
தோட்டு நுங்கினர் புவியினைப் பாதலம் தோன்ற. - 1.9.37
515 - சகரர் பாதலஞ்சென்று கபிலமுனிவர் பின்புறம்
குதிரையைக்கண்டு அம்முனிவரை வருத்துதல்
நூறு யோசனை அகலமும் ஆழமும் நுடங்கக்
கூறு செய்தனர் என்பரால் : வடகுண திசையின்,
ஏறும் மாதவக் கபிலன்பின் இவுளி கண்டு எரியின்
சீறி வைதனர் செருக்கினர் நெருக்கினர் சினத்தார். - 1.9.38
516 - கபிலர் சினத்தால் சகரர் சாம்பராதலும் தூதர்
அரசற்கு அதனை அறிவித்தலும்
மூளும் வெம் சினத்து அருந்தவன் முனிந்து எரி விழிப்பப்
பூளை சூடி தன் நகையினில் எயில் பொடிந்தன போல்
ஆளும் மைந்தர் ஆறு அயுதரும் சாம்பராய் அவிந்தார்;
வேள்வி கொண்ட நல் வேந்தனுக்கு உரைத்தனர் வேய்கள். - 1.9.39
517 - அம்சுமான் குதிரைகொணரப் பாதலஞ்சேர்தல்
உழைத்து , வெம் துயர்க்கு ஈறு காண்கிலன், உணர்வு ஒழியா,
அழைத்து மைந்தன்தன் மைந்தனை,'அவர் கழிந்தனரேல்
இழைத்த வேள்வி இன்று இழப்பது ஓ?' என, அவன் எழுந்து
தழைத்த மாதவக் கபிலன் வாழ் பாதலம் சார்ந்தான். - 1.9.40
518 - கபிலமுனிவரிடத்தினின்று வேள்விக்குதிரை பெறுதல்
விண்டு நீங்கினர் உடல் உகு பிறங்கல் வெண் நீறு
கண்டு, துண் எனும் மனத்தினன், கபில மா முனிதன்
புண்டரீக மென் தாள் தொழுது எழுந்தனன், புகழக்,
'கொண்டு போதி நின் இவுளி' என்று உற்றதும் குறித்தான். - 1.9.41
519 - சகரன் வேள்விமுற்றிப் பரலோகம் செல்லல்
பழுது இலாதவன் உரைத்த சொல் கேட்டலும், பரிவால்
தொழுது, வாம் பரி கொணர்ந்து, அவி சுரர்களுக்கு ஈயா,
முழுதும் வேள்வியை முற்றுவித்து, அரசனும் முடிந்தான்;
எழுது கீர்த்தியாய்! மைந்தனுக்கு அரசியல் ஈந்து. - 1.9.42
520 - அஞ்சுமான் மரபில் பகிரதன் பிறத்தல்
சகரர் தொட்டலால், சாகரம் எனப் பெயர் தழைப்ப
மகர வாரிதி சிறந்தது; மகிதலம் முழுதும்
நிகரில் மைந்தனே புரந்தனன்; இவன் நெடு மரபில்
பகிரதன் எனும் பார்த்திவன் வந்து அவதரித்தான். - 1.9.43
521 - பகீரதன் தன் மூதாதையர் செய்தி வசிட்டரை வினாதல்
உலகம் யாவையும் பொது அறத் திகிரியை உருட்டி,
இலகு மன்னவன் இருந்துழி, இறந்தமை வினவ,
அலகில் தொல் முனி உரைத்திடக் கேட்டனன் அரசன்,
திலகம் மண் உற வணங்கி நின்று ஒரு மொழி செப்பும். - 1.9.44
522 - மூதாதையர் நற்கதியடையும் வகையைப் பகிரதன்
வினவ முனிவர்கூறத் தொடங்கல்
'கொடிய மாமுனி வெகுளியின் மடிந்த எம் குரவர்
முடிய நீள் நிரயத்தினில் அழுந்திடும் முறைமை
கடியும் ஆறு, எனக்கு அருந்தவம் அதற்கு உறு கருமம்
அடிகள் சாற்றுக' என்றலும், அந்தணன் அறைவான். - 1.9.45
523 - வசிட்டமுனிவன் உபாயம் கூறல்
'வையம் ஆள் உடை மன்னவர் மன்னவ! மடிந்தோர்
உய்ய, நீள் தவம், ஒழிவு அறு பகல் எலாம் ஒருங்கே
செய்ய நாள் மலர்க் கிழவனை நோக்கி நீ செய்தி;
நையல்' என்று இனிது உரைத்தனன் நவை அறு முனிவன். - 1.9.46
524 - பகீரதன் தவம்புரியப் பிரமதேவன் தோன்றுதல்
ஞாலம் யாவையும் சுமந்திரன் தன் வயின் நல்கிக்,
கோலும் மா தவத்து இமம் கிரி மருங்கினில் குறுகிக்,
காலம் ஓர் பதினாயிரம் அரும்தவம் கழிப்ப,
மூல தாமரை முழு முதல் கிழவன் முந்தினன் ஏ. - 1.9.47
525 - பிரமன், கங்காநதியால் நின் முன்னோர் நல் கதி பெறுவர் எனல்
'நின் பெருந்தவம் மகிழ்ந்தனன்; நினது நீள் குரவர்
முன்பு இறந்தனர் அரும் தவன் முனிவின் ஆதலினால்,
மன் பெரும் புவி அதனில் வான் நதி கடிது அணுகி,
என்பு தோயுமேல், இரும் கதி பெறுவர்' என்று இசைத்தான். - 1.9.48
526 - பிரமன் வரம் தந்து மறைதல்
'மாக மா நதி புவி இடை நடக்கின், மற்று அவள் தன்
வேகம் ஆற்றுதல் கண் ணுதற்கு அன்றி, வேறு அரிது ஆல்;
தோகை பாகனை நோக்கி நீ அருந்தவம் தொடங்கு, என்று
ஏகினான்; உலகு அனைத்தும் எவ் உயிர்களும் ஈன்றான். - 1.9.49
527 - பகீரதன் சிவபிரானையும் கங்கையையும் குறித்து நோற்றல்
மங்கை பாகனை நோக்கி, முன் மொழிந்தன வருடம்
தங்கு மா தவம் புரிதலும், தழல் நிறக் கடவுள்,
'அங்கு வந்து நின் கருத்தினை முடித்தும்' என்று; அகன்றான்
கங்கையைத் தொழக் காலம் ஐயாயிரம் கழித்தான். - 1.9.50
528 - கங்கை கூறுதல்
ஒரு மடம் கொடி ஆகி வந்து, உனது மா தவத்து என்
பொரு புனல் கொடி வரின், அதன் வேகம் ஆர் பொறுப்பார்?
அரன் உரைத்த சொல் வினோதம், மற்று இன்னும் நீ அறிந்து
பெருகும் நல் தவம் புரிக, என வர நதி பெயர்ந்தாள். - 1.9.51
529 - பகீரதன் சிவபிரானையும் கங்கையையும் குறித்து மீண்டும் நோற்றல் (529-530)
கரந்தை மத்தமொடு எருக்கு அலர் கூவிளை கடுக்கை
நிரந்த பொன் சடை நின்மலக் கொழுந்தினை நினையா,
அரந்தை உற்றவன், இரண்டு அரை ஆயிரம் ஆண்டு
புரிந்து நல் தவம் பொலிதர, வரை உறை புனிதன். - 1.9.52
530 - எதிர்ந்து,'நின் நினைவு என்' என, இறைஞ்சி,'எம் பெரும!
அதிர்ந்து, கங்கை ஈது அறைந்தனள்' என்றலும்,'அஞ்சேல்
பிதிர்ந்திடா வகை காத்தும்' என்று ஏகிய பின்றை,
முதிர்ந்த மாதவம் இரண்டரை ஆயிரம் முடித்தான். - 1.9.53
531 - பகீரதன் புரிந்த தவங்களின் சிறப்பு
பெருகு நீரொடு பூதியும் வாயுவும் பிறங்கு
சருகும் வெம் கதிர் ஒளியையும் துய்த்து, மற்று அதையும்
பருகல் இன்றியும், முப்பதினாயிரம் பருவம்
முருகு காதலின் மன்னவன் அருந்தவம் முயன்றான். - 1.9.54
532 - கங்கைவெள்ளத்தைச் சிவபிரான் சடையினில் கரத்தல்
உந்தி அம்புயத்து உதித்தவன் உறைதரும் உலகும்
இந்திரர் ஆதியர் உலகமும் நடுக்கு உற இரைத்து
வந்து தோன்றினள் வரநதி, மலைமகள் கொழுநன்,
சிந்திடாது ஒரு சடையினில் கரந்தனன் சேர. - 1.9.55
533 - கங்கையை ஒரு சிறிது பூமியில் விடுதல்
புல் நுனித் தரு பனி என
வான் நதி, புனிதன்
சென்னியில் கரந்து ஒளித்தலும்,
வணங்கினன், திகைத்து ,
மன்னன் நிற்றலும்,'வருந்தல், நம்
சடையள் வான் நதி இன்று'
என்ன விட்டனன்; ஒரு சிறிது
அவனி போந்து இழிந்தாள். - 1.9.56
534 - கங்கையைச் சன்னுமுனிவன் பருகி வெளியிட, அது சாகரரின்
உடற்சாம்பலை நனைத்தல் (534-535)
இழிந்த கங்கை முன் மன்னவன் விரை ஒடும் ஏகக்,
கழிந்த மன்னவர் கதி பெற முடுகிய கதியால்,
அழுந்து மாதவச் சன்னுவின் வேள்வியை அழிப்பக்,
கொழுந்து விட்டு எரி வெகுளியன் குடங்கை இல் கொள்ளா, - 1.9.58
535 - உண்டு உவந்தனன் மறை முனிக்
கணங்கள் கண்டு உவப்பக்
கண்டு வேந்தனும், வணங்கி, முன்
நிகழ்ந்தன கழறக்
'கொண்டு போக' எனச் செவி வழிக்
கொடுத்தனன், குதித்து
விண்டு நீங்கினர் உடல் உகு
பொடியின் மேவினள் ஏ. - 1.9.58
536 - பகீரதன் அயோத்திக்கு மீளுதல்
நிரய முற்றிய சகரர்கள்
நெடும் கதி செல்ல,
விரை மலர் பொழிந்து ஆர்த்தன
விண்ணவர் குழாங்கள்;
முரைசம் முற்றிய பல் இயம்
முறை முறை துவைப்ப,
அரைசன் அப்பொழுது அணி மதில்
அயோத்தி மீண்டு அடைந்தான். - 1.9.59
537 - கங்கையின் சிறப்பு
அண்ட கோளகைப் புறத்தது ஆய், அகிலம் அன்று அளந்த
புண்டரீக மென் பதம் அத்து இடை பிறந்து, பூ மகனார்
கொண்ட தீர்த்தமாய், அரன் கொளப், பகிரதன் கொணர,
மண் தலத்து வந்து அடைந்தது; இம் மா நதி மைந்த! - 1.9.60
538 - கங்கையின் வேறு பெயர்கட்குக் காரணம்
சகரர்தம் பொருட்டு அருந்தவம் பெரும் பகல் தள்ளிப்
பகிரதன் கொணர்ந்திடுதலால்,'பகிரதி' ஆகி,
மகிதலம் அத்து இடை சன்னுவின் செவி விழி வரலால்,
நிகரில்'சானவி' எனப் பெயர் படைத்தது இந் நீத்தம். - 1.9.61
539 - மூவரும் விதேகநாட்டை அடைதல் (539-540)
என்று கூறலும், வியப்பினொடு உவந்தனர் இறைஞ்சிச்,
சென்று தீர்ந்தனர் கங்கையை; விசாலை வாழ் சிகரக்
குன்று போல் புயத்து அரசன் வந்து அடி இணை குறுக,
நின்று நல் உரை விளம்பி, மற்று அவ் வயின் நீங்கா. - 1.9.62
540 - பள்ளி நீங்கிய பங்கயப் பழன நல் நாரை,
வெள்ள வான் களை களைவு உறு கடைசியர் மிளிர்ந்த
கள்ள வாள் நெடும் கண் நிழல் கயல் எனக் கருதா,
அள்ளி, நாண் உறும், அகன் பணை மிதிலை நாடு அடைந்தார். - 1.9.63
541 - விதேகநாட்டுச் சோலைகளின் சிறப்பு
வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க,
அரும்பு நாள் மலர் அசோகங்கள் அலர் விளக்கு எடுப்ப,
நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறும் மலர் யாழில்
சுரும்பு பாண் செயத், தோகை நின்று ஆடுவ சோலை. - 1.9.64
542 - கழனிகளின் சிறப்பு
பட்ட வாள் நுதல் மடந்தையர் பார்ப்பு எனும் தூதால்
எட்ட ஆதரித்து உழல்பவர் இதயங்கள் வெறுப்ப,
வட்ட நாள் மரை மலரின் மேல் வயல் இடை மள்ளர்
கட்ட காவி, அம் கண் கடை காட்டுவ கழனி. - 1.9.65
543 - பொய்கைகளின் சிறப்பு
தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடரக்
கூவும் மென் குயில் குதலையர் குடைந்த தண் புனல் வாய்,
ஓவில் குங்குமச் சுவடு உற, ஒன்று ஒடு ஒன்று ஊடிப்
பூ உறங்கினும் புள் உறங்காதன பொய்கை. - 1.9.66
544 - யாறுகளின் சிறப்பு
முறையினின் முது மேதியின் முலை வழி பாலும்,
துறையில் நின்று உயர் மா கனி தூங்கிய சாறும்,
அறையும் மென் கரும்பு ஆடிய அமுதமும், அழி தேம்
நறையும் அல்லது நளிர் புனல் பெருகலா நதிகள். - 1.9.67
545 - நீரோடைகளின் சிறப்பு
இழைக்கும் நுண் இடை இடைதர முகடு உயர் கொங்கை
மழைக் கண் மங்கையர், அரங்கினில் வயிரியர் முழவம்
முழக்கும் இன் இசை, வெருவிய மோட்டு இள மூரி
உழக்க, வாளைகள் பாளையில் குதிப்பன ஓடை. - 1.9.68
546 - குளங்களின் சிறப்பு
படை நெடுங் கண் வாள் உறை புகப் படர் புனல் மூழ்கிக்
கடைய, முன் கடல் செழு திரு எழும் படி காட்டி,
மிடையும் வெள் வளை புள்ளொடும் ஒலிப்ப, மெல் இயலார்
குடைய, வண்டு இனம் கடி மலர் குடைவன குளங்கள். - 1.9.69
547 - அகலிகை கல்லாய்க்கிடந்த மேட்டை மூவரும் காணுதல்
இனைய நாட்டினை இனிது சென்று, இஞ்சி சூழ் மிதிலை
புனையும் நீள் கொடிப் புரிசையின் புறத்து வந்து இறுத்தார்;
மனையின் மாட்சியை அழித்து, இழி மாதவப் பன்னி,
கனையும் மேட்டு உயர் கரும் கல் ஓர் வெள் இடை கண்டார். - 1.9.70
548 - அகலிகை முன்னையவடிவம் பெறுதல்
கண்ட கல் மிசைக் காகுத்தன் கழல் துகள் கதுவ ,
உண்ட பேதைமை மயக்கு அற, வேறுபட்டு, உருவம்
கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்பப்
பண்டை வண்ணம் ஆய் நின்றனள்; மாமுனி பணிப்பான். - 1.9.71
549 - அகலிகையை முனிவன் இராமனுக்கு அறிவித்தல்
மா இரு விசும்பில் கங்கை மண் மிசை இழித்தோன் மைந்த!
மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள்,
தீ வினை நயந்து செய்த தேவர் கோன் தனக்கு செங்கண்
ஆயிரம் அளித்தோன் பன்னி, அகலிகை ஆகும், என்றான். - 1.9.72
550 - அகலிகையின் சாபவரலாற்றை இராமன் உசாவுதல்
பொன்னை ஏர் சடையான் கூறக்
கேட்டலும் பூமின், கேள்வன்,
என்னை ஏ! என்னையே! இவ்
உலக இயல் இருந்த வண்ணம்;
முன்னை ஊழ் வினையினால் ஓ?
நடுவு ஒன்று முடிந்தது உண்டு ஓ?
'அன்னையே அனையாட்கு இவ் ஆறு
அடுத்த ஆறு அருளுக' என்றான். - 1.9.73
551 - இந்திரன் அகலிகையை அணைய விழைதல்
அவ் உரை இராமன் கூற,
அறிவனும் அவனை நோக்கிச்
செவ்வியோய்! கேட்டி, மேல் நாள்
செறி சுடர்க் குலிசத்து அண்ணல்,
அவ்வியம் அவித்த சிந்தை
முனிவனை அற்றம் நோக்கி,
நவ்வி போல் விழியினாள் தன்
வனம் முலை நணுகல் உற்றான். - 1.9.74
552 - இந்திரன் கௌதமனுருவொடு புகுதல்
தையலாள் நயன வேலும்
மன்மதன் சரமும் பாய,
உய்யலாம் உறுதி நாடி
உழல்பவன், ஒரு நாள் உற்ற
மையலால் அறிவு நீங்கி,
மா முனிக்கு அற்றம் செய்து,
பொய் இலா உள்ளத்தான் தன்
உருவமே கொண்டு புக்கான். - 1.9.75
553 - இந்திரன் அகலிகையை அணைந்திருத்தலும் கௌதம முனிவர் வருதலும்
புக்கு, அவளோடும் காமப்
புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு, இருத்தலோடும்,
உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்
தக்கது அன்று என்ன ஓராள்,
தாழ்ந்தனள் இருப்பத், தாழா
முக் கணன் அனைய ஆற்றல்
முனிவனும் முடுகி வந்தான். - 1.9.76
554 - இந்திரன் அஞ்சிப் பூனையாய்ப் போதல்
சரம் தரு சாபம் அல்லால் தடுப்பு அரும் சாபம் வல்ல
வரம் தரு முனிவன் எய்த வருதலும், வெருவி, மாயா
நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள்,
புரந்தரன் நடுங்கி ஆங்கு ஓர் பூசையாய்ப் போகல் உற்றான். - 1.9.77
555 - கௌதமன் இந்திரனுக்குச் சாபங் கொடுத்தல்
தீ விழி சிந்த நோக்கிச்,
செய்ததை உணர்ந்து, செய்ய,
தூயவன், அவனை நின்கைச்
சுடு சரம் அனைய சொல்லால்,
'ஆயிரம் மாதர்க்கு உள்ள
அறிகுறி உனக்கு உண்டாக' என்று
ஏயினன்; அவை எலாம் வந்து
இயைந்தன இமைப்பின் முன்னம். - 1.9.78
556 - கௌதமன் அகலிகைக்குச் சாபங் கொடுத்தல்
எல்லையில் நாணம் எய்தி, யாவர்க்கும் நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும் புரந்தரன் போயபின்றை,
மெல்லியலாளை நோக்கி, விலை மகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி என்றான்; கரும் கல் ஆய் மருங்கு வீழ்வாள். - 1.9.79
557 - அகலிகை வேண்டக் கௌதமன் சாபம் நீங்கும்வகை கூறுதல்
பிழைத்தது பொறுத்தல் என்றும்
பெரியவர் கடனே என்பர்,
'அழல் தரும் கடவுள் அன்னாய்!
முடிவு இதற்கு அருளுக' என்னத்,
'தழைத்து வண்டு இமிரும் தண் தார்த்
தசரத ராமன் என்பான்
கழல் துகள் கதுவ, இந்தக்
கல் உருத் தவிர்தி' என்றான். - 1.9.80
558 - இந்திரன் சாபத்தை முனிவன் போக்குதல்
அந்த இந்திரனைக் கண்ட அமரர்கள், பிரமன் முன்னா
வந்து, கோதமனை வேண்ட, மற்று அவை தவிர்த்து, மாறாச்
சிந்தையின் முனிவு தீர்ந்து, சிறந்த ஆயிரம் கண் ஆக்கத்,
தம் தமது உலகு புக்கார்; தையலும் கிடந்தாள் கல்லாய். - 1.9.81
559 - விசுவாமித்திரன் இராமனைப் புகழ்தல்
இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்,
இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய் வண்ணம் அன்றி, மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டு ஓ?
மை வண்ணத்து அரக்கி போரின்
மழை வண்ணத்து அண்ணல் ஏ! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்,
கால் வண்ணம் இங்குக் கண்டேன். - 1.9.82
560 - இராமன் அகலிகையை வணங்கிச் செல்லுதல்
தீது இலா உதவி செய்த
சேவடிக் கரிய செம்மல்,
கோது இலாக் குணத்தான் சொன்ன
பொருள் எலாம் மனத்து இல் கொண்டு,
'மாதவன் அருள் உண்டாக
வழிபடு, படர் உறாதே
போது நீ அன்னை' என்று
பொன் அடி வணங்கிப் போனான். - 1.9.83
561 - விசுவாமித்திரன் அகலிகையை ஏற்றுக்கொள்ளுமாறு
கௌதமரிடம் கூறுதல் (561-562)
அருந்தவன் உறையுள் தன்னை அனையவர் அணுகலோடும்,
விருந்தினர் தம்மைக் காணா விம்மலால் வியந்த நெஞ்சன்,
பரிந்து எதிர் கொண்டு புக்குக் கடன் முறை பழுது உறாமல்
புரிந்த பின், காதி செம்மல், புனித மாதவனை நோக்கி. - 1.9.84
562 - 'அஞ்சன வண்ணத்தான் தன்
அடித் துகள் கதுவா முன்னம்,
வஞ்சி போல் இடையாள் முன்னை
வண்ணத்தள் ஆகி நின்றாள்;
நெஞ்சினால் பிழை இலாளை ,
நீ அழைத்திடுக' என்னக்,
கஞ்ச நாள் மலரோன் அன்ன
முனிவனும் கருத்துள் கொண்டான். - 1.9.85
563 - அகலிகையைக் கௌதமரிடம் சேர்ப்பித்து
மூவரும் மிதிலையை அடைதல்
குணங்களால் உயர்ந்த வள்ளல், கோதமன் கமலத் தாள்கள்
வணங்கினன், வலம் கொண்டு ஏத்தி, மாசு அறு கற்பின் மிக்க
அணங்கினை அவன் கை ஈந்து, ஆண்டு அரும் தவன் ஓடு உம் வாச
மணம் கிளர் சோலை நீங்கி, மணி மதில் கிடக்கை கண்டார். - 1.9.86
1.10 . மிதிலைக் காட்சிப் படலம் (564 - 720)
564 - மிதிலை வருணனை: கொடிகளின் தோற்றம்
மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து,
செய்யவள் இருந்தாள்: என்று, செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி, அந்தக் கடி நகர், கமலச் செங்கண்
ஐயனை'ஒல்லை வா' என்று அழைப்பது போன்றது அம்மா. - 1.10.1
565 - நிரம்பிய மாடத்து உம்பர்
நீள்மணிக் கொடிகள் எல்லாம்,
தரம் பிறர் இன்மை உன்னித்
தருமமே தூது செல்ல,
'வரம்பு இல் பேர் அழகினாளை
மணம் செய்வான் வருகின்றான்' என்று
அரம்பையர் விசும்பின் ஆடும்
ஆடலின் ஆடக் கண்டார். - 1.10.2
566 - மிதிலையுள் மூவரும் கண்ட காட்சிகள் (566-584)
யானைப் போர்
தயிர் உறு மத்தில் காம சரம் படத் தலைப்பட்டு ஊடும்
உயிர் உறு காதலாரின், ஒன்றை ஒன்று ஒருவகில்லாச்
செயிர் உறும் மனத்த ஆகித், தீத் திரள் செங்கண் சிந்த,
வயிர வாள் மருப்பு யானை, மலை என மலைவ கண்டார். - 1.10.3
567 - துகிற்கொடித் தோற்றம்
பகல் கதிர் மறைய வானம் பால் கடல் கடுப்ப நீண்ட
துகில் கொடி, மிதிலை மாடத்து உம்பரில் துவன்றி நின்ற,
முகில் குலம் தடவும் தோறும் நனைவன; முகிலின் சூழ்ந்த
அகில் புகை கதுவும் தோறும் புலர்வன ஆடக், கண்டார். - 1.10.4
568 - மூவரும் மிதிலைமா நகரின் உட்செல்லுதல்
ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து
'அவயவம் அமைக்கும் தன்மை
யாது?' எனத் திகைக்கும் அல்லால்
மதனற்கும் எழுத ஒண்ணாச்
சீதையைத் தருதலாலே
திருமகள் இருந்த செய்ய
போது எனப் பொலிந்து தோன்றும்
பொன் மதில் மிதிலை புக்கார். - 1.10.5
569 - மூவரும் மிதிலைநகர் வீதியிற் செல்லுதல் (569-571)
சொல் கலை முனிவன் உண்ட சுடர் மணிக் கடலும், துன்னி
அல் கலந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல,
வில் கலை நுதலினாரும் மைந்தரும் வெறுத்து நீத்த
பொன் கலன் கிடந்த மாட நெடுந் தெரு அதனில் போனார். - 1.10.6
570 - தாறு மாய் தறுகண் குன்றம் தட மத அருவி தாழ்ப்ப,
ஆறும் ஆய்க், கலின மா விலாழி ஆல் அழிந்து ஓர் ஆறாய்ச்,
சேறும் ஆய்த், தேர்கள் ஓடத் துகளும் ஆய், ஒன்றோடு ஒன்று
மாறு மாறு ஆகி, வாளா கிடக்கிலா மறுகில் சென்றார். - 1.10.7
571 - தண்டுதல் இன்றி ஒன்றித்
தலை தலை சிறந்த காதல்
உண்டபின், கலவிப் போரின்
ஒசிந்த மென் மகளிரே போல்
பண் தரு கிளவியார் தம்
புலவியில் பரிந்த கோதை,
வண்டு ஒடு கிடந்து, தேன் சோர்
மணி நெடும் தெருவில் சென்றார். - 1.10.8
572 - மகளிர் ஆடல்
நெய் திரள் நரம்பில் தந்த மழலையின் இயன்ற பாடல்,
தைவரு மகர வீணை தண்ணுமை தழுவித் தூங்கக்,
கை வழி நயனம் செல்லக், கண் வழி மனமும் செல்ல,
ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார். - 1.10.9
573 - மாதர்கள் ஊசலாடுதல்
பூசலின் எழுந்த வண்டு, மருங்கினுக்கு இரங்கிப் பொங்க,
மாசு உறு பிறவி போல வருவது போவது ஆகிக்,
காசு அறு பவளச் செம் காய் மரகதக் கமுகில் பூண்ட
ஊசலில், மகளிர், மைந்தர் சிந்தையோடு உலவக் கண்டார். - 1.10.10
574 - கடைவீதிகளின் சிறப்பு
வரம்பு அறு மணியும் பொன்னும் ஆரமும் கவரி வாலும்
சுரத்து இடை அகிலும் மஞ்ஞைத் தோகையும் தும்பிக் கொம்பும்,
குரம்பு அணை நிரப்பும் மள்ளர் குவிப்பு உற, கரைகள் தோறும்
பரப்பிய பொன்னி அன்ன ஆவணம் பலவும் கண்டார். - 1.10.11
575 - மூவரும் மகளிரிசைகேட்டு ஏகல்
வள் உகிர்த் தளிர் கை நோவ
மாடகம் பற்றி, வார்ந்த
கள் என நரம்பு வீக்கிக்,
கையொடு மனமும் கூட்டி,
வெள்ளிய முறுவல் தோன்ற
விருந்து என, மகளிர் ஈந்த
தெள் விளி பாணித் தீம் தேன்,
செவி மடுத்து இனிது சென்றார். - 1.10.12
576 - குதிரைகள் சுழன்றோடுதல்
கொட்பு உறு கலினம் பாய்மா , குலால் மகன் முடுக்கி விட்ட
மண் கலம் திகிரி போல வாளியின் வருவ, மேலோர்
நட்பினின் இடை அறாவாய், ஞானியர் உணர்வின் ஒன்று ஆய்க்,
கண் புலத்து இனைய என்று தெரிவில திரியக் கண்டார். - 1.10.13
577 - மாடங்களில் மாதர்கள் காட்சி
வாள் அரம் பொருத வேலும், மன்மதன் சிலையும், வண்டின்
கேளொடு கிடந்த நீலச் சுருளும், செம் கிடையும் கொண்டு,
நீள் இரும் களங்கம் நீக்கி, நிரை மணி மாட நெற்றிச்
சாளரம் தோறும் தோன்றும், சந்திர உதயம் கண்டார். - 1.10.14
578 - மதுவருந்தி ஊடிய மகளிர் முகக்காட்சி
பளிக்கு வள்ளத்து வார்த்த பசு நறுந் தேறல் மாந்தி,
வெளிப்படு நகைய ஆகி, வெறியன மிழற்றுகின்ற,
ஒளிப்பினும் ஒளிக்க ஒட்டா ஊடலை உணர்த்து மா போல்
களிப்பினை உணர்த்தும் செவ்விக் கமலங்கள் பலவும் கண்டார். - 1.10.15
579 - மகளிர் பந்தாடுங் காட்சி
மெய் வரு போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள்ளும்,
பை அரவு அல்குலார் தம் உள்ளமும் , பளிங்கும் போல
மை அரி நெடும் கண் நோக்கம் படுதலும் கருகி வந்து,
கை புகில் சிவந்து காட்டும், கந்துகம் பலவும் கண்டார். - 1.10.16
580 - மகளிர் வட்டாடும் இடங்கள்
கடகமும் குழையும் பூணும்
ஆரமும் கலிங்க நுண் நூல்
வடகமும் மகர யாழும்
வட்டினி கொடுத்து, வாசத்
தொடையல் அம் கோதை சோர,
பளிங்கு நாய் சிவப்பத் தொட்டுப்,
படை நெடுங் கண்ணார் வட்டு ஆட்டு
ஆடு இடம் பலவும் கண்டார். - 1.10.17
581 - நீர்நிலைகளில் மகளிராடுங் காட்சி
பங்கயம் குவளை ஆம்பல் படர் கொடி வள்ளை நீலம்
செங் கிடை தரங்கக் கெண்டை சினை வரால் இனைய தேம்பத்,
தங்கள் வேறு உவமை இல்லா அவயவம் தழுவிச், சாலும்
மங்கையர் விரும்பி ஆடும் வாவிகள் பலவும் கண்டார். - 1.10.18
582 - மைந்தர் வட்டாடும் இடங்கள்
இயங்குறு புலன்கள் அங்கும் இங்கும் கொண்டு ஏக ஏகி,
மயங்குபு திரிந்து நின்று மறுகுறும் உணர்வு இது, என்னப்
புயங்களில் கலவைச் சாந்தும் புணர் முலைச் சுவடும் நீங்காப்
பயம் கெழு குமரர் வட்டாட்டு ஆடிடம் பலவும் கண்டார். - 1.10.19
583 - இளமைந்தர்களின் காட்சி
வெம் சுடர் உரு உற்று அன்ன மேனியர், வேண்டிற்று ஈயும்
நெஞ்சினர், ஈசன் கண்ணில் நெருப்பு உறா அனங்கன் அன்னார்
செம் சிலை கரத்தர், மாதர் புலவிகள் திருத்திச் சேந்த
குஞ்சியர், சூழ நின்ற மைந்தர்கள் குழாங்கள் கண்டார் . - 1.10.20
584 - பூஞ்சோலைகளின் காட்சி
பாகு ஒக்கும் சொல் பைங்கிளியோடும் பல பேசி,
மாகம் அத்து உம்பர் மங்கையர் நாண் மலர் கொய்யும்,
தோகைக் கொம்பின் அன்னவர்க்கு, அன்னம் நடை தோற்றுப்
போகக் கண்டு, வண்டு இனம் ஆர்க்கும் பொழில் கண்டார். - 1.10.21
585 - அரண்மனையைச் சூழ்ந்துள்ள அகழி
உம்பர்க்கு ஏயும் மாளிகை ஓளி நிழல் பாய,
இம்பர்த் தோன்றும் நாகர் தம் நாட்டின் எழில் காட்டிப் ,
பம்பிப் பொங்கும் கங்கையின் ஆழ்ந்த படை மன்னன்
அம் பொன் கோயில் பொன் மதில் சுற்றும் அகழ் கண்டார். - 1.10.22
586 - கன்னிமாடத்தை அணுகி நிற்றல்
பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவே போல்
தென் உண் தேனில் தீம் சுவை, செம் சொல் கவி இன்பக்
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே, களி பேடு ஓடு
அன்னம் ஆடும் முன் துறை கண்டு அங்கு அயல் நின்றார் . - 1.10.23
587 - கன்னிமாடத்துள்ள சீதாதேவியின் சிறப்பு (587-593)
செப்பும் காலைச், செங்கமலத்தோன் முதல் யாரும்
எப் பெண்பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும்
அப் பெண் தானே ஆயின போது, இங்கு அயல் வேறு ஓர்
ஒப்பு, எங்கே கொண்டு எவ் வகை நாடி உரை செய்வேம். - 1.10.24
588 - உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் கரம் வைக்கும்
கமை ஆள் மேனி கண்டவர், காட்சிக் கரை காணார்,
இமையா நாட்டம் பெற்றிலம் என்றார், இரு கண்ணால்
அமையாது என்றார் அந்தர வானத்தவர் எல்லாம். - 1.10.25
589 - வென்று அம் மானைத் தார் அயில் வேலும் கொலை வாளும்
பின்ற, மானப் பேர் கயல் அஞ்சப், பிறழ் கண்ணாள்
குன்றம் ஆடக் கோவின் அளிக்கும் கடல் அன்றி,
அன்று அம் மாடத்து உம்பர் அளிக்கும் அமுது அன்னாள். - 1.10.26
590 - பெரும் தேன் இன் சொல் பெண் இவள் ஒப்பாள் ஒரு பெண் ஐத்,
தரும் தான் என்றால், நான்முகன் இன்னும் தரலாம் ஏ ?
அருந்தா அந்தத் தேவர் இரந்தால், அமுது என்னும்
மருந்தே அல்லாது, என் இனி நல்கும் மணி ஆழி. - 1.10.27
591 - அனையாள் மேனி கண்டபின், அண்டம் அத்து அரசு ஆளும்
வினையோர் மேவும் மேனகை ஆதி, மிளிர் வேல் கண்
இனையோர் உள்ளத்து இன்னலின் ஓர் தம் முகம் என்னும்
பனி தோய் வானின் வெள் மதிக்கு என்றும் பகல் அன்று ஏ. - 1.10.28
592 - மலர் மேல் நின்று இம் மங்கை இவ் வையம் அத்து இடை வைகப்,
பலகாலும் தம் மெய் நனி வாடும்படி நோற்றார்,
அலகு ஓ இல்லா அந்தணர் ஓ, நல் அறம் ஏ ஓ,
உலகோ, வானோ, உம்பர் கொல் ஓ! ஈது உணரேம் ஆல். - 1.10.29
593 - தம் நேர் இல்லா மங்கையர், செங்கைத் தளிர் மான் ஏ!
அன்னே! தேனே! ஆர் அமுதே என்று அடி போற்ற,
முன்னே முன்னே மொய் மலர் தூவி முறை சார,
பொன்னே சூழும் பூவின் ஒதுங்கிப் பொலிகின்றாள். - 1.10.30
594 - பொன் சேர் மென் கால் கிண்கிணி ஆரம், புனை ஆரம்,
கொன் சேர் அல்குல் மேகலை தாங்கும் கொடி அன்னார்,
தன் சேர் கோலம் அத்து இன் எழில் காணச், சத கோடி
மின் சேவிக்க, மின் அரசு என்னும்படி நின்றாள். - 1.10.31
595 - கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம்,
வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழி கொண்டாள்,
சொல்லும் தன்மைத்து அன்று அது; குன்றும் சுவரும் திண்
கல்லும் புல்லும் கண்டு உருகப், பெண் கனி நின்றாள். - 1.10.32
596 - வெம் களி விழிக்கு ஒரு விழவும் ஆய் அவர்,
கண்களில் காணவே களிப்பு நல்கலால்,
மங்கையர்க்கு இனியது ஓர் மருந்தும் ஆயவள்,
எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம் கொல் ஓ. - 1.10.33
597 - இழைகளும் குழைகளும் இன்ன, முன்னம் ஏ
மழை பொரு கண் இணை மடந்தைமார் ஒடும்
பழகிய எனினும், இப் பாவை தோன்றல் ஆல்,
அழகு எனும் அவையும், ஓர் அழகு பெற்ற ஏ. - 1.10.34
598 - இராமபிரானும் சீதாதேவியும் ஒருவரையொருவர் கண்டுகொள்ளல்
எண் அரும் நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண் ஒடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள். - 1.10.35
599 - இருவரும் மிக்க காதல் கொள்ளல் (599-602)
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை,
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன,
வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்,
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்த ஏ. - 1.10.36
600 - பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தல் ஆல்,
வரி சிலை அண்ணலும் வாள் கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார். - 1.10.37
601 - மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும்,
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்,
கரும் கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால், பேசல் வேண்டும் ஓ. - 1.10.38
602 - நின்றவர் நடத்தல்
அந்தம் இல் நோக்கு இமை அணை கிலாமை ஆல்,
பைசுமை தொடி, ஓவியப் பாவை போன்றனள்,
சிந்தையும் நிறையும் மெய் நலனும் பின் செல,
மைந்தனும் முனியொடு மறையப் போயினான். - 1.10.39
603 - காதல் விஞ்சிய சீதாபிராட்டியின் நிலை (603-607)
பிறை எனும் நுதலவள் பெண்மை என்படும்?
நறை கமழ் அலங்கலான், நயன கோசரம்
மறைதலும், மனம் எனும் மத்த யானையின்
நிறை எனும் அங்குசம், நிமிர்ந்து போயதே . - 1.10.40
604 - மால் உற வருதலும், மனமும் மெய்யும் தன்
நூல் உறு மருங்குல்போல் நுடங்குவாள், நெடும்
கால் உறு கண் வழிப் புகுந்த காதல் நோய்,
பால் உறு பிரை எனப், பரந்தது எங்குமே. - 1.10.41
605 - நோம் உறு நோய் நிலை நுவலகிற்றிலள்,
ஊமரின் மனம் அத்து இடை உன்னி விம்முவாள்;
காமனும் ஒரு சரம் கருத்தில் எய்தனன்,
வேம் எரி அதன் இடை விறகு இட்டு என்ன ஏ; - 1.10.42
606 - நிழல் இடு குண்டலம் அதனில் நெய் விடா
அழல் இடா மிளிர்ந்திடும் அயில் கொள் கண்ணின் ஆள்,
சுழல் இடு கூந்தலும் துகிலும் சோர்தரத்
தழல் இடு வல்லியே போலச் சாம்பினாள். - 1.10.43
607 - தழங்கிய கலைகளும் நிறையும் சங்கமும்
மழுங்கிய உள்ளமும் அறிவும் மாமையும்
இழந்தவள், இமையவர் கடைய, யாவையும்
வழங்கிய கடல் என, வறியள் ஆயினாள். - 1.10.44
608 - சேடியர், பிராட்டியை அழைத்துச் செல்லுதல்
கலம் குழைந்து உக, நெடும் நாணும் கண் அற,
நலம் குழைதர, நகில் முகத்தின் ஏ வுண்டு,
மலங்கு உழை என, உயிர் வருந்திச் சோர்தரப்,
பொலம் குழை மயிலைக் கொண்டு அரிதின் போயினார். - 1.10.45
609 - சேடியர் சீதாபிராட்டியைச் சீதமலரமளிச் சேர்த்தல்
காதொடும் குழை பொரு கயல் கண் நங்கைதன்
பாதமும் கரங்களும் அனைய பல்லவம்
தாதொடும் குழையொடும் அடுத்த தண் பனிச்
சீத நுண் துளி மலர் அமளிச் சேர்த்தினார். - 1.10.46
610 - அமளி நண்ணிய ஆரணங்கின் நிலை (610-613)
நாள் அறா நறு மலர் அமளி நண்ணினாள்,
பூளை வீ புரை பனிப் புயற்குத் தேம்பிய
தாள தாமரை மலர் ததைந்த பொய்கையும்
வாள் அரா நுங்கிய மதியும் போல ஏ. - 1.10.47
611 - மலை மிசைத் தடம் அத்து உகு மழை கண் ஆலி போல்,
முலை முகட்டு உதிர்ந்திடும் நெடுங் கண் முத்து இனம்,
சிலை நுதல் கடை உறை செறித்த வேல் கணாள்
உலை முகப் புகை நிமிர் உயிர்ப்பின் மாய்ந்த ஏ. - 1.10.48
612 - கம்பம் இல் கொடு மனக் கான வேடன் கை
அம்பொடு சோர்வது ஓர் மயிலும் அன்னவள்,
வெம்பு உறு மனத்து அனல் வெதுப்ப, மெல் மலர்க்
கொம்பு என அமளியில் குழைந்து சாய்ந்தனள் . - 1.10.49
613 - சொரிந்தன நறுமலர் சுறுக்கொண்டு ஏறின,
பொரிந்தன கலவைகள் பொறியின் சிந்தின,
எரிந்தன கனல் சுட இழையில் கோத்த நூல்
பரிந்தன, கரிந்தன பல்லவங்கள் ஏ. - 1.10.50
614 - சீதாபிராட்டி நிலைகண்ட செவிலியர் முதலியோர் செயல்
தாதியர் செவிலியர் தாயர் தவ்வையர்
மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கினார்,
'யாது கொல் இது?' என எண்ணல் தேற்றலர்,
போது உடன் அயினி நீர் சுழற்றிப் போற்றினர் . - 1.10.51
615 - சீதாபிராட்டியின் மனநோய்
அருகில் நின்று அசைதரும் ஆலவட்டக் கால்,
எரியினை மிகுத்திட, இழையும் மாலையும்
கரிகுவ, தீகுவ, கனல்வ காட்டலால்,
உருகு பொன் பாவையும் ஒத்துத் தோன்றினாள். - 1.10.52
616 - காதல் நோயால் பிராட்டி புலம்பல் (616-622)
அல்லினை வகுத்தது ஓர் அலங்கல் காடு எனும்,
வல் எழு, அல்லவேல் மரகதப் பெருங்
கல் எனும் இரு புயம், கமலம் கண் எனும்,
வில் ஒடும் இழிந்தது ஓர் மேகம் என்னுமால். - 1.10.53
617 - நெருக்கி, உள் புகுந்து, அரு நிறையும் பெண்மையும்
உருக்கி, என் உயிர் ஒடும் உண்டு, போனவன்,
பொருப்பு உறழ் தோள் புணர் புண்ணியத்தது,
கருப்பு வில் அன்று; அவன் காமன் அல்லனே. - 1.10.54
618 - பெண்வழி நலனொடும், பிறந்த நாணொடும்,
எண் வழி உணர்வும் நான் எங்கும் காண்கிலேன்,
மண் வழி நடந்து, அடி வருந்தப் போனவன்,
கண் வழி நுழையும் ஓர் கள்வன் ஏ கொல் ஆம். - 1.10.55
619 - இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,
சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,
சுந்தர மணி வரைத் தோளுமே அல,
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டது ஏ. - 1.10.56
620 - படர்ந்து ஒளி பரந்து உயிர் பருகும் ஆகமும்,
தடம் தரு தாமரைத் தாளுமே அல,
கடம் தரு மா மதக் களி நல் யானை போல்
நடந்தது, கிடந்தது என் உள்ளம் நண்ணியே. - 1.10.57
621 - உரைசெயின் தேவர் தம் உலகு உளான் அலன்,
விரை செறி தாமரை இமைக்கும் மெய்ம்மையான்,
வரி சிலைத் தட கையன், மார்பின் நூலினன்,
அரசு இளம் குமரன் ஏ ஆகல் வேண்டும் ஆல். - 1.10.58
622 - பிறந்து உடை நலம் நிறை பிணித்த எந்திரம்
கறங்குபு திரியும் என் கன்னி மா மதில்,
எறிந்த அக் குமரனை, இன்னும் கண்ணில் கண்டு,
அறிந்து, உயிர் இழக்கவும் ஆகுமே கொல் ஆம். - 1.10.59
623 - பிராட்டி பின்னும் வேட்கை மிகுதியாற் பிதற்றல்
என்று இவை இனையன விளம்பும் எல்வையில்,
'நின்றனன் இவண்' எனும்,'நீங்கினான்' எனும்,
கன்றிய மனத்து உறு காம வேட்கையால்
ஒன்று அல, பல நினைந்து உருகும் காலையே. - 1.10.60
624 - சூரியன் அத்தமித்தல்
அன்ன மெல் நடை அவட்கு அமைந்த காமத் தீத்
தன்னையும் சுடுவது தரிக்கிலான் என,
நல் நெடும் கரங்களை நடுக்கி ஓடிப்போய்,
முன்னை வெங் கதிரவன் கடலில் மூழ்கினான். - 1.10.61
625 - அந்திமாலை வருணனை (625-626)
விரி மலர்த் தென்றல் ஆம் வீசு பாசமும்,
எரி நிறச் செக்கரும் இருளும் காட்டல் ஆல்,
அரியவட்கு, அனல் தரும் அந்திமாலை ஆம்
கரு நிறச் செம் மயிர் காலன், தோன்றினான். - 1.10.62
626 - மீது அறை பறவை ஆம் பறையும், கீழ் விளி
ஓதம் என் சிலம்பொடும், உதிரச் செக்கரும்
பாதக இருள் செய் கஞ்சுகமும் பற்றலால்,
சாதகர் என்னவும் தகைத்து அம் மாலை ஏ. - 1.10.63
627 - பிராட்டி வருந்திக் கூறல்
கயங்கள் என்னும் கனல் தோய்ந்து,
கடி நாள் மலரின் விடம் பூசி,
இயங்கு தென்றல், மன்மத வேள்
எய்த புண்ணின் இடை நுழைய,
உயங்கும் உணர்வும் நல் நலமும்
உருகிச் சோர்வாள், உயிர் உண்ண
வயங்கும் மாலை வான் நோக்கி ,
'இது ஓ கூற்றின் வடிவு' என்றாள். - 1.10.64
628 - அந்திமாலை வந்தமை
'கடலோ மழையோ முழு நீலக்
கல்லோ காயா நறும் போதோ
படர் பூ குவளை நறு மலரோ
நீல உற்பலமோ பானலோ,
இடர் சேர் மடவார் உயிர் உண்பது
யாது ஓ?' என்று தளர்வாள் முன்
அடல் சேர் அசுரர் நிறம் போலும்
அந்தி மாலை வந்தது ஏ. - 1.10.65
629 - மாலைப்பொழுது கண்டிரங்கல்
மை வான் நிறத்து மீன் எயிற்று
வாடை உயிர்ப்பின், வளர் செக்கர்ப்
பைவாய் அந்திப் பட அரவே!
என் நா வளைத்துப் பகைத்தி ஆல்;
எய்வான் ஒருவன் கை ஓயான்;
உயிரும் ஒன்று ஏ இனி இல்லை;
உய்வான் உற இப் பழி பூண
உன்னோடு எனக்குப் பகை உண்டு ஓ. - 1.10.66
630 - இருளைநோக்கிப் புலம்பல்
ஆலம் உலகில் பரந்ததுவோ;
ஆழி கிளர்ந்ததோ, அவர் தம்
நீல நிறத்தை எல்லோரும்
நினைக்க அதுவாய் நிரம்பியதோ,
காலன் நிறத்தை அஞ்சனம் அத்து இல்
கலந்து குழைத்துக் காயத்தின்
மேலும் நிலத்தும் மெழுகியதோ,
விளைக்கும் இருள் ஆய் விளைந்தது ஏ . - 1.10.67
631 - அன்றிற்பறவையை நோக்கி இரங்கியது
வெளி நின்றவர் ஓ போய் மறைந்தார்,
விலக்க ஒருவர் தமைக் காணேன்,
எளியள் பெண் என்று இரங்காதே,
எல்லி யாமத்து இருள் ஊடு ஏ
ஒளி அம்பு எய்யும் மன்மதனார்
உனக்கு இம் மாயம் உரைத்தார் ஓ,
அளியென் செய்த தீவினை ஏ
அன்றில் ஆகி வந்தாயோ. - 1.10.68
632 - சேடியர் உதவிபுரிதல்
ஆண்டு அங்கு அனையாள் இனைய நினைந்து
அழுங்கும் ஏல்வை, அகல் வானம்
தீண்ட நிமிர்ந்த பெரும் கோயில்,
சீத மணியின் வேதிகை வாய்
நீண்ட சோதி நெய் விளக்கம்
வெய்ய என்று, அங்கு அவை நீக்கித்,
தூண்டல் செய்யா மணி விளக்கின்
சுடர் ஆல் இரவைப் பகல் செய்தார். - 1.10.69
633 - சந்திரோதயம் (633-634)
பெரும் திண் நெடு மால், வரை நிறுவிப்
பிணித்த பாம்பின் மணி தாம்பின்
விரிந்த திவலை பொதிந்த மணி
விசும்பின் மீனின் மேல் விளங்க
அருந்த அமரர் கலக்கிய நாள்,
அமுதம் நிறைந்த பொன் கலசம்
இருந்தது, இடை வந்து எழுந்தது என
எழுந்தது ஆழி வெண் திங்கள். - 1.10.70
634 - வண்டாய் அயன் நால் மறை பாட,
மலர்ந்தது ஒரு தாமரைப் போது,
பண்டு ஆல் இலையின் மிசைக் கிடந்து
பாரும் நீரும் பசித்தான்போல்
உண்டான் உந்திக் கடல் பூத்தது,
ஓதக் கடலும் தான் வேறு ஓர்
வெண் தாமரையின் மலர் பூத்தது
ஒத்தது, ஆழி வெண் திங்கள். - 1.10.71
635 - நிலாக்கற்றை பரவுதல் (635-637)
புள்ளிக் குறி இட்டு என ஒண் மீன்
பூத்த வானம் பொலி கங்குல்
நள்ளில் செறிந்த இருள் பிழம்பை
நக்கி நிமிர்ந்த நிலா கற்றை,
கிள்ளைக் கிளவிக்கு என் ஆம் கொல்!
கீழ் பால் திசையின் மிசை வைத்த
வெள்ளிக் கும்பத்து இளம் கமுகின்
பாளை போன்று விரிந்து உளது ஆல். - 1.10.72
636 - வண்ண மாலைக் கை பரப்பி,
உலகை வளைந்த இருள் எல்லாம்
உண்ண எண்ணித், தண் மதியத்து
உதயத்து எழுந்த நிலாக் கற்றை,
விண்ணும் மண்ணும் திசை அனைத்தும்
விழுங்கிக் கொண்ட, விரி நல் நீர்ப்
பண்ணை வெண்ணெய்ச் சடையன் தன்
புகழ் போல், எங்கும் பரந்து உளது ஆல். - 1.10.73
637 - நீத்தம் அதனில் முளைத்து எழுந்த
நெடு வெண் திங்கள் எனும் தச்சன்,
மீத் தன் கரங்கள் அவை பரப்பி,
மிகு வெண் நிலவு ஆம் வெண் சுதையால்,
காத்த கண்ணன் மணி உந்திக்
கமல நாளம் அத்து இடைப் பண்டு
பூத்த அண்டம் பழையது எனப்,
புதுக்குவானும் போன்று உளது ஆல். - 1.10.74
638 - தாமரை குவிதலும் ஆம்பல் அலர்தலும்
விரை செய் கமலப் பெரும் போது
விரும்பிப் புகுந்த திரு இன் ஒடும்,
குரை செய் வண்டின் குழாம் இரியக்
கூம்பிச் சாம்பிக் குவிந்துளது ஆல்,
உரை செய் திகிரி தனை உருட்டி
ஒரு கோல் ஓச்சி உலகு ஆண்ட
அரசன் ஒதுங்கத் தலை எடுத்த
குறும்பு போன்றது அரக்கு ஆம்பல். - 1.10.75
639 - சந்திரோதயத்தைப் பழித்தல் (639-640)
நீங்கா மாயை அவர் தமக்கு
நிறமே தோற்றுப் புறமே போய்
ஏங்காக் கிடக்கும் எறிகடற்கும்
எனக்கும் கொடியை ஆனாய் ஏ,
ஓங்கா நின்ற இருளாய் வந்து
உலகை விழுங்கி, மேன் மேலும்
வீங்கா நின்ற கரு நெருப்பின்
இடையே எழுந்த வெள் நெருப்பே. - 1.10.76
640 - கொடியை அல்லை, நீ யாரையும் கொல்கிலாய்,
மடுவில் இன் அமுதம் அத்து ஒடும் வந்தனை,
பிடியின் மெல் நடைப் பெண்ணொடு, என்றல் எனைச்
சுடுதி ஓ, கடல் தோன்றிய திங்கள் ஏ. - 1.10.77
641 - காமவேதனை (641-644)
மீது மொய்த்து எழு வெண் நிலவின் கதிர்
மோது மத்திகை, மென் முலை மேல் பட,
ஓதிமப் பெடை வெம் கனல் உற்று என,
போது மொய்த்து அமளிப், புரண்டாள் அரோ. - 1.10.78
642 - நீக்கம் இன்றி நிமிர்ந்த நிலாக் கதிர்,
தாக்க வெந்து தளர்ந்து சரிந்தனள்;
சேக்கை ஆகி அலர்ந்த செம் தாமரை
பூக்கள் பட்டன, பூவையும் பட்டனள். - 1.10.79
643 - வாச மென் கலவை களி வாரி மேல்
பூசப் பூசப் புலர்ந்து புழுங்கினள்,
வீச வீச வெதும்பினள் மென் முலை,
ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம் கொல் ஓ! - 1.10.80
644 - தாயரின் பரி சேடியர், தாது உகு
வீ அரித் தளிர் மெல் அணை, மேனியில்
காய் எரிக் கரியக் கரியக் கொணர்ந்து,
ஆயிரத்தின் இரட்டி அடுக்கினார். - 1.10.81
645 - கவிக்கூற்று
கன்னி நல் நகரில், கமழ் சேக்கை உள்,
அன்னம் இன்னணம் ஆயினள், ஆயவள்
மின்னின் மின்னிய மேனி கண்டான், எனச்
சொன்ன அண்ணலுக்கு உற்றது சொல்லுவாம் . - 1.10.82
646 - மூவரும் சனகன் எதிர்கொளச்சென்று தங்குதல்
ஏகி மன்னனைக் கண்டு எதிர்கொண்டு, அவன்
ஓகையோடும் இனிது கொண்டு உய்த்திடப்,
போக பூமியில் பொன் நகர் அன்னது ஓர்
மாக மாடத்து, அனையவர் வைகினார். - 1.10.83
647 - சதானந்தமுனிவர் வருதல்
வைகும் அவ் வழி, மாதவம் யாவும் ஓர்
செய்கை கொண்டு நடந்தெனத், தீது அறு
மொய் கொள் வீரன் முளரி அம் தாளினால்
மெய் கொள் மங்கை அருள் முனி மேவினான். - 1.10.84
648 - வணங்கிய இராமனை வாழ்த்திச் சதானந்தமுனிவன் கோசிகன்பக்கம் சார்தல்
வந்து எதிர்ந்த முனிவனை, வள்ளலும்
சிந்தை ஆர வணங்கலும், சென்று எதிர்
அந்தம் இல் குணத்தான், நெடிது ஆசிகள்
தந்து, கோசிகன்தன் மருங்கு எய்தினான். - 1.10.85
649 - சதானந்தன் முகமன் கூறுதல்
கோதமன் தரு கோ முனி, கோசிக
மாதவன் தனை மா முகம் நோக்கி,'இப்
போது நீ இவண் போத இப் பூதலம்
ஏது செய்த தவம்' என்று இயம்பின் ஆன். - 1.10.86
650 - விசுவாமித்திரன் கூறுதல்
பூ தண் சேக்கைப் புனிதனையே பொரு
ஏய்ந்த, கேண்மைச் சதானந்தன் என்று உரை
வாய்ந்த மாதவன் மா முகம் நோக்கி நூல்
தோய்ந்த சிந்தைக் கவுசிகன் சொல்லுவான். - 1.10.87
651 - சதானந்தருக்கு இராமனது பெருமையைக் கௌசிகர் கூறுதல்
'வடித்த மாதவ! கேட்டி; இவ் வள்ளல் தான்,
இடித்த வெம் குரல் தாடகை யாக்கையும்,
அடுத்து என் வேள்வியும், நின் அன்னை சாபமும்
முடித்து, என் நெஞ்சத்து இடர் முடித்தான்' என்றான். - 1.10.88
652 - சதானந்தர் கோசிகனைப் பாராட்டுதல்
என்று கோசிகன் கூறிட, ஈறு இலா
வன் தபோதனன்,'மாதவ! நின் அருள்
இன்று தான் உளது ஏல், அரிது யாது இந்த
வென்றி வீரர்க்கு' எனவும் விளம்பி மேல். - 1.10.89
653 - சதானந்தர் இராமபிரானைநோக்கி விசுவாமித்திரர் வரலாறு கூறுதல்
எள் இல் பூவையும், இந்திர நீலமும்,
அள்ளல் வேலையும், அம்புத சாலமும்,
விள்ளும் வீ உடைப் பானலும் மேவும் மெய்
வள்ளல் தன்னை, மதி முகம் நோக்கியே. - 1.10.90
654 - விசுவாமித்திரன் வரலாறு (654-700)
அரசாளுகை
'நறு மலர்த் தொடை நாயக! நான் உனக்கு
அறிவுறுத்துவென், கேள், இவ் அரும் தவன்,
இறை எனப் புவிக்கு, ஈறு இல் பல் ஆண்டு எலாம்
முறையினில் புரந்தே, அருள் முற்றினான். - 1.10.91
655 - கோசிகன் வசிட்டன் உறைவிடத்தை அடைதல்
அரசின் வைகி அறனின் அமைந்துழி,
விரசு கான் இடைச் சென்றனன் வேட்டை மேல்
உரை செய் மாதவத்து ஓங்கு வசிட்டனாம்
பரசு வானவன்பால், அணைந்தான் அரோ. - 1.10.92
656 - வசிட்டன் ஆணைப்படி காமதேனு விருந்தளித்தல்
அருந்ததி கணவன், வேந்தற்கு
அரும் கடன் முறையின் ஆற்றி,
'இருந்து அருள் தருதி' என்ன,
இருந்துழி,'இனிது நிற்கு
விருந்து இனி அமைப்பென்' என்னாச்,
சுரபியை விளித்து,'நீயே
சுரந்து அருள் அமிர்தம்' என்ன,
அருள் முறை சுரந்தது அன்று ஏ. - 1.10.93
657 - காமதேனுவின் விருந்துபசாரத்தைக்
கோசிகராசன் சேனையோடும் பெறுதல்
'அறு சுவைத்து ஆய உண்டி,
அரச ! நின் அனிகம் அத்து ஓடும்
பெறுக' என அளித்து, வேந்தோடு
யாவரும் துய்த்த பின்னர்,
நறு மலர்த் தாரும் வாசக்
கலவையும் நல்கல் ஓடும்,
உறு துயர் தணிந்து, மன்னன்
உய்த்து உணர்ந்து உரைக்கல் உற்றான். - 1.10.94
658 - கோசிகன் சுரபியைத் தருக என, வசிட்டன் கூறுதல் (658-659)
'மாதவ ! எழுந்திலாய் நீ;
வயப் பெரும் படைகட்கு எல்லாம்,
கோது அறும் அமிர்தம், இக்கோ
உதவிய கொள்கை தன்னால்,
தீது அறு குணத்தால் மிக்க
செழும் மறை தெரிந்த நூலோர்,
'மேதகு பொருள்கள் யாவும்
வேந்தருக்கு' என் கை தன்னால். - 1.10.95
659 - 'நிற்கு இது தகுவது அன்று ஆல்,
நீடு அரும் சுரபி தன்னை
எற்கு அருள்' என்றலோடும்,
இயம்பலன் யாதும்; பின்னர்
'வற்கலை உடையென், யானோ
வழங்கலென்; வருவது ஆகில்
கொல் கொள் வேல் உழவ! நீயே
கொண்டு அகல்க' என்று கூற. - 1.10.96
660 - காமதேனுவைக் கோசிகன் கைப்பற்ற அது வசிட்டனை உசாவுதல்
'பணித்தது புரிவென்' என்னாப்,
பார்த்திபன் எழுந்து பொங்கிப்
பிணித்தனன் சுரபி தன்னைப்
பெயர்வுழிப், பிணியை வீட்டி,
'மணி தடம் தோளினாற்குக்
கொடுத்தி ஓ மறைகள் யாவும்
கணித்த எம் பெரும !' என்னக்
கலை மறை முனிவன் சொல்வான். - 1.10.97
661 - வசிட்டன் மொழிகேட்ட காமதேனு சினந்து மயிர் சிலிர்த்தல்
'கொடுத்தில் என் யானே மற்று அக்
குடைகெழு வேந்தன், தானே
பிடித்து அகல்வுற்றது' என்னப்
பெரும் சினம் கதுவும் நெஞ்சோடு
'இடித்து எழும் முரச வேந்தன்
சேனையை யானே இன்று
முடிக்குவென் காண்டி' என்னா,
மொய்ம் மயிர் சிலிர்த்தது அன்று ஏ. - 1.10.98
662 - கோசிகன் சேனை அழிதலும், கோசிகன் புதல்வர்கள் வெகுளுதலும்
பப்பரர் எயினர் சீனர்
சோனகர் முதல பல்லோர்,
கை படை அதனினோடும்
கபிலை மாட்டு உதித்து, வேந்தன்
துப்பு உடைச் சேனை யாவும்
தொலைவு உறத் துணித்தலோடும்,
வெப்பு உடைக் கொடிய மன்னன்
தனயர்கள் வெகுண்டு மிக்கார். - 1.10.99
663 - வசிட்டனை எதிர்த்த கோசிகன்புதல்வர் இறத்தல்
'சுரபியின் வலி இது அன்று, ஆல்;
சுருதி நூல் உணர வல்ல
வரமுனி வஞ்சம்' என்னா,
'மற்றவன் சிரத்தை இன்னே
அரிகுவம்' என்னப் பொங்கி
அடர்த்தனர், அடர, அன்னான்
எரி எழ விழித்தலோடும்,
இறந்தனர் குமரர் எல்லாம். - 1.10.100
664 - கோசிகன் அம்பெய்ய வசிட்டன் பிரமதண்டத்தை எதிருமாறு ஏவுதல்
ஐயிரு பதின்மர் மைந்தர் அவிந்தமை அரசன் காணா,
நெய் பொழி கனலில் பொங்கி, நெடுங் கொடித் தேர் கடாவிக்
கை தொடர் கணையினோடும் கார் முகம் வளைய வாங்கி,
எய்தனன்; முனியும், தன் கைத் தண்டினை'எதிர்க' என்றான். - 1.10.101
665 - கோசிகன் சிவபிரானைத் துதித்துப் படைபெறுதல்
கடவுளர் படைகள் ஈறாக்
கற்றன படைகள் யாவும்,
விடவிட, முனிவன் தண்டம்
விழுங்கி மேல் விளங்கல் காணா,
வட வரை வில்லி தன்னை
வணங்கினன் வழுத்தலோடும்,
அடல் உறு படை ஒன்று ஈயா
அன்னவன் அகன்றான் அன்றே. - 1.10.102
666 - கோசிகன் உருத்திரப்படையை ஏவ வசிட்டன் அதனை உண்டு விளங்குதல்
விட்டனன் படையை வேந்தன்,
விண்ணுளோர், உலகை எல்லாம்
சுட்டனன் என்ன அஞ்சித்
துளங்கினர்; முனியும் தோன்றிக்
கிட்டிய படையை உண்டு
கிளர்ந்தனன்; கிளரும் மேனி
முட்ட வெம் பொறிகள் சிந்தப்
பொரு படை முரண் அது இற்று ஏ. - 1.10.103
667 - பிரமதேசு பெறக் கோசிகன் தவமேற் செல்லுதல்
கண்டனன் அரசன், காணாக்
'கலை மறை முனிவர்க்கு அல்லால்
திண் திறல் வலியும் தேசும்
உள எனல் சீரிது அன்று ஆல் .
மண் தலம் முழுதும் காக்கும்
மொய்ம்பு ஒரு வலி அன்று' என்னா
ஒண் தவம் புரிய எண்ணி,
உம்பர் கோன் திசையை உற்றான். - 1.10.104
668 - கோசிகன் தவத்தைச் சிதைக்குமாறு இந்திரன் திலோத்தமையை ஏவுதல்
மாண்ட மா தவத்தோன் செய்த
வலன் ஐ ஏ மனத்தின் எண்ணிப்,
பூண்ட மா தவத்தன் ஆகி,
அரசர் கோன் பொலியும் நீர்மை
காண்டலும், அமரர் வேந்தன்,
துணுக்கு உறு கருத்தினோடும்
தூண்டினன், அரம்பைமாருள்
திலோத்தமை எனும் சொல் மானை. - 1.10.105
669 - கோசிகன் திலோத்தமையோடு கலவியின் மூழ்கிப் பின்பு வெறுப்புறுதல்
அன்னவன் மேனி காணா,
அனங்கவேள் சரங்கள் பாயத்
தன் உணர்வு அழிந்து,
காதல் சலதியின் அழுந்தி, வேந்தன்,
பன் அரும் பகல் தீர்வு உற்றுப்,
பரிணதர் தெரிந்த நூலின்
நல் நயம் உணர்ந்தோன் ஆகி,
நஞ்சு எனக் கனன்று நக்கான். - 1.10.106
670 - திலோத்தமையை விட்டுக் கோசிகன் தவம்புரியத் தென்றிசை சார்தல்
விண் முழுது ஆளி செய்த
வினை என வெகுண்டு, நீ போய்
மண் மகள் ஆதி என்று
மடவரல் தன்னை ஏவிக்,
கண் மலர் சிவப்ப உள்ளம்
கறுப்பு உறக் கடிதின் ஏகி,
எண்மரில் வலியன் ஆய
எமன் திசை தன்னை உற்றான். - 1.10.107
671 - திரிசங்கு உடலொடு துறக்கஞ்செல்ல அருளுமாறு
வேண்ட வசிட்டன் மறுத்துக் கூறல்
தென் திசை அதனை நண்ணிச்
செய்தவம் செய்யும் செவ்வி,
வன் திறல் அயோத்தி வாழும்
மன் திரிசங்கு என்பான்,
தன் துணைக் குருவை நண்ணித்,
'தனுவொடும் துறக்கம் எய்த
இன்று எனக்கு அருளுக' என்ன,
'யான் அறிந்திலன் அது' என்றான். - 1.10.108
672 - திரிசங்குவை வசிட்டன் சபித்தல்
'நினக்கு ஒலாது ஆகின், ஐய!
நீள் நிலத்து யாவர் ஏனும்
மனக்கு இனியாரை நாடி
வகுப்பல் யான் வேள்வி' என்னச்
சினக் கொடுந் திறலோய்! முன்னர்த்
தேசிகன் பிழைத்து வேறு ஓர்
நினக்கு இதன் நாடி நின்றாய்,
நீசன் ஆய் விடுதி' என்றான். - 1.10.109
673 - திரிசங்கு சண்டாளனாதல்
மலர் உளோன் மைந்தன், மைந்த!
வழங்கிய சாபம் தன்னால்,
அலரியோன் தானும் நாணும்
வடிவு இழந்து, அரசர் கோமான்
புலரி அம் கமலம் போலும்
பொலிவு ஒரீஇ வதனம், பூவில்
பலரும் ஆங்கு இகழ்தற்கு ஒத்த
படிவம் வந்து உற்றது அன்று ஏ. - 1.10.110
674 - திரிசங்கு யாவராலும் இகழப்படுதல்
காசொடு முடியும் பூணும்
கரியது ஆம் கனகம் போன்றும்,
தூசொடும் அணியும் முந்நூல்
தோல் தரும் தோற்றம் போன்றும்,
மாசொடு கருகி மேனி
வனப்பு அழிந்திட ஊர் வந்தான்,
'சீசி' என்று யாரும் எள்ளத்,
திகைப்பொடு பழுவம் சேர்ந்தான். - 1.10.111
675 - திரிசங்கு கோசிகன்பால் தன்செய்தி தெரிவித்தல்
கான் இடைச் சிறிது வைகல்
கழித்து ஒர் நாள், கௌசிகப்பேர்க்
கோன் இனிது உறையும் சோலை
குறுகினன், குறுக, அன்னான்,
'ஈனன் நீ யாவன்? என்னை
நேர்ந்தது? இவ் இடையின்' என்ன,
மேல் நிகழ் பொருள்கள் எல்லாம்
விளம்பினன் வணங்கி வேந்தன். - 1.10.112
676 - திரிசங்கு விரும்பியவாறு கோசிகன் இசைதலும் வசிட்டகுமாரர் மறுத்தலும்
'இற்று தோ' என நக்கு, அன்னான்,
'யான் இரு வேள்வி முற்றி
மற்று உலகு அளிப்பென்' என்னா,
மாதவர் தம்மைக் கூவச்,
சுற்று உறு முனிவர் யாரும்
தொக்கனர்; வசிட்டன் மைந்தர்,
'கற்றிலம், அரசன் வேள்வி
கனல் துறை புலையற்கு ஈவான்' - 1.10.113
677 - கோசிகன் வசிட்டன் மைந்தரைச் சபித்துவிட்டு வேள்வி தொடங்கல்
என்று உரைத்து,'யாங்கள் ஒல்லோம்'
என்றனர்; என்னப் பொங்கிப்
'புன் தொழில் கிராதர் ஆகிப்
போக' எனப் புகறல் ஓடு உம்,
அன்று அவர் எயினர் ஆகி,
அடவிகள் தோறும் சென்றார்,
நின்று வேள்வியையும் முற்றி ,
'நிராசனர் வருக' என்றான். - 1.10.114
678 - கோசிகன் திரிசங்குவைத் தன் தவமகிமையால் வானத்து ஏற்றுதல்
'அரசன், இப் புலையற்கு என்னே
அனல் துறை முற்றி, எம்மை
'விரசுக வல்லை' என்பான்,
'விழுமிது' என்று இகழ்ந்து நக்கார்;
புரைசை மா களிற்று வேந்தைப்
'போக நீ துறக்கம்: யானே
உரைசெய்தேன், தவத்தின்' என்ன
ஓங்கினன் விமானம் அத்து உம்பர். - 1.10.115
679 - தேவர்களால் தள்ளுண்ட திரிசங்குவைக்
கோசிகன் வானத்தில் நிற்குமாறு செய்தல்
ஆங்கு அவன் துறக்கம் எய்த, அமரர்கள் வெகுண்டு,'நீசன்
ஈங்கு வந்திடுவது என்னே? இரு நிலத்து இழிக' என்னத்,
தரங்கலில் வீழ்வான், மற்றுத்'தாபத சரணம்' என்ன,
ஓங்கினன்'நில் நில்' என்ன உரைத்து, உரும் ஒக்க நக்கான். - 1.10.116
680 - கோசிகன் வேறாக உலகம் முதலிய படைக்கத் தொடங்கல்
'பேணலாது இகழ்ந்த விண்ணோர்
பெரும் பதம் முதலா மற்றைச்
சேண் முழுது அமைப்பல்' என்னாச்
'செழும் கதிர் கோள் நாள் திங்கள்
மாண் ஒளி கெடாது, தெற்கு
வடக்கவாய் வருக' என்று
தாணுவோடு ஊர்வ எல்லாம்
சமைக்குவென் என்னும் வேலை. - 1.10.117
681 - தேவர்கள் கோசிகனைச் சாந்தப்படுத்தல்
நறை தரு உடைய கோனும்,
நால் முகம் கடவுள் தானும்,
கறை தரு களனும், மற்றைக்
கடவுளர் பிறரும் தொக்குப்,
'பொறுத்து அருள் முனிவ! நின்னைப்
புகல் புகுந்தவனைப் போற்றும்
அறம் திறன் நன்று, தாரா கணம் அத்து
ஒடும் அமைக அன்னான். - 1.10.118
682 - கோசிகன் மேற்றிசைசென்று தவமியற்றல்
'அரச மாதவன் நீ ஆதி:
ஐந்து நாள் தென்பால் வந்து உன்
புரை விளக்கிடுக' என்னாக்,
கடவுளர் போய பின்னர்,
நிரைதவன் விரைவின் ஏகி,
நெடும் கடற்கு இறைவன் வைகும்
உர இடம் அதனை நண்ணி
உறு தவம் உஞற்றும் காலை. - 1.10.119
683 - அம்பரீடன் நரமேதத்திற்குத் தக்க மைந்தனைத் தேடிச்செல்லல்
குதை வரி சிலை வாள் தானைக்
கோமகன் அம்பரீடன்,
சுதை தரு மொழியன், வையம் அத்து
உயிர்க்கு உயிர் ஆய தோன்றல்,
வதை புரி புருடமேதம்
வகுப்ப ஓர் மைந்தன் கொள்வான்
சிதைவு இலன் கனகம் தேர் கொண்டு
அடவிகள் துருவிச் சென்றான். - 1.10.120
684 - அம்பரீடற்கு ரிசீகன் மகற்கொடை நேர்தல்
நல் தவ ரிசிகன் வைகும்
நனை வரும் பழுவம் நண்ணிக்
கொற்றவன் வினவலோடும்,
இசைந்தனர், குமரர் தம்முள்,
பெற்றவள்,'இளவல் எற்கே'
என்றனள்;'பிதாமுன்' என்றான்:
மற்றைய மைந்தன் நக்கு,
மன்னவன் தன்னை நோக்கி. - 1.10.121
685 - அம்பரீடன் சுனச்சேபனைப் பெற்றுக்கொண்டு
செல்லுகையில் உச்சிப்போதாதல்
'கொடுத்து அருள் வெறுக்கை வேண்டிற்று,
ஒற்கம் ஆம் விழுமம் குன்ற
எடுத்து எனை வளர்த்த தாதைக்கு'
என்று அவன் தொழுது, வேந்தன்
தடுப்பு அரும் தேரின் ஏறித்
தடை இலர் படர்தலோடும்,
சுடர்க் கதிர்க் கடவுள் வானத்து
உச்சி அம் சூழல் புக்கான். - 1.10.122
686 - சுனச்சேபன் கோசிகனைக்கண்டு வணங்குதல்
அ வயின் இழிந்து வேந்தன்
அரும் கடன் முறையின் ஆற்றச்,
செவ்விய குரிசில் தானும்,
சென்றனன் நியமம் செய்வான்,
அவ்வியம் அவித்த சிந்தை
முனிவனை ஆண்டுக் காணாக்,
கவ்வை இன் ஓடும், பாத
கமலம் அது உச்சி சேர்த்தான். - 1.10.123
687 - சுனச்சேபன் தன்குறையைக் கோசிகனிடம் கூறல்
விறப்பொடு வணக்கம் செய்த
விடலையை இனிது நோக்கிச்
சிறப்பு உடை முனிவன்,'என்னே
தெருமரல்? செப்புக' என்ன,
'அறம் பொருள் உணர்ந்தோய்! என்றன்
அன்னையும் தாதை தானும்
உறப் பொருள் கொண்டு, வேந்தற்கு
உதவினர்' என்றான் உற்றோன். - 1.10.124
688 - கோசிகன் சுனச்சேபனுக்குப் பிரதியாகத்
தன்மக்களில் ஒருவனைச் செல்லுமாறு கூறல்
மைத்துனனோடு முன்னோள் வழங்கிய முறைமை கேளாத்
'தத்துறல் ஒழி நீ, யானே தடுப்பென் நின் உயிரை' என்று,
புத்திரர் தம்மை நோக்கிப்'போக வேந்தோடும்' என்னா
அ தகு முனிவன் கூற, அவர் மறுத்து அகறல் காணா . - 1.10.125
689 - மறுத்த மைந்தர்களைக் கோசிகன் சபித்தல்
எழும் கதிரவனும் நாணச் சிவந்தனன் இரு கண்; நெஞ்சம்
புழுங்கினன், வடவை தீய மயிர்ப் புறம் பொறியில் துள்ள,
'அழுங்கலில் சிந்தையீர் நீர் அடவிகள் தோறும் சென்றே,
ஒழுங்கு அறு புளிஞர் ஆகி உறு துயர் உறுக' என்றான். - 1.10.126
690 - சுனச்சேபனுக்குக் கோசிகன் இரண்டு மந்திரங்களை உபதேசித்தல்
மாமுனி வெகுளிதன்னால் மடிகலா மைந்தர் நால்வர்!
தாம் உறு சவரர் ஆகச் சபித்து எதிர்'சலித்த சிந்தை
ஏம் உறல் ஒழிக; இன்னே பெறுக' என இரண்டு விஞ்சை
கோ மருகனுக்கு நல்கிப் பின்னரும் குறிக்கல் உற்றான். - 1.10.127
691 - சுனச்சேபனுக்குக் கோசிகன் விடைகொடுத்தல்
அரசனோடு ஏகி, யூபம் அத்து
அணைக்குபு, இம் மறையை ஓதின்,
விரசுவர் விண் உளோரும்
விரிஞ்சனும் விடை வலோனும்;
உரை செறி வேள்வி முற்றும்;
உன் உயிர்க்கு ஈறு உண்டாகா
பிரசம் மென் தாராய்! என்னப்,
பழிச்சொடும் பெயர்ந்து போனான். - 1.10.128
692 - அம்பரீடன் வேள்வி முடிதலும் கோசிகமுனிவன் வடதிசை செல்லுதலும்
மறை முனி உரைத்த வண்ணம்,
மனத்து உற மைந்தன் ஆயச்,
சிறை உறு கலுழன் அன்னம்
சே முதல் பிறவும் ஊரும்
இறைவர் தொக்கு, அமரர் சூழ,
இளவல் தன் உயிரும் வேந்தன்
முறைதரு மகமும் காத்தார்,
வடதிசை முனியும் சென்றான் . - 1.10.129
693 - கோசிகன் தவத்தால் எல்லா உலகும் சலித்தல்
வடாதிசை முனியும் நண்ணி,
மலர் கரம் நாசி வைத்து, ஆங்கு
இடாவு பிங்கலையால் நைய,
இதயம் அத்து ஊடு எழுத்து ஒன்று எண்ணி,
விடாது பல் பருவம் நிற்ப,
மூலமா முகடு விண்டு,
தடாது இருள் படலை மூடச்
சலித்தது எத் தலமும் தாவி. - 1.10.130
694 - கோசிகன் தவக்கனலால் புகை விம்முதல் (694-695)
எயில் எரித்தவன் யானை உரித்த நாள்,
பயில் உறுத்து உரி போர்த்த நன் பண்பு எனப்,
புயல் விரித்து எழுந்தால் எனப், பூதலம்
குயில் உறுத்திக், கொழும் புகை விம்ம ஏ . - 1.10.131
695 - தமம் திரண்டு உலகு யாவையும் தாவுற,
நிமிர்ந்த வெம் கதிர் கற்றையும் நீங்குறக்,
கமந்த மாதிரக் காவலர் கண்ணொடும்
சுமந்த நாகமும், கண் சும்புளித்த வே. - 1.10.132
696 - கோசிகன் தவத்தால் உலகத்துத் தோன்றிய மாறுபாடு
திரிவ நிற்ப செகதலம் அத்து யாவை உம்
வெருவல் உற்றன, வெம் கதிர் மீண்டன,
கருவி உற்ற ககனம் எலாம் புகை
உருவி உற்றிட, உம்பர் துளங்கினார். - 1.10.133
697 - தேவர்கள் கோசிகனைச் சந்தித்தல்
புண்டரீகனும் புள் திருப் பாகனும்
குண்டை ஊர்தி குலிசியும் மற்று உள
அண்டர் தாமும் வந்து அவ் வயின் எய்தி, வேறு
எண் தபோதனன் தன்னை எதிர்ந்தனர். - 1.10.134
698 - தேவர்கள் கோசிகனை நீ பிரமவிருடியாவாய் எனல்
பாதி மா மதி சூடியும், பசுமை துழாய்
சோதியானும், அத் தூய் மலர் ஆளியும்,
'வேத பாரகர் வேறு இலர், நீ அலால்,
மா தபோதன! என்ன வழங்கினர். - 1.10.135
699 - தேவர்கள் தம்மிடஞ் சார்தல்
அன்ன வாசகம் கேட்டு உணர் அந்தணன்,
'சென்னி தாழ்த்து, இரு செம் கமலம் குவித்து,
உன்னும் நல் வினை உற்றது,' என்று ஓங்கினான்;
துன்னு தேவர், தம் சூழலுள் போயினார். - 1.10.136
700 - கோசிகன் வரலாற்றைச் சதானந்தர் முடித்தல்
'ஈது முன்னர் நிகழ்ந்தது; இவன் துணை
மா தவம் அத்து உயர் மாண்பு உடையார் இலை;
நீதி வித்தகன் தன் அருள் நேர்ந்தனிர்,
யாது உமக்கு அரிது?' என்றனன் ஈறு இலான். - 1.10.137
701 - சதானந்தர் குமாரர்களை வாழ்த்திச் செல்லல்
என்று கோதமன் காதலன் கூறிட,
வென்றி வீரர் வியப்பொடு உவந்து எழா,
ஒன்றும் மாதவன் தாள் தொழுது ஓங்கிய
பின்றை, ஏத்திப் பெயர்ந்தனன் தன்னிடம். - 1.10.138
702 - இராமன் சீதையை எண்ணியவண்ணமாயிருத்தல்
முனியும் தம்பியும் போய், முறையால் தமக்கு
இனிய பள்ளிகள் எய்தினர், பின், இருள்
கனியும் போல்பவன், கங்குலும் திங்களும்
தனியும் தானும் அத் தையலும் ஆயினான். - 1.10.139
703 - சீதையின் உருவெளிப்பாடுகண்டு இராமபிரான் தன்னுட்கூறுதல் (703-710)
விண்ணின் நீங்கிய மின் உரு, இ முறை
பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டே கொல்! ஓ,
எண்ணின் ஈது அலது ஒன்று அறியேன், இரு
கண்ணின் உள்ளும் கருத்தினும் காண்பன் ஆல் . - 1.10.140
704 - வள்ளச் சேக்கைக் கரியவன் வைகுறும்
வெள்ளப் பால் கடல் போல் மிளிர் கண்ணின் ஆள்,
அள்ளல் பூ மகள் ஆகுங் கொல் ஓ! எனது
உள்ளத் தாமரை உள் உறைகின்று ஆல். - 1.10.141
705 - அருள் இலாள் எனினும், மனத்து ஆசையால்,
வெருளும் நோய் விடக் கண்ணின் விழுங்கலால்,
தெருள் இலா உலகில் சென்று நின்று வாழ்
பொருள் எலாம், அவள் பொன் உரு ஆய ஏ. - 1.10.142
706 - பூண் உலாவிய பொன் கலசங்கள், என்
ஏண் இல் ஆகத்து எழுதல என்னினும்,
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி,
காணல் ஆவது ஒர் காலம், உண்டு ஆம் கொல் ஓ. - 1.10.143
707 - வண்ண மேகலைத் தேர் ஒன்று வாள் நெடுங்
கண் இரண்டு கதி முலை தாம் இரண்டு
உள் நிவந்த நகையும் என்று ஒன்று உண்டு ஆல்
எண்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டும் ஓ! - 1.10.144
708 - கன்னல் இன் கருப்புச் சிலையான், விரைப்
பொன்னை முன்னிய, பூ கணை மாரியால்
என்னை எய்து, தொலைக்கும் என்றால், இனி
வன்மை என்னும் இது, ஆர் இடை வைகும் ஏ? - 1.10.145
709 - கொள்ளை கொள்ளக் கொதித்து எழு பாற்கடல்
பள்ள வெள்ளம் எனப் படரும் நிலா,
உள்ள, உள்ள உயிரைத் துருவிட,
வெள்ளை வண்ண விடமும் உண்டாங் கொல் ஓ. - 1.10.146
710 - ஆகும் நல் வழி அல் வழி என் மனம்
ஆகுமோ, அதற்கு ஆகிய காரணம்,
பாகு போல் மொழிப் பசுமை தொடி, கன்னி ஏ
ஆகும், வேறு இதற்கு ஐயுறவு இல்லை ஏ. - 1.10.147
711 - சந்திரன் மறைதல் (711-712)
கழிந்த கங்குல் அரசன் கதிர்க் குடை
விழுந்தது என்னவும், மேல் திசையாள் சுடர்க்
கொழுந்து சேர் நுதல் கோது அறு சுட்டி போய்
அழிந்தது என்னவும், ஆழ்ந்தது திங்கள் ஏ. - 1.10.148
712 - வீசுகின்ற நிலாச் சுடர் வீந்தது ஆல்,
ஈசனாம் மதி ஏகவும், சோகம் அத்து ஆல்
பூசு வெண் கலவைப் புனை சாந்தினை,
ஆசை மாதர் அழித்தனர் என்னவே. - 1.10.149
713 - கதிரவன் தோன்றுதல்
ததையும் மலர்த் தார் அண்ணல் இவ் வண்ணம்
மயல் உழந்து தளரும் ஏல்வை,
சிதையும் மனத்து இடர் உடையச், செம் கமலம்
முகம் மலரச், செய்ய வெய்யோன்,
புதை இருளின் எழுகின்ற புகர்முக
யானையின் உரிவைப் போர்வை போர்த்த
உதயம் கிரி எனும் கடவுள் நுதல் கிழித்த
விழியே போல், உதயம் செய்தான். - 1.10.150
714 - வெயில் பரவுதல்
விசை ஆடல் பசும் புரவிக் குரம் மிதிப்ப,
உதய கிரி விரிந்த தூளி
பசை ஆக. மறையவர் கை நறை மலர் உம்
நிறை புனலும் பரந்து பாய,
அசையாத நெடு வரை இன் முகடுதொறும்
இளங்கதிர் சென்று அளைந்து வெய்யோன்,
திசை ஆளும் மதம் கரியைச் சிந்தூரம்
அப்பிய போல், சிவந்த மாது ஓ. - 1.10.151
715 - பொய்கைகளில் தாமரை மலர்தல்
பண்டு வரும் குறி பகர்ந்து, பாசறையில்
பொருள் வயினில் பிரிந்து போன
வண்டு தொடர் நறும் தெரியல் உயிர் அனைய
கொழுநர் வர, மணி தேரோடும்
கண்டு, மனம் களி சிறப்ப ஒளி சிறந்து
மெலிவு அகலும் கற்பினார் போல்,
புண்டரிகம் முகம் மலர, அகம் மலர்ந்து
பொலிந்தன, பூம் பொய்கை எல்லாம். - 1.10.152
716 - சூரியகிரணங்கள் விரிதல்
எண் அரிய மறையினொடு கின்னரர்கள்
இசை பாட, உலகம் ஏத்த,
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும்
கரம் குவிப்ப, வேலை என்னும்
மண்ணும் அணி முழவு அதிர, வான்அரங்கின்
நடம்புரி வாள், இரவி ஆன
கண் நுதல் வானவன், கனகச் சடை விரிந்தால்
என, விரிந்த கதிர்கள் எல்லாம். - 1.10.153
717 - இராமபிரான் பள்ளியெழுதல்
கொல் ஆழி நீத்து அங்கு ஓர் குனி வயிரச்
சிலை தட கை கொண்ட கொண்டல்,
எல் ஆழித் தேர் இரவி இளம் கரம் அத்து ஆல்
அடி வருடி அனந்தல் தீர்ப்ப,
அல் ஆழிக் கரை கண்டான்: ஆயிர வாய்
மணி விளக்கம் அழலும் சேக்கைத்
தொல் ஆழித் துயிலாதே, துயர் ஆழி
நெடும் கடல் உள் துயில் கின்றான் ஏ. - 1.10.154
718 - இராமன்முதலியோர் சனகனது வேள்விச்சாலை சார்தல்
ஊழி பெயர்ந்து எனக் கங்குல் ஒரு
வண்ணம் புடை பெயர, உறக்கம் நீத்த
சூழி யானையின் எழுந்து, தொல் நியமத்
துறை முடித்துச், சுருதி அன்ன
வாழி மாதவன் பணிந்து, மனக்கு இனிய
தம்பியொடும், வம்பின் மாலை
தாழும் மா மணி மௌலித் தார் சனகன்
பெருவேள்விச் சாலை சார்ந்தான். - 1.10.155
719 - சனகன் வீற்றிருத்தல்
முடி சனகர் பெருமானும் முறையாலே
மறை வேள்வி முற்றிச், சுற்றும்
இடிக் குரலின் முரசு இயம்ப, இந்திரன் போல்
சந்திரன் தோய் கோயில் எய்தி,
எடுத்த மணி மண்டபத்துள் எண் தவத்து
முனிவரொடும் இருந்தான்: பசுமை தார்
வடித்த குனி வரி சிலை கை மைந்தனும்
தம்பியும் மருங்கின் இருப்ப மாது ஓ. - 1.10.156
720 - இராமலக்குமணர்களை யாவரென்று
சனகன் வினவ முனிவன் கூறுதல்
இருந்த குலக் குமரர்தமை இரு கண்ணும்
முகந்து அழகு பருக நோக்கி,
அருந்தவனை அடி வணங்கி,'யார் இவரை
உரைத்திடுமின்' அடிகள் என்ன,
'விருந்தினர்கள், நின்னுடைய வேள்வி காணிய
வந்தார், வில்லும் காண்பார்
பெரும் தகைமை தயரதன்தன் புதல்வர்' என
அவர் தகைமை பேசல் உற்றான். - 1.10.157
This file was last updated on 22 April 2012.
.